Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

யாழ் நகரின் பாரம்பரிய வர்த்தகம் வீழ்ச்சி அடைகிறதா?

யாழ் நகரின் பாரம்பரிய வர்த்தகம் வீழ்ச்சி அடைகிறதா?

– சுதாகரன் பேரம்பலம் –

எண்பதாம் ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் நகரமே கொழும்புக்கு அடுத்தபடியாக இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தக நகரம்.

பூகோள ரீதியில் வளம் குறைந்த யாழ் மாவடடம் சேவை துறையான சில்லறை மற்றும் மொத்த  வியாபாரத்தில் சிறந்து விளங்கிய காலம் அது. கொழும்பு நகரத்தின்  மொத்த வியாபார வலைப்பின்னலில் தொடர்பும் , இலங்கையின் ஏனைய சிறு நகரங்களில் ஆதிக்கம் செலுத்திய வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தவர்களாக இருந்தமையும் யாழ் நகரம் ஒரு வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையமாக இருந்தமைக்கான சில காரணங்கள்.

எப்படி புறக்கோடடையும், மெயின் வீதியும் வர்த்தக முக்கியத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, நுகேகொட, கடவத்தை,  கிரிபத்கொட போன்ற நகரங்கள் வர்த்தக மையங்களாக மாறியதோ , அதேபோல யாழ் நகரமும் வர்த்தக முக்கியத்துவத்தை இழக்கும் அபாயத்தில் இருக்கிறது. ஆனாலும் சரியான திடடமிடலும் முன்  ஏற்பாடுகளும் இந்த நிலைமையை மாற்றி அமைக்கலாம்.

புதிய முதலீடுகள் இல்லை

யாழ் நகரின் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் போருக்கு முன்னர் இருந்த நிலைமையிலேயே இன்றும் இருக்கிறது, கடந்த மூன்று தாசாப்தங்களாக நிலவிய நிச்சயமற்ற நிலைமை காலத்துக்கு தேவையான வடிவில் வர்த்தகம் இயற்கையாக நிகழும் மாறுதலை உள்வாங்க வில்லை என்றே கூற வேண்டும். தேவையான மூலதன மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் இலங்கையின் ஏனைய நகரங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே யாழ் நகர கடைகளில் உள்ளது. போதிய வருமானம் இன்மை, இதனால் புதிய முதலீடுகளை கொண்டு வருவதில் உள்ள தயக்கம், வர்த்தக நிலையத்துக்கு தேவையான தொழில் நுட்பங்கள் போன்றவற்றில் அதன் உரிமையாளர்களுக்கு  போதுமான அறிவின்மை என்பன அவ் வர்த்தகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தடையாகவே இருக்கிறது.

வேகமாக மாறும் நுகர்வு கலாச்சாரம்

தவிரவும் இன்றைய தசாப்தத்தின் நுகர்வு கலாச்சாரத்தில் ஏற்படட மாற்றத்தை புரிந்து கொண்டு அதற்கேற்றால் போல் வணிகத்தை மாற்றி அமைப்பதில் யாழ் வர்த்தகர்கள் நுகர்வோரின் எதிர்பார்ப்புக்கு மிகவும் தொலைவிலேயே இருக்கிறார்கள். நுகர்வோரின் தேவைகளும், விருப்பங்களும் அதிகரித்த வேகத்தில் மாறி  வருகிறது. நுகர்வோர் பெரும்பாலும் வசதியையே எதிர்பார்க்கிறார்கள். அவசரமான யுகத்தில் தமக்கு மிக அருகாமையில், அவர்களில் வசதிக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ற வகையில் தாமே தெரிவு செய்வதனையே (self selection) பெரிதும் விரும்புகின்றனர். இதன் காரணமாகவே இன்று நாம் நுகர்வு செய்யும் பெரும்பான்மையான பொருட்களில் மொத்த , சில்லறை வியாபாரிகள் நீக்கப்பட்டு சூப்பர் மார்க்கெட் , நவீன அங்காடிகள்  போன்ற விற்பனை முறைகள் பிரபல்யம் பெறுகின்றன.

பொருட்களை தனக்கு மிக அருகில் எதிர்பார்க்கும் நிலைமை காரணமாகவே மேற்குறிப்பிட்ட்து போல புறக்கோடடையும், மெயின் வீதியும் வர்த்தக முக்கியத்துவத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றது இரண்டாம் நிலை நகரங்கள் வர்த்தக முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த மாற்றங்கள் ஏலவே யாழ்ப்பாணத்திலும்  நடைபெறுகிறது. யாழ் நகருக்கு வருவதற்கான தேவை குறைந்து சுன்னாகம், நெல்லியடி போன்ற நகரங்கள் நுகர்வோனின் சகல பூர்த்தி செய்யும்தேவைகளையும் வகையில் வேகமாகவே வளர்ந்து வருகின்றது. பாரம்பரியமான யாழ் நகரின் வர்த்தகத்தை நுகர்வோனுக்கு மிக அருகில் செல்லும் சூப்பர் மார்க்கட்கள் ஆக்கிரமித்து கொள்கின்றன. யாழ் வர்த்தகர்களுக்கு செல்ல வேண்டிய வியாபாரமும் லாபமும் எவ்வளவு தூரம் சூப்பர் மார்க்கட்களால் உறிஞ்சப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு வெளியே கொண்டு செல்லப்படுவதற்கான காரணம் அவர்கள் யாழ்ப்பாண நுகர்வோனை அறிந்துகொண்ட அளவுக்கு யாழ் வர்த்தகர்கள் அறிந்து கொள்ளவில்லை என்பதே.

jaffna (1)

வர்த்தகத்தில் ஆர்வமில்லாத இளம் சந்ததி

யாழ் வர்த்தகர்களும் இந்த மாற்றங்கள் தெரிந்தாலும் , அவர்கள் புதிய முதலீடுகளோ மாற்றங்களோ செய்யாமல் இருப்பதற்கும், முடியுமானவரை இப்படியே நடத்திக்கொண்டு போவதற்கும் காரணங்கள் இருக்கிறது. ஒன்று அவர்கள் வயதாகி கொண்டு இருக்கிறார்கள் என்பதுடன்  முன்பு போல் ஆபத்துக்களை எதிர்கொண்டு உழைப்பதற்கான தேவை குறைந்து வருகிறது. இரண்டாவதாக அவர்களின் பின் அந்த வியாபாரத்தை கொண்டு நடத்துவதற்கு அவர்களில் பிள்ளைகள் யாருமே யாழில் இல்லை என்பது. பெரும்பான்மையான வர்த்தகர்களின் அடுத்த சந்ததி கொழும்பிலோ, வெளிநாட்டிலோ தான் இருக்கிறார்கள். அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் வியாபாரம் நடத்துவதற்கான திறமையோ விருப்பமோ இல்லாது இருப்பதும், யாழ் நகரத்து வர்த்தக உரிமையாளர்கள் வெளியேறும் திட்டத்துடனே (exit strategy) செயற்படுவது  வர்த்தக நடவடிக்கைகள் தொய்வடைய பிரதான காரணமாக உள்ளது.

அசாதாரண இலாபம் உழைத்த காலம் மாறிவிட்டது

இது தவிரவும் , முன்பு போல் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்தில் லாபம் உழைக்க முடிவதில்லை. இன்று நுகர்வோர் வர்த்தக குறியுடன் வரும் பொதிசெய்யப்படட (Branded & Packaged goods ) பொருட்களையே வாங்குகிறார்கள்.

இதில் விலை குறிக்கப்பட்டு இருப்பதுடன் வரையறுக்கப்படட லாபமே விற்பனையின் போது கிடைக்கும். முன்னர் போல , அல்லது யுத்த காலத்தில் தான் தோன்றி தனமாக விற்றதை போன்ற சூழல் இன்று இல்லை. இதற்கும் மேலாக நுகர்வோருக்கு தேவையான அளவுக்கும் மேலதிகமாக பொருள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம். பூரணமான  தகவல்கள் (perfect information) இருக்கும் இன்றைய சூழலில் வர்த்தக குறி இல்லாதா (generic goods ) பொருட்களின் மொத்த சில்லறை வியாபாரத்தில் இலாபம் ஒரு அளவு மேல் கிடைக்க வாய்ப்புக்கள் குறைவு.

என்ன செய்யலாம்?

யுத்தம் முடிந்து இன்றைய சூழலில் நடக்கும் மாற்றங்களை புரிந்து கொள்வதும், அது தொடர்பான விழிப்புணர்வுமே  தேவையான மாற்றத்துக்கான முதல் படி. தொடர்ந்து வர்த்தக சங்கங்களின் அனுசரணையுடன் புதிய மாற்றங்களை உள்வாங்குவதற்கான பயிற்சி பட்டறைகளும் உரிமையாளர்களுக்கான அறிவுஊடடலும் இடம்பெற  வேண்டும்.

வியாபாரத்தில் தேவையான மாற்றத்தை உட்படுத்த கூடிய வாய்ப்பு இருந்தால் புதிய தொழில் நுட்ப முதலீடுகள் இடம்பெற வேண்டும். இளம் சந்ததியினரையும் வர்த்தகத்தில் உள்வாங்க வேண்டும். அவர்களில் புதிய ஆலோசணைகளுக்கும் இடமளிக்க வேண்டும். இன்றைய நுகர்வோரின் தேவைகளையும் விருப்பங்களையும் தீர்க்கும் வகையில் படிப்படியான மாற்றங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

சனத்தொகை பரம்பல் மாறிவருகிறது. மக்களின் போக்குவரத்து நடைமுறைகள் முன்பு போல் இல்லை. நகரத்துக்கு வர வேண்டிய தேவைகளும் குறைவடைகிறது. புதிய நகரமயமாக்கலுடன் புதிய வியாபார இடங்களும் உருவாக்கி கொண்டே வருகிறது.

நாம் இப்படித்தான் செய்தோம், செய்வோம் என்ற பிடிவாதங்களை தவிர்த்து ,  இந்த மாற்றங்களை புரிந்து கொள்ள தவறின் யாழ் நகரின் வர்த்தக வீதிகள் சோபை இழந்து நுகர்வோர் வராத வீதிகளாக மாற வாய்ப்புள்ளது என்பதும். அப்படி ஒரு மாற்றம் ஏலவே நடந்தது கொண்டு இருக்கிறது  என்பதும் மறுக்க முடியாத உண்மையே.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *