Search
Sunday 29 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வளர்ச்சி அடையுமா இலங்கை பொருளாதாரம்?

வளர்ச்சி அடையுமா இலங்கை பொருளாதாரம்?

சுதாகரன் பேரம்பலம்

அரசாங்கம் படு வேகமான பொருளாதார மறுசீரமைப்புக்கு தயாராகிறது. இந்த வாரம் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த உலக இஸ்லாமிய பொருளாதார மகாநாட்டில் சிறப்பு உரை  ஆற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை இந்து சமுத்திரத்தில் ஒரு கேந்திர வர்த்தக நிலையமாக மீண்டும் மாற எத்தனிப்பதாகவும். அதற்கான பொருளாதார மறு  சீரமைப்புக்களில் முழு மூச்சுடன் ஈடு படுவதாகவும் கூறினார். மேலும் இலங்கையில் இருந்தான  ஏற்றுமதி  பொருட்களை பன்முகப்படுத்தும் திட்டம் , அதற்கு தேவையான உட்கட்டுமானத்தை கட்டி எழுப்பவேண்டிய தேவை  என்பது தொடர்பில் அரசாங்கத்திடம் வேலைத்திட்டம் இருப்பதாகவும் கூறினார்.

முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை 2030 ஆம் ஆண்டுக்குள், ஒரு உயர் வருவாய் பெறும் நாடாக  மாற வேண்டும் என்றும், பல்வேறு வெளிபுற, உட்புற காரணிகள் தடையாக இருந்தாலும் சமூக பொருளாதார வளர்ச்சியை  அடைவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கையுடன் கூடிய தொனியில் தெரிவித்தார்.

பொருளாதார கொள்கைகள் வகுப்பதில் தனது மாமனாரான ஜெ.ஆர் ஜெயவர்தனவை போலவே வல்லவரான ரணில் விக்கிரமசிங்க இந்த கருத்தை கூறுவதற்கு நிறையவே காரணங்கள் இருக்கிறது. இதனை காலமும் ஆட்சியை பிடிப்பதற்கு இலவு காத்த கிளி போல் காத்திருத்த ரணிலுக்கு, சரிவில் இருக்கும் பொருளாதாரத்தை கட்டி எழுப்புவது ஒன்றும் இலகுவான காரியமல்ல. அதனை அவசரமாக அடுத்த சில வருடங்களுக்கும் தூக்கி நிறுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு. அதற்காக ஏராளமான பொருளாதார மறு சீரமைப்பு நடவடிக்கைகள் தேவை என்பதுடன் அவற்றை பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலேயே செய்ய வேண்டியும் கட்டாயமும்  உள்ளது.

உலகில் எற்பட்டிருக்கும் எதிர்பாராத அரசியல் மற்றும் பொருளாதார காரணிகள் இலங்கை பொருளாதாரத்துக்கு சாதகமாக இல்லை.  ஐஸ்ஐஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான உலகலாவிய நாடுகளின் போராட்டம் , மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி அற்ற சூழல், தேயிலை ரப்பர் போன்ற பண்டங்களில் ஏற்பட்ட விலை வீழ்சசி, அரசியல் உள்நோக்கம் கொண்ட  ஐக்கிய அமெரிக்க வட்டி வீதத்தின் உயர்வு  சீன நாணயம் யுவான்  சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு பணம்பெறும் உரிமையில் (SDR) கூடுதலாக சேர்க்கப்பட்டமை, மிதமான உலக பொருளாதார வளர்ச்சியும் அதனால் ஏற்றுமதி பொருட்களுக்கான குறைந்த கேள்வி போன்ற  கட்டுப்படுத்த முடியாத வெளிபுற காரணிகள் ஏற்கனவே இலங்கைக்கு பாதிப்பை எற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

இது தவிரவும் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள கடனுக்கான மீழ் செலுத்துதல் மற்றும் வட்டி கொடுப்பனவு என்ற வகையில் அதிகப்படியான நாணயங்களின் வெளிப்பாச்சல், நிதி சந்தை ஏற்ற இறக்கம் மற்றும்  அந்நிய நாணயங்களின் குறைந்த உட்பாச்சல்  என்பன இலங்கை நாணயத்தின் மீது கடினமான அழுத்தத்தை பிரயோகிக்கும்  என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏற்கனவே பெறுமதி இறக்கம் அடைந்துள்ள நாண‌யத்தின் மீது மேலதிக தாக்கம் என்பது பொருளாதாரத்தையே நிலை குலைய வைக்கலாம் .

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில், 2030 ஆம் ஆண்டுக்குள் உயர் வருமானம் பெறும் நாடாக இலங்கையை மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இவ்வளவு காலமும் குறைந்த வருமானம் பெறும் நாடாக இலங்கை இருந்த போது ஏராளமான வெளிநாட்டு உதவிகளும் நன்கொடைகளும் கிடைத்தது.  அதனூடாக பாரிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை நடத்தவும் , வறிய மக்கள் பயன் பெறும் வகையில் நலத் திட்டங்களை நடைமுறை படுத்தவும் ஏராளமான பணம் வெளிநாடுகளில் இருந்து கிடைத்தது.  ஆனால் 2013ஆம் ஆண்டுக்கு பின் இலங்கையில் தலா வருமானம் 2000 டாலர்களை தாண்டியதால் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.  இதன் காரணமாக இதுவரை காலம் கிடைத்தது போல் நிதி இனி கிடைக்காது.  உலக நாடுகளின், நிதி நிறுவனங்களின் கவனம் பிற குறைந்த வருமானம் பெறும் ஆபிரிக்க நாடுகளின் மேல் திரும்பி இருக்கிறது.

அடுத்த 15 வருடங்களில் இலங்கை உயர் வருமான மட்டத்துக்குள் நகரா விட்டால் நடுத்தர வருமான பொறிக்குள் (Middle Income Trap)  இலங்கை சிக்கிவிடும். நடுத்தர வருமான பொறி என்பது ஒரு குறிப்பிட்ட வருமானத்தை  பெறக்கூடிய  நாடு, அடுத்த கட்டத்துக்கு நகராமல் , வருமானம் அதிகரிக்காமல், ஒரே மட்டத்தில் மாட்டி நிற்றல் ஆகும்.

நடுத்தர வருமான பொறியில் ஒரு நாடு சிக்கும் போது,  உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியின் போது அது தங்களின்  போட்டி தனமையை இழக்கும்.  உயர் மதிப்பு கூட்டப்பட்ட சந்தையில் பொருளாதார ரீதியாக மிகவும் வளர்ச்சியுற்ற நாடுகளுடன் போட்டி போட முடியாத நிலை எற்படும்.  முதலீடுகள் குறைவடையும், கைத்தொழில் சேவை துறைகளில்   மெதுவான வளர்ச்சி மட்டுமே இருக்கும், ஊதியங்கள் உயராது, மட்டுப்படுத்தப்பட்ட தொழில்துறையே காணப்படும்,  பன்முகத்தன்மையான தொழில் துறையோ சந்தை வாய்ப்புக்களோ கிடைக்காது. எனவே இந்த நடுத்தர வருமான பொறியில் இருந்து தப்பிக்கொள்ளவே இலங்கை நினைக்கிறது என்பதை பிரதமரின் பேச்சு காட்டி நிற்கிறது.

இலங்கை போதுமான வளர்ச்சி அபிவிருத்தியை அடைவதில் மற்றுமொரு சவால் குடியியல் ரீதியாக சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாரதூரமான மாற்றம் ஆகும். மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் சராசரி வயது அதிகரித்து வருவது பொருளாதார அடிப்படையில் சாதகமான நிலைமை இல்லை. எமது குடித்தன பரம்பல் அதிகளவான வயதானவர்களை கொண்டதாக  மாறி வருவ‌தால் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு, உற்பத்தி திறன் கூடிய‌ இளம் வயதினரது பங்களிப்பு குறைந்து பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை எற்படுத்த போகின்றது.

வயது பரம்பலின் மாற்றம் (1981-2041)

hh
1991 முதல் இலங்கையில்  குழந்தைகள் மற்றும் முதியவர்கள் விட உழைக்கும் வயதில்  குறிப்பிடத்தக்க  வேலைப்படை  இருந்தது. இது ஒரு சாதகமான சூழல் ஆகும். ஆனாலும் இந்த நிலைமை 2017 உடன் மாற்றம் அடைகிறது.  2017 முதல் முதியவர்கள்களின் எண்ணிக்கை அதிகரித்த வேகத்தில் கூட இருக்கிறது. 60 வயதிற்கும் கூடிய முதியோர்களின் பங்கு தற்போதைய  12.5 சதவீதத்தில் இருந்து 2021 இல்  16.7 சதவீதமாக அதிகரித்து  2041 ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் 60 வயதிற்கும் கூடிய  வயதான நபராக‌ இருப்பார், அதாவது சனத்தொகையில் 25% ஆனவர்கள் வயதானவர்களாக இருப்பர்.  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் வயது பரம்பலினால் எதிர்காலத்தில் பல்வேறு வகையான பிரச்சனையை  இலங்கை பொருளாதாரம் எதிர்நோக்கும். தொழிலாளர்களின் பற்றாக்குறை ஏற்படும், தங்கியிருத்தல் வீதம் அதிகரிக்கும், நாட்டின் உற்பத்தி திறன் குறையும், வயதானவர்கள் தொடர்பில் அரசின் செலவு அதிகரிக்கும். சேமிப்புக்கள் குறைந்து முதலீட்டுக்கு பணம் இல்லாத் சூழல்நிலை உருவாகும். அதிக வயதான சனத்தொகை உள்ள நாட்டினால் மற்றைய  நாடுகளை போல் இலகுவாக பொருளாதாரத்தினை நகர்த்த முடியாது. இதனால் தான் இளமையான வயதினரை கொண்ட பொருளாதாரத்தை குடியியல் வரப்பிரசாதம் (Demographic Bonus)   என்று அழைக்கிறார்கள். இலங்கை அப்படி ஒரு வரபிரசாதத்தினை ஏற்கனவே தவற விட்டுவிட்டது.

இதனால் தான் என்னவோ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இத்தனை  சவால்கள் இருந்தாலும் , 2016ம்   ஆண்டு இலங்கையின் வளர்ச்சியை 6.5% ஆக  தக்க வைப்பதிலும்  அதன் பின்னர் 8-9% ஆக பொருளதார வளர்ச்சியை உயர்த்தும் திட்டத்துடன் புதிய அரசாங்கம் பயணிக்க எத்தணிக்கிற‌து.  “இது ஒரு கடினமான பணியாகும், ஆனால் அது முடியாத காரியம் அல்ல. நாம் 2030 ஆம் ஆண்டு இலங்கை ஒரு உயர் வருமானம் உடைய நாடாக  மாற்றி அமைக்க வேண்டும்,  நம்முடைய எல்லா முயற்சியும் இந்த இலக்கினை அடைவதற்காக திரட்டப்பட வேண்டும் வேண்டும்” என்று வலியுறுத்தினார். பொறுத்து  இருந்து தான் பார்க்க வேண்டும் இத்தனை சவால்களையும் தாண்டி  இலங்கை பொருளாதாரம் வளர்ச்சி அடையுமா என்று.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *