செய்திகள்

பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ள 5 ஏக்கர் காணிக்கு பதிலாக 200 ஏக்கர் காணி வழங்கப்படும்! ப.சத்தியலிங்கம்

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவுள்ள 5 ஏக்கர் காணிக்கு பதிலாக விவசாய விரிவாக்கல் பிரிவுக்கு 200 ஏக்கர் காணி பரசன்குளத்தில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

பொருளாதார மத்திய நிலையம் வேறு மாவட்டத்திற்கு சென்று விடாமல் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்து வவுனியாவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் உப அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவது தொடர்பான வேறு வேறு கருத்துக்கள் வந்துகொண்டிருக்கின்றது. வடக்கு மாகாணம் என்பது ஓர் விவசாய மாகாணமாக இருப்பதனால் வட மாகாண விவசாயிகள் எல்லோரும் பயன்படும் வகையில் பொருளாதார மையம் தேவை என்பதனை நாம் ஜனாதிபதியை சந்தித்தபோது முன்வைத்திருந்தோம்.

அதன் பிரகாரம் 2016 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யும்போது அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் அந்த வேலைத்திட்டத்தை தொடங்குவதற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சருடன் சந்தித்தபோது மொத்தமாக 2000 மில்லியன் ரூபா இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு நாம் இடம்தெரிவு செய்யும்போது முதலாவதாக நாம் புளியங்குளம் அல்லது ஓமந்தை பகுதியில் அமைத்தால் வடக்கு மாகாண விவசாயிகள் எல்லோருக்கும் பொதுவான இடமாக அது அமையும் என தெரிவித்திருந்தோம்.

அது தென்பகுதியில் இருந்து வரும் விவசாயிகளுக்கு இலகுவாக இருக்கும் என்பதனால் இதனை அமைக்கலாம் என நான் கூறியிருந்தேன். இதன்பின்னர் மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் இதற்கான ஓர் இடமும் தெரிவு செய்யப்பட்டது. இந்த மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கடிதம் மூலம் கோரப்பட்டிருந்தது நகரில் இருந்து இரண்டு கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தினுள் மூன்று தொடக்கம் ஐந்து ஏக்கர் காணியை தெரிவு செய்யுமாறு. இதன் அடிப்படையில் புதிதாய அமைக்கப்பட்டுள்ள தனியார் பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் 5 ஏக்கர் காணியை எடுப்பதாக கலந்துரையாடப்பட்டது. இதற்கு நானும் வேறு சில மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். ஏனெனில் அது வளமான பூமி. வவுனியாவில் கிணற்று நீரை நம்பி வாழ்பவர்கள். ஆகவே இந்த வயல்களுக்கு மண்ணைப்போட்டு மூடினால் நிலத்தடி நீர் குறையலாம் என்ற காரணத்தால் இந்த இடத்தை விட்டு வேறு இடத்தை தெரிவு செய்யவேண்டும் என தெரிவித்தோம்.

எனவே எல்லோரும் வரக்கூடிய இடமாக இருக்கவேண்டுமானால் அது ஓமந்தை அல்லது புளியங்குளமாக இருக்கவேண்டும் என தெரிவித்திருந்தோம். அதன் பின்னர் காணி தெரிவு செய்யும் பொறுப்பை பிரதேச செயலாளருக்கு வழங்கியிருந்தார். இதன்பிரகாரம் அவர் அரசாங்க அதிபருக்கு இரண்டு காணிகளை முன்னிலைப்படுத்தியிருந்தார். அதில் ஒரு காணி ஓமந்தை மாணிக்கவளவில் உள்ள காணி மற்றையது விவசாய விரிவாக்கல் பிரிவுக்கு சொந்தமான தாண்டிக்குளம் முடக்கில் உள்ள பயிர் செய்யப்படாத மேட்டுக்காணியாகும்.

இந்த காணியை அரசாங்க அதிபரால் உரிய அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டபோது குறித்த அமைச்சர் தான் இரண்டு பிரதேசங்களையும் சென்று பார்வையிட்டதாகவும் ஓமந்தையில் உள்ள காணி விவசாயிகளுக்கு பாதகமாக உள்ளது என்பதனாலும் இதற்கு பொருத்தமற்ற காணி எனவும் தெரிவித்ததுடன் தாண்டிக்குளம் விவசாய விரிவாக்கல் பிரிவுக்குரிய காணியை ஒதுக்கி தருமாறு கோரியிருந்தனர்.

இது தொடர்பாக அரசாங்கஅதிபர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அத்துடன் மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. இதில் மக்கள் பிரதிநிதிகளையும் மாகாண விவசாய அமைச்சரையும் அழைத்ததாக கூறப்பட்டது. பொது அமைப்புகள் வர்த்தக சங்கங்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது முதலமைச்சரால் ஓமந்தை காணியே சிறந்தது என அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை அரசாங்க அதிபர் வாசித்திருந்தார். இதன்போது ஓமந்தை காணி இதற்கு பொறுத்தமானது என நாம் வலியுறுத்தியபோது வன்னி எம்பியும் அமைச்சருமான ரிசாட் பதியுர்தீன் குறித்த அமைச்சருடன் தான் கதைத்ததாகவும் அவர் ஓமந்தையில் அமைப்பதில் உள்ள சிக்கல் தொடர்பில் தெரிவித்ததாகவும் தாண்டிக்குளமே சிறந்தது என தெரிவித்தாகவும் அவ்வாறு அதனை வழங்காத பட்சத்தில் எமது மாவட்டத்திற்கு வந்த நிதி வேறு மாவட்டத்திற்கு சென்று விடும் எனவும் தெரிவித்தாக கூறினார்.

இதன் பின்னர் இது தொடர்பாக பல மணி நேர விவாதம் இடம்பெற்று இறுதியில் பொருளாதார மத்திய நிலையம் வவுனியாவில் எந்த பிரதசத்தில் அமைவது என்பது தொடர்பில் தீர்மானம் எடுத்து வவுனியாவை விட்டு வேறு மாவட்டத்திற்கு செல்லக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.
எனவே வவுனியாவை விட்டுவெளியில் போகாமல் இருக்கவேண்டுமாக இருந்தால் அந்த திட்டத்தை செயற்படுத்தும் அமைச்சு விரும்பும் தாண்டிக்குளம் காணியை வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.

இதேவேளை வவுனியா நகர அபிவிருத்திக்கு தேவையான நிலம் இங்கு இல்லாத காரணத்தினால் நாம் ஒரு காலத்தில் நகருக்குள் உள்ள காணிகளை எடுக்கவேண்டிய சந்தர்ப்பம் உள்ளமையினால் ஐந்து ஏக்கரை பொருளாதார அமையத்தை அமைப்பதற்கு எடுத்தாலும் அதற்கு மாற்றுக்காணியாக வவுனியா வடக்கில் உள்ள பரசன்குளத்தில் 200 ஏக்கர் காணியை விவசாய விரிவாக்கல் பிரிவுக்கு வழங்குவது என மாவட்ட அரசாங்கஅதிபரால் தெரிவிக்கப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஏனெனில் எமது மாவட்ட விவசாய மாவட்டமாக காணப்படுவதால் விவசாய விரிவாக்கம் அத்தியாவசியம் என்ற காரணத்தினால் அதற்கு 200 ஏக்கர் காணியை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவு தொடர்பாகவும் அரசாங்க அதிபர் முதலமைச்சருக்கு தெரிவித்திருந்தார். அத்துடன் எமது பிரதேசத்தில் விவசாயிகளை விட இடைத்தரகர்களே அதிக லாபம் பெறுவதை கருத்தில் கொண்டு இவ்வாறான திட்டம் எமது மாவட்டத்திற்கு அவசியமானதென்பதால் எங்கு அமையவேண்டும் என்பது பிரச்சனை அல்ல. நாங்கள் விரும்பியதும் ஓமந்தைதான்.

அண்மையில் வவுனியாவில் நடந்த எல்லை மீள் நிர்ணய கூட்டத்தில் ஓமந்தை பிரதேசத்தை உள்ளடக்கி ஓர் பிரதேச செயலகம் அமைக்கப்பட்டு அப்பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தேன். இவ்வாறான நிலையில் உண்மைத்தன்மையை விளங்காமல் சில ஊடகங்கள் தவறான கருத்தை முன்வைக்கின்றன.

குறிப்பாக கடந்த 10 ஆம் திகதி மின்னல் நிகழ்ச்சியில் ரங்கா முழுமையாக ஓர் விடயத்தை அறியாமல் சத்தியலிங்கம் விவசாய திணைக்களத்திற்கு உரிய காணியை ரிசாட் பதியுர்தீனுக்கு தருவதாக எழுத்து மூலம் வழங்கியுள்ளார் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தவறான கருத்தை உருவாக்க முனைந்துள்ளார்.

உண்மையில் இந்த திட்டத்திற்கும் ரிசாட் பதியுர்தீனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலேயே இக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். எனவே உரிய தகவல்கைள ஊடகங்கள் வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

N5