Search
Tuesday 29 September 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வவுனியா புளியங்குளத்தில் வருமானத்தை அள்ளித் தரும் மல்லிகை செய்கை!

வவுனியா புளியங்குளத்தில்  வருமானத்தை அள்ளித் தரும் மல்லிகை செய்கை!

-கே.வாசு-

தமிழர் வாழ்வில் தனித்துவமான கலாசாரங்களும் பண்பாடுகளும் பல பின்பறறப்பட்டு வந்தன. நாகரிக வளர்ச்சி என்ற மோகத்தால் அவற்றில் பல இருந்த இடம்தெரியாது மறைந்தும் விட்டது. சில தட்டுதடுமாறி இன்றும் இருந்து வருகின்றது. அந்தவகையில் மல்லிகை பூ தமிழர் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மார் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் பூக்கள் நறுமணமுடையவை. பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும், கோயில்களில் பூசையிலும் பயன்படுகிறது. மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய இது பயன்படுகிறது. இது பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும்.

தமிழில் ‘மல்லி’ என்பதன் பொருள் பருத்ததுஇ உருண்டது மற்றும் தடித்தது. இதன் காரணமாக, இம்மலர் ‘மல்லிகை‘ எனப் பெயர் பெற்றிருக்கலாம். மதுரை மல்லிகை மிகவும் புகழ் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும். தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி மற்றும் இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை வரை கொண்டு செல்லப்படுகிறது. மதுரை நகரம் ‘மல்லிகை மாநகரம்’ என்றே அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பெண்களில் தலையில் காலையில் இருந்தே மல்லிகைப் பூ சூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆலயங்களின் முன்னாலும் மல்லிகைப் பூ விற்பனை கடைகள் இருக்கும். ஆனால் இலங்கையில் மல்லிகைப் பூவுக்கான மவுசு இருந்தாலும் அதன் உற்பத்தி என்பது குறைவாகவே உள்ளது. ஆனால் இலங்கையிலும் புகழ் பெற்ற மதுரை மல்லிகையை செய்கை பண்ணி பயன்படுத்த முடியும் என்பதுடன், ஏற்றுமதியும் செய்ய முடியும். அதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதே வவுனியாவில் தம்பா மாதிரிப் பண்ணை.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வவுனியா வடக்கு, புளியங்குளம் பகுதியில் இந்த மாதிரிப் பண்ணை அமைந்துள்ளது. யாழ் இந்திய துணைத் தூதரின் ஆதரவுடன் இம்மல்லிகைச் செடிகள் இந்தியாவின் மதுரையில் இருந்து கொண்டு வந்து நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. இப்பண்ணை அமைக்கப்பட்டு ஆறு மாதம் தான். ஆனால் தற்போது வவுனியாவில் மதுரைமல்லிகை என்ற பெயர் வர ஆரம்பித்துள்ளது.

Jasmin Vavuniya (5)

திருமண நிகழ்வுகள், பூப்பனித நிராட்டு விழா மற்றும் மக்களகரமான நிகழ்வுகளில் நறுமணம் மிக்க இந்த மல்லிகைப் பூ பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது 30,000 மல்லிகைச் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. நாள் ஒன்றுக்கு ஒரு கிலோ பூவினை தற்போது பெற முடிவதுடன் உள்ளூரில் ஒரு கிலோவினை மூவாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்ய முடிகிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் இதனை ஏற்றுமதி செய்ய முடிகின்றது. ஏற்றுமதி செய்கின்ற போது இன்னும் அதிகரித்த இலாபம் கிடைக்கின்றது. ஆனாலும் உள்ளூர் தேவைக்கே இது போதியதாக இல்லாமையால் ஏற்றுமதி தொடர்ச்சியாக செய்ய முடியவில்லை.

நாளாந்தம் இம் மல்லிகைப் பண்ணையில் ஐந்து பேர் வரையில் வேலை செய்தும் வருகின்றனர். இது தொடர்பில் அங்கு வேலை செய்யும் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் யுத்தத்தில் பாதிப்படைந்திருந்தோம். இடம்பெயர்ந்து சென்று தற்போது மீள்குடியேறி வேலை இல்லாத நிலையில் அலைந்து திரிந்த போது இந்த மல்லிகைப் பண்ணை வேலை வாய்ப்பை தந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இங்கு வந்து வேலை செய்கின்றோம். இதனால் எமக்கும் வருமானம் கிடைக்கின்றது. மல்லிகைப் பூவாலும் வருமானம் கிடைக்கின்றது. காலையில் வந்து பூக்களைப் பறித்து மாலை கட்டி கொடுப்போம். சிலர் பூவாகவும் கேட்பர், அப்படியும் கொடுப்போம். தற்போது பலர் மல்லிகைப் பூவை கேட்கின்ற போதும் போதியளவிலான பூ கிடைக்கில்லை. தற்போது ஆறு மாதம் தானே. இன்னும் கொஞ்ச நாளில் அதிக பூவைப் பெறலாம். இதைவிட சற்றுலா பயணிகள் கூட இந்த தோட்டத்தை வந்து பார்த்துவிட்டு செல்கின்றார்கள் என்றார்.

மல்லிகைப் பூவுக்கான கேள்வி தற்போது அதிகரித்தே வருகிறது. உவர் அற்ற மண் வகை காணப்படும் பகுதியில் இது செய்கை பண்ணக் கூடியது. நீர்த் தேவையும் அதிகமாக தேவையில்லை. வாரத்தில் இரண்டு, மூன்று தடவை நீர்விட்டால் போதுமானது. மாரி காலத்தை விட வெயில் காலங்களிலேயே அதிக பூக்களைப் பெற முடிகின்றது. இதனுடன் இணைந்ததாக தேனீ வளர்ப்பும் செய்கின்ற போது மகரந்தச் சேர்க்கை அதிகரித்து பூக்கும் அளவும் அதிகரிப்படும் அதேவேளை, சுவையான தேனையும் பெற முடியும். இதனால் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும். ஆனால் இவ்வாறான வருமானம் தரக் கூடிய தொழில்களில் ஈடுபடக் கூடிய வகையில் மக்களுக்கு வழிகாட்டல்கள் குறைவாகவே உள்ளது.

Jasmin Vavuniya (3)
 இந்நிலையில் இதன் உரிமையாளர் இவ்வாறு கூறுகின்றார். மனித வாழ்வு இயற்கையுடன் இணைந்தது. தமிழ் மக்களின் அடையாளமாக நறுமணம் மிக்க மல்லிக்கை பூக்களே விளங்கின. வீட்டுக்கு செல்லும் போது ஒரு முலம் மல்லிகையும் அல்வாவும் வாங்கிப் போவது இந்தியாவில் நடைமுறை. ஆனால் எமது நாட்டில் மல்லிகைச் செடியை காண்பதே அரிதாகவுள்ளது. இன்று விவசாயம், பயிர்ச்செய்கை முறைகள் இளைஞர்களிடம் இருந்து அருகி வருகின்றது. ஆனால் மல்லிகைத் தோட்டம் போன்ற பூந்தோட்டம் அமைக்க யாரும் பின்நிற்க மாட்டார்கள். மனதுக்கு இதமான தொழில் என்பதை விட வருமானத் தரக்கூடியது. ஆனால் பலருக்கும் இதன் செய்கை தொடர்பான அறிவு குறைவாக உள்ளது. எனக்கு கூட இந்திய துணைத்தூதர் மூலம் தான் இதற்குரிய ஆலோசனை கிடைத்தது. இப் பயிர் நடப்பட்டு 6 மாதத்திற்குள் நாள் ஒன்றுக்கு ஒரு கிலோ பூவை பெற முடிகிறது. இன்னும் ஒரு ஆறுமாதம் சென்றால் 50 கிலோவில் இருந்து 100 கிலோ வரை பெற முடியும். சரியாக பராமரித்தால் சிறந்த வருமானத்தைப் பெற முடியும். ஒரு வருடத்தில் இன்னும் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்கவும் முடியும். வருமானம் தரக்கூடிய இவ்வாறான பயிர்களை செய்ய பலரும் முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.
Jasmin Vavuniya (11)
 இன்று யுத்தத்தால் பாதிப்படைந்த பலர் வளம்மிக்க காணிகள் இருந்தும் தமது வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியாது தடுமாறி வருகின்றார்கள். வருமானம் தரக் கூடிய பயிர்செய்கை தெரியாது அலைக்கழிந்தும் வருகின்றார்கள். இந்நிலையில் வடக்கு விவசாய அமைச்சு மற்றும் பயிர் செய்கையுடன் தொடர்புடைய திணைக்களங்கள் இவ்வாறான பயிர் செய்கைக்கான பயிற்சிகளையும், ஊக்குவிப்புக்களையும் மக்களுக்கு வழங்குகின்ற போது இயற்கையை பாதிக்காது சிறந்த வருமானத்தைப் பெறக் கூடிய வழி ஏற்படுவதுடன் எமது கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும் என்பதே உண்மை.
IMG_4671

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *