Search
Friday 18 October 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தமிழ் வர்த்தகர்களை குறிவைத்து சுரண்டும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும்

தமிழ் வர்த்தகர்களை குறிவைத்து சுரண்டும் வங்கிகளும் நிதி நிறுவனங்களும்

– பேரம்பலம் சுதாகரன் –

யாழ்ப்பாணத்தில் பல சொத்துக்கள் வங்கிகளால் ஏலத்துக்கு விடப்படுகின்றன. தினமும் பத்திரிகைகளில் ஏல விற்பனை பற்றிய ஏராளமான அறிவித்தல்கள் வந்தாலும் இந்த சொத்துக்களை வங்கிகள் சொல்லும் விலைக்கு வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை என்பதே இன்றைய நிலைமை. சொத்துக்களை வைத்து பெறப்படும் கடன்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு யாழ்ப்பாணத்தில் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாகவே யாழில் சொத்துக்களின் சந்தை பெறுமதியும் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.

எனக்கு இந்தளவு சொத்துக்கள் இருக்கிறது என்று சொல்லிவந்த காலம் போய், எனக்கு இந்தளவு கடன் இருக்கிறது என்றே வர்த்தகர்கள் பேசிக்கொள்கிறார்கள். பெரும்பாலான யாழ் வர்த்தகர்கள் தாங்கள் அறியாமலே ஒரு கடன் பொறிக்குள் விழுந்து வெளிவர முடியாமல் இருப்பதுடன். அவர்களின் உழைப்பு வட்டி என்ற வகையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் உறிஞ்சப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு வெளியே  கடத்தப்படுகிறது என்பதே உண்மை.

வர்த்தகர்களை கடன் பொறியில் விழுத்துவதற்கு வங்கிகள் செய்யும் யுக்தி, கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் சந்தை பெறுமதியை முதலில் அதிகரித்து மதிப்பிடுவது. இதற்காகவே வங்கியால் நியமிக்கப்படும் உத்தியோகபூர்வமான மதிப்பீடு செய்பவர்கள் (property valuers) இருக்கிறார்கள். இவர்கள் வங்கியின் ஆதரவுடன் அதிகரித்த தொகைக்கு சொத்து ஒன்றை மதிப்பீடு செய்து கொடுப்பார்கள். மதிப்பீட்டு பெறுமதியின் அடிப்படையில் 70 தொடக்கம் 80 சதவீதமான தொகை வங்கியால் கடனாக கொடுக்க முடியும். தனது சொத்து வங்கியால் இவ்வளவு பெறுமதிக்கு மதிப்பிடப்பட்டு இருக்கிறது என்ற பெருமையில் வர்த்தகர்களும் ஏராளமான கடனை வாங்கி குவித்துவிட்டு தடுமாறும் நிலைமையே தற்போது குடா நாட்டில் நிலவுகிறது.

கன்னாதிட்டி வீதியில் உள்ள தனது நகை கடை, வங்கி ஒன்றால் மூன்று கோடி ரூபாவுக்கு மதிப்பிடப்படட பத்திரம் தன்னிடம் இருப்பதாக கூறும் ஒரு  வர்த்தகர், கடந்த ஒரு வருடமாகவே ஒன்றரை கோடி ரூபாவுக்காவது அதை விற்க எதிர்பார்ப்பதாகவும் ஆனாலும் அந்த விலைக்கு கூட விற்க முடியாது இருப்பதாகவும் கூறினார். இதுபோலவே தமது சொத்துக்களின் பெறுமதியை நம்பி வங்கிகளிடம் பெருமளவிலான கடனை பெற்ற வர்த்தகர்கள் பெருந்தொகையான வட்டி கட்டிக்கொண்டு இருப்பதாகவும் தமது கௌரவம் மற்றும் வியாபாரத்தின் விலாசம் கருதி வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.  வட்டி கடட முடியாமலும் ,தகுந்த விலைக்கு விற்க முடியாமலும் வங்குரோத்து அடைந்து கொண்டு இருக்கும் வர்த்தகர்களின் சொத்துக்கள் தான் வங்கியால் இப்போது ஏலத்தில் போடும் நிலைமைக்கு வந்திருக்கிறது.

loan burden

யாழ்பாணத்து வர்த்தகர்களையும்  மக்களையும், வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் கலாச்சாரத்துக்கு பழக்கி வைத்து இருக்கின்றன. நிதி சார்ந்த அறிவு குறைந்த வடபகுதி வர்த்தகர்கள், வங்கிகளினதும், நிதி நிறுவனங்களினதும் இலகுவான இலக்காக மாறி உள்ளன. இவர்களின் கடைகளுக்கு வங்கிகளின் முகவர்கள் தாங்களாகவே சென்று,அழகான சோடிக்கப்பட்ட வார்த்தைகளால் பேசி (இதற்கு தனியான பயிற்சி வழங்கப்படுகின்றது) அப்பாவி வர்த்தகர்களை தங்கள் பொறிக்குள் விழ வைக்கிறார்கள், இந்த வர்த்தக நிலையங்களின் தொடர்ச்சியான செயற்படும் தன்மையோ,இலாபம் ஈட்டும் தன்மையோ எதுவும் இங்கு கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் என்ற தகுதிக்காக மட்டும் அளவுக்கும் மீறி,கட்ட முடியாது என்று தெரிந்தும், கட்டிடத்தின் சந்தை பெறுமதியை அபரிமிதமாக மதீப்பீடு செய்து  கடன் வழங்கப்படுகின்றது.

அதிகமான போட்டித்தன்மை, வங்கி கிளைக்கு இலாபம் காட்டவேண்டிய நிர்ப்பந்தம், மாதாந்தம் அடைய வேண்டிய கடன் மற்றும் சேமிப்பு  இலக்கு, போட்டித்தன்மை கூடிய வங்கி துறையில் அடைய வேண்டிய புரமோசன்கள், சலுகைகள், அந்தஸ்துக்காக பெறவேண்டிய அவார்ட்கள் என்பன மனிதாபிமானத்தையும் மறந்து வங்கியாளர்கையும் இந்த பொறிக்கும் சிக்க வைத்திருக்கின்றது என்பதும், அதற்காக அவர்கள் இலகுவாக இலக்குகளையே தேடியிருக்கிறார்கள்  என்பதும் கவலையுடன் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களே.

வங்கிகளின் அடர்த்தி என்பது, ஒரு லட்சம் (100000) மக்களுக்கு எத்தனை வங்கிக்கிளைகள் இருக்கிறது என்பதாகும். 2009 இல் வடக்கில் ஒரு லட்சம் மக்களுக்கு 9.9 ஆக இருந்த வங்கிகளின் எண்ணிக்கை 2014 இல் 118% வளர்ந்து 21.6 ஆக அதிகரித்திருக்கின்றது. மிக முக்கியமாக குறிப்பிட்டு கூற வேண்டிய விடயம், ஒரு லட்சம் மக்களுக்கு, மேல் மாகாணத்தை விட அதிகளவிலான வங்கிகள் வட மாகணத்தில் இருக்கிறது என்பது. இத்தனை வங்கிகளும் மக்களுக்கு நிதிச்சேவை வழங்கி இலாபம் உழைப்பதற்கும்,உயர்ந்த கட்டடங்களும், ஆடம்பரமான, கவர்ச்சிகரமான காட்சி அறை  அமைப்புக்களை பேணுவதற்குமான பணம் எங்கிருந்து கிடைக்கின்றது என்பது கடன் சுமையுடன் திரியும் வர்த்தகர்களும், மக்களும் நன்றாகவே உணர்வார்கள்.

கடன் வாங்கி அவஸ்த்தைபடுவதற்று முன்னர், வியாபாரத்தை நடத்துவதற்கு இந்தக்  கடன் தேவையா ? என்னுடை வியாபாரம் , கட்டிடம் உண்மையாகவே பெறுமதி ஆனது தான? கடன் வாங்கி வட்டி காட்டும் அளவுக்கு போதுமான பண புரள்வு எனது வியாபாரத்தில் இருக்கிறதா என்பது போன்ற அடிப்படையான கேள்விகளை எமக்கே கேட்டுக்கொள்வது மூலமாக  தேவை இல்லாத கடன் பொறியில் வீழ்வதை வர்த்தகர்கள் தவிர்த்து கொள்ளலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *