Search
Wednesday 2 December 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வடக்கின் பொருளாதார மத்திய நிலையம்: தமிழ் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு முதலமைச்சருக்கு எதிரான காய்நகர்த்தலா?

வடக்கின் பொருளாதார மத்திய நிலையம்: தமிழ் கூட்டமைப்பிற்குள் முரண்பாடு முதலமைச்சருக்கு எதிரான காய்நகர்த்தலா?

றெஜி-

வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. கடந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி புதிய நல்லாட்சி அரசாங்கத்திலும் இது தொடரவே செய்கின்றது. பொருத்து வீட்டுப் பிரச்சனை, பொருளாதார மத்திய நிலையம் என அவை நீண்டு கொண்டே செல்கின்றது. போரால் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கான அபிவிருத்தி என்பது தற்போதைய அப்பிரதேச வளங்களையும், தேவைகளையும் அடிப்படையாக கொண்டதாக அமைய வேண்டும். அதுவே மக்களுக்கு பயன்தரக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் அபிவிருத்தி என்ற போர்வையில் மாகாண மக்களின் விருப்பங்களையும், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் பெறாது திணிக்க முற்படக் கூடாது. அது நல்லாட்சிக்கு நல்லதும் அல்ல. ஆரம்பத்தில் வவுனியா பொருளாதார மத்திய நிலைய விவகாரம் கூட அவ்வாறே உருவானது. மத்திய அரசாங்கம் மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளால் தெரிவு செய்த ஓமந்தை என்ற இடத்தை புறக்கணித்து நகரில் இருந்து 2 கிலோமீற்றர் தூரத்திற்குள் அமைந்துள்ள தாண்டிக்குளம் விவசாய பண்ணை, விவசாய கல்லூரி, விவசாய விதை உற்பத்தி நிலையம் என்பவற்றுடன் இணைந்த காணி தான் பொருத்தமானது என கூறி அதில் விடாப்பிடியாக இருந்தது. அந்தக் காணியில் இருந்து 3- 5 ஏக்கர் காணியை கோரியும் இருந்தது. இந்த விவகாரமே இன்று பூதாகரமாக மாறி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இரு அணிகளை ஏற்படுத்தியுள்ளது.

வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அமைச்சரும் தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட வேண்டும் என கூற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அணியும் அதனை வலுச் சேர்த்து மத்திய அரசாங்கத்துடன் கைகோர்த்து அபிவிருத்தியை தீர்மானிக்கும் பொறுப்பை மத்திய அரசின் அணுசரணையுடன் செய்ய முற்பட்டுள்ளது. அந்த மத்திய அமைச்சர் அவ்வாறு கோருவதற்கு வேறு பல காரணங்களும் இருக்கிறது. இது உசிதமானது இல்லை. ஏனெனில் மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புக்கள் மட்டுமன்றி வடபகுதி விவசாய அமைப்புக்கள் கூட தாண்டிக்குளத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்கள் அனைத்தும் எதிர்க்கும் நிலையில் இந்த 200 கோடி ரூபா அபிவிருத்தி யாருக்காக…? விவசாய மக்கள் விருப்பத்தை தமிழரசுக் கட்சி சார்ந்த அரசியல்வாதிகள் சிலர் குழப்பமுனைவது ஏன் என்ற பெரிய கேள்வி இந்த இடத்தில் எழுகிறது. இது பற்றி மக்களும் தெளிவு பட வேண்டும்.

இங்கு தற்போது அபிவிருத்தி, மக்களின் தேவை என்பதற்கு அப்பால் கட்சி அரசியல் புரையோடிப்போயுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், குருகுலராஜா மற்றும் பெரும்பான்மையான மாகாண சபை உறுப்பினர்களும் ஓமந்தையில் தான் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுவே விவசாயிகளின் விரும்பமும் கூட. ஆனால் மாவை தலைமையிலான தமிழரசுக் கட்சியின் அணி பராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிவமோகன், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் ரெலோ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் கூட்டிணைந்து தாண்டிக்குளத்தில் அமைக்க முற்படுகின்றது. இங்கு மக்களின் முதன்மைப்படுத்தும் அணி வெல்லக் கூடாது. அவர்களை தோற்கடித்து மத்திய அமைச்சர் விரும்பும் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என்ற தோரணையில் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதை அவதானிக்க முடிகிறது. அதற்காக இவர்கள் மத்திய அமைச்சர் ஓமந்தையை ஏற்றுக் கொள்ள மாட்டார். ஓமந்தையில் 2010 ஆம் ஆண்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட 18 ஏக்கர் காணிக்கு புகையிரதக் கடவையை கடந்து போகவேண்டும் என்ற சாட்டுப் போக்குகளைக் கூறுகிறார்கள். இது சின்ன வயதில் கேட்ட பாட்டி வடை சுட்ட கதையை ஞாபகப்படுத்திச் செல்கிறது. இந்த புதிய நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்த கூட்டமைப்பு ஒரு பொருளாதார மத்திய நிலையத்தை விரும்பும் இடத்தில் கொண்டு வர முடியவில்லை என கூறுவது வேடிக்கையானதும் கூட. ஆகவே, இங்கு தாண்டிக்குளம் என்ற முடிந்த முடிவில் அந்த அணி செயற்படுகிறது. அவர்கள் முதலமைச்சருக்கு எதிராக செயற்படுவதாக நினைத்து விவசாயிகள் வயிற்றில் அடிக்க முனைகிறது என்றே கருதத் தோன்றுகின்றது.

உரிமைக்காக போராடிய இனம் இன்று ஒரு பொருளாதார மத்திய நிலையத்திற்காக இரண்டு பட்டு நிற்பது எமது மக்களின் எதிர்காலம் குறித்து சற்று சிந்திக்கவே தூண்டுகின்றது. குழிபறிக்கும் செயற்பாடுகளை விடுத்து அவர்கள் ஒன்றுபட வேண்டும். ஆனால் அது நடப்பதாக தெரியவில்லை. மாகாண சபை மற்றும் வன்னி மக்கள் பிரதிதிகள் மத்தியில் இதற்கு தீர்வை எட்ட முடியாத நிலையிலேயே இந்த விவகாரம் எதிர்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களின் கவனத்திற்கு சென்றது. ஆனால் அவர் கூட அதை உடனடியாக தீர்க்காது உட்கட்சி மோதலை மேலும் தூண்டிவிடும் வகையில் செயற்பட்டிருப்பது வேதனையளிக்கிளது.

தாண்டிக்குளம் பகுதியில் விவசாய கல்லூரி அமைந்துள்ளது. வடமாகாணத்திற்கான ஒரே ஒரு கல்லூரி இதுவே. இன்று அதனை விஸ்தரிக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறான சூழலில் அதன் முன்னால் அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது எவ்வகையில் பொருத்தமானது. கடந்த காலத்திலும் சரி, தற்போது சரி களனி போன்ற பல்கலைக்கழங்களில் தமிழ் மாணவர்களுக்கு நிகழும் சம்பவங்களும் அங்கு ஏற்பட்ட வன்முறைகளும் மீள நினைவுபடுத்தி பார்க்கப்பட வேண்டியவை. இந்த விவசாய கல்லூரி கூட கடந்த காலத்தில் பல போராட்டங்களுக்கு மத்தியிலேயே அமைக்கப்பட்டும் இருந்தது. இதற்கு பாதிப்பு வருவது என்பது விவசாயத்துறை சார்ந்த தமிழ்மாணவர்களுக்கு நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும். இதனாலேயே அந்த மாணவர்கள் தம்மை நிம்மதியாக படிக்க விடுமாறும் உருக்கமாக கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் வர வேண்டும் என பலரும் கோரும் நிலையில் தமிழ் அரசியல் தலைமைகளே அதனை பாதிக்க செய்வது எந்த வகையில் நியாயம். அவர்களுக்கு ஏன் இது புரியவில்லை.

காட்டிக் கொடுப்புக்களும், உடைவுகளுமே தமிழர் வாரலாற்றை முள்ளியவாய்கால் வரை கொண்டு சென்றது. இதை எவரும் மறந்து விடவில்லை. இந்த நிலையில் ஒரு பொருளாதார மத்திய நிலையத்திற்காக இந்த மோதல் என்பது சரியானதும் அல்ல. விவசாயிகள் நன்மை கருதி கொண்டு வரப்படும் ஒரு பொருளாதார மத்திய நிலையத்தைக் கூட விவசாயிகள் விருப்பபடி தீர்மானிக்க சில அரசியல்வாதிகள் மத்திய அரசுடன் இணைந்து தடையாக இருக்கிறார்கள் என்றால், எவ்வாறு நாம் நிரந்த தீர்வைப் பற்றி பேசுவது. தனிப்பட்ட கட்சி மோதல்கள், கருத்து வேறுபாடுகள் அரசியல்வாதிகளுக்கு இருக்கலாம். அது அவர்கள் சார்ந்த பிரச்சனை. ஆனால் அதை மக்கள் மீது எவ்வகையிலும் திணிக்க கூடாது. அது ஆரோக்கியமபனதும் அல்ல.

இன்று மத்திய அரசாங்கம் கூட இந்த திட்டம் வவுனியாவிற்கானது. பொருத்தமான இடத்தை நீங்களே தெரிவு செய்து தாருங்கள் என கூறி விட்டது. அப்படியாயின் விவசாயிகளுக்காக இந்த திட்டத்தை அமைக்க ஏன் இவ்வளவு முரண்பாடுகள். மத்திய அரசாங்கம் விட்டுக் கொடுத்தாலும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் விட்டுக் கொடுக்காத நிலை முதலமைச்சருக்கு எதிராக மேற்கொள்வதாக கருதி மேற்கொள்ளும் இந்த நகர்வுகளால் ஜெயிக்கப் போது முதலமைச்சரே. அதற்கு காரணமும் உண்டு. பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் விவசாயிகள், நிபுணர்குழு ஆகியோரின் விருப்பம் போல் முதலமைச்சர் அமைத்தால் அவர் தூரநோக்கு அடிப்படையில் மேற்கொண்ட திட்டமிடலுக்கு கிடைத்த வெற்றியாகவே அது அமையும். விவசாயிகள் மத்தியில் அவருக்கான வரவேற்பு கூட அதிகரிக்கும். ஆனால் அதை தடுத்து குழப்பி தாண்டிக்குளத்தில் அமைப்பதால் எதுவும் நடந்து விடப்போதில்லை.

அதிலும், முதலமைச்சர் விவசாயகள், நிபுணர்குழு, மக்கள் விருப்பப் படி ஓமந்தையில் அமைக்க முற்பட்டேன். ஆனால் அதை மத்திய அரசுடன் இணைந்து சிலர் குழப்பியுள்ளார்கள். நான் என்ன செய்வது என தெரிவிக்க வாய்ப்புள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தும். இந்த இடத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஒதுங்கியிருந்த முதலமைச்சர் ‘மக்களுக்காக மக்களுடன் நிற்கக் கூடியவர்களை நீங்கள் தெரிவு செய்யுங்கள்’ என்று மக்களுக்கு கூறியமை தான் ஞாபகத்திற்கு வருகிறது. யாழ் மாவட்டத்தில் சிறிதரன் எம்.பி தற்போதும் மக்கள் நலன்சார்ந்து சிந்தித்து ஓமந்தைக்காக குரல் கொடுத்து வருகிறார். அதற்காகவே அவர் அன்று அதிகூடிய வாக்குகளையும் பெற்றிருந்தார்.

வடக்கின் பல பகுதிகளிலும் விவசாயிகளே அதிகமாக வாழ்கிறார்கள். இந்த நிலையில் அவர்களின் விருப்பம், கோரிக்கை என்பவற்றை புறக்கணிப்பது வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். வடக்கில் தடம்பதித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி என்பவற்றுக்கு கூட வாய்பாகிவிடும். ஆகவே, முதலமைச்சருக்கு எதிரான குடும்பிடிச் சண்டையில் பாதிக்கப்படப் போவது அப்பாவி விவசாயிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்புமே என்பதே உண்மை. இதை புரிந்து உடனடியாக ஒன்றுபட்டு விவசாயிகளின் விருப்படி பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க கூட்டமைப்பின் தலைவர் நடவடிக்கை எடுப்பதே ஆரோக்கியமான சூழலை உருவாக்கும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *