செய்திகள்

பொலன்நறுவையில் உடைக்கப்பட்டது பள்ளிவாசல் அல்ல

பொலன்னறுவையில் பொதுக்கட்டடமொன்றை இடித்து தரைமட்டமாக்கியமை கண்டிக்கத்தக்கது என தெரிவித்த மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பொலிஸாருக்கு கூட அந்த அதிகாரம் கிடையாது என தெரிவித்தார்.

பொலன்னறுவையில் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டதாக செய்திகள் பரவியுள்ள நிலையில், முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலன்னறுவையில் தகர்க்கப்பட்ட கட்டடம் பள்ளி­வாசல் அல்ல. அது ஆரம்பத்தில் பொது கட்டமாகவே ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டது. பின்னர் இதில் இஸ்லாமிய நிலையம் அமைக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டது, ஆனால் இதனை கட்டுவதற்கான அனுமதியை பிரதேச சபையிடம் அவர்கள் கோரியிருக்கவில்லை.

இந்நிலையில் இதனை பள்ளிவாசலாக கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  பிரதேச மக்களின் எதிர்ப்புகளுக்குப் பின்னர் இதனை பிரதேச சபையில் பதிவதற்கான நடவடிக்கை சம்மந்தப்பட்ட அரச சார்பற்ற நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அமைக்கப்பட்ட இந்த கட்டடம் பிரதேசவாசிகளால் அகற்றப்பட்டுள்ளது. முதலில் இது சட்டவிரோதமான கட்டடம் என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும். என்றாலும் இந்த கட்டடத்தை அகற்றுவதற்கு பொது மக்களுக்கோ பொலிஸாருக்கோ அனுமதி கிடையாது.

புதிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது என நாம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின்போதே தெரிவித்து வந்தோம். இந்நிலையில் தற்போது இவ்வாறு சட்டம் தனிநபர்களால் கையில் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்க முடியாது. அவ்வாறு அனுமதியளித்தால், இதனை நல்லாட்சிக்கான பண்பு எனக் கூற முடியாது. இவ்வாறான கட்டடத்தை முறைப்படி அகற்ற பிரதேச சபைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றார்.