செய்திகள்

பொலிஸார் சித்திரவதை செய்ததாக இறக்க முன்னர் இளைஞன் வாக்குமூலம்!

யாழ் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நகை திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நாகராசா அலெக்ஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனை கைது செய்து சென்ற வட்டுக்கோட்டை பொலிஸார் பல சித்திரவதைகளை பொலிஸ் நிலையத்தில் வைத்து செய்துள்ளதாக இளைஞன் உயிரிழக்க முன்னர் கூறியுள்ளததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“வட்டுக்கோட்டை பொலிஸார் களவு சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில் கொண்டு சென்று கட்டித் தூக்கி விட்டு அடித்தார்கள். தண்ணி போட்டுவிட்டு, முகத்திற்கு துணியை கட்டி விட்டு தண்ணீர் ஊற்றி ஊற்றி அடித்தார்கள். தொண்டையால் சாப்பாடு இறங்குதில்லை. கொஞ்சமாக தான் சாப்பிட முடிகிறது. சாப்பாட்டிற்கு மனமே இல்லாமல் உள்ளது. பின்னர் நிலத்தில் இருந்து இரண்டு முழம் உயரத்தில் தலைகீழாக கட்டித் தூக்கிவிட்டு, கையை பின்பக்கமாக கட்டிவிட்டு கேட்டு கேட்டு கொடூரமாக தாங்கினார்கள்” என்று அந்த இளைஞன் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

”நான் களவு எடுக்கவில்லை என்று கூறினேன். பின்னர் பெற்றோல் பையினுள் போட்டுவிட்டு தாக்கினார்கள். நான் மயங்கிவிட்டேன். இரண்டு கைகளும் தூக்க முடியாமல் உள்ளது. பொலிஸ் நிலையத்தில் முதல் இரண்டு நாட்களும் சாப்பாடு தரவில்லை. அவர்களது அறைக்குள் அழைத்துச் சென்று, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு போடக்கூடாது, யாருக்கும் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்கள். பின்னர் அடுத்த நாளும் பயமுறுத்தினார்கள். சாராயம் தந்து குடிக்குமாறு கூறினார்கள்” என்று தனது வாக்குமூலத்தை அவர் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-(3)