பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசு பின்னிற்கக்கூடாது: பொன்சேகா வலியுறுத்துகின்றார்
யுத்த குற்றச்சாட்டுக்களின் பொறுப்புக் கூறல் விடயத்தில் அரசாங்கம் பின்நிற்கக் கூடாது. இலங்கை இராணுவத்தை குற்றச்சாட்டுக்களில் இருந்து பாதுகாப்பது அவசியமென தெரிவிக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அடுத்த ஆறு மாத கால இடைவெளி இலங்கை அரசுக்குக் கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பம் எனவும் குறிப்பிட்டார்.
ஆறு மாத காலத்தின் பின்னர் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கை வெளிவருமிடத்து அதற்கு முன்னர் இராணுவம் சார்பில் விசாரணைக்கு ஒத்துழைப்பது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது;
கடந்த அரசாங்கம் யுத்தத்திற்குப் பின்னராக நடந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை உள்நாட்டில் செய்யாதிருந்தமையும் சர்வதேசம் அவ்வாறானதொரு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கக்கோரிய நிலைமையில் அதனை உதாசீனப்படுத்தியமையுமே இலங்கையின் கடந்த காலங்களில் இன ரீதியான மற்றும் சர்வதேச உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டது. இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சர்வதேசம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை அரசாங்கத்திற்கே உள்ளது. பலர் எம்மீது மனித உரிமை மீறல்கள் குற்றத்தினை சுமத்தியிருப்பது இராணுவத்திற்கு மட்டும் அல்ல முழு நாட்டவருக்குமே குறிப்பாக பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களுக்கும் இது அவமானத்தினை ஏற்படுத்தும் செயற்பாடாகும். எனவே அவ்வாறானதொரு நிலைமைக்கு நாட்டை கொண்டு சென்றது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.
எனவே இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் விடயத்தில் புதிய அரசாங்கம் நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இலங்கையில் என்ற அடிப்படைக்குள் மூவின மக்களையும் கொண்டு வர வேண்டும். அதற்கான செயற்பாடுகளில் பிரதானமானது சிங்களவர் மீது தமிழ் மக்கள் தற்போது கொண்டிருக்கும் தவறான நிலைப்பாட்டினை மாற்றியமைக்கும் பொறிமுறையினை முதலில் செய்ய வேண்டும். அவை உள்நாட்டிலேயே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மேலும் இலங்கை தொடர்பில் ஐ.நா. வின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டிருப்பது இலங்கையின் பொறுப்புக்கூறல் தன்மையினை மேலும் உறுதிப்படுத்துவதற்கான நல்லதொரு சந்தர்ப்பமாகும். கால அவகாசத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இலங்கை தொடர்பில் சர்வதேச தரப்பில் எடுத்துள்ள தவறான கருத்துக்களையும் சர்வதேச அழுத்தத்தினையும் முழுமையாக தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.