செய்திகள்

பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாண சபைக்கு வேண்டும்: கிழக்கு முதல்வர்

பொலிஸ் அதிகாரம்,காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் மாகாணசபைக்கு வழங்கப்படவேண்டும். இந்த அதிகாரங்கள் வழங்கப்படும்போதுதான் மாகாணசபையில் உள்ள முழு பிரச்சினைகளையும் நாங்களே தீர்த்தக்கொள்கின்றதாக அமையும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையினால் மட்டக்களப்பு மாநகரசபையில் நடாத்தப்பட்டுவரும் நடமாடும் சேவையின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய,

கிழக்கு மாகாணத்தில் மக்களின் பிரச்சினைகள்,தேவைகள் அதிகளவில் உள்ளபோதிலும் அரசியல் அதிகாரங்களைக்கொண்ட நாங்கள் எங்களால் முடியுமானவற்றை எந்தளவுசெய்கின்றோம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

மக்களின் பிரச்சினையை எங்களின் பிரச்சினையாக எந்த நிமிடத்தில் பார்க்கின்றோமோ,அந்த பிரச்சினையை விரைவாக தீர்த்துவைக்கும் உத்வேகம் எங்களுக்குள் எழும்.

கிழக்கு மாகாணசபையில் கிடைக்கும் ஒட்டுமொத்த ஒதுக்கீடுகளில் சம்பளங்களுக்காக 87வீதம் செலவிடப்படுகின்றது.ஏனைய 13 வீதத்திலேயே மாகாணசபையின் அபிவிருத்தி தொடர்பில் சிந்திக்கும் நிலையுள்ளது.அத்தோடு இந்த 87வீதமான பங்களிப்பு எமது மாகாணசபைக்கு எந்தளவுக்கு கிடைத்துள்ளது என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.இந்த சம்பளம் பெறும்போது அதன் பலாபலன்களை மக்களுக்கு கொண்டுசெல்லவேண்டிய தேவையிருக்கின்றது.

கிழக்கு மாகாணசபையின் அரசியல் அதிகாரத்தின் நன்மைகளை மக்கள் அடைவதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளவுள்ளோம்.

நாங்கள் மாகாணசபை என்று பெரிதாக கூறிக்கொண்டுள்ளபோதிலும் எங்களுக்கு எந்தளவு அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.13வது திருத்தச்சட்டம் என்று முழுமையாக அமுல்படுத்தப்படுகின்றதோ அன்றுதான் இந்த மாகாணசபை முழுமையான அதிகாரங்கள் கொண்ட மாகாணசபையாக மாற்றப்படும்.

எதிர்வரும் காலங்களில் 13வது அரசியல் அமைப்பு சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கான ஒவ்வொரு நடவடிக்கையினையும் நாங்கள் எடுக்கவுள்ளோம். பொலிஸ் அதிகாரம்,காணி அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் மாகாணசபைக்கு வழங்கப்படவேண்டும்.

இந்த அதிகாரங்கள் வழங்கப்படும்போது இந்த மாகாணசபையில் உள்ள முழு பிரச்சினைகளையும் நாங்களே தீர்த்தக்கொள்கின்றதாக இந்த மாகாணசபை அமையும்.

மாகாணசபைக்குள் கிடைக்கும் வருமானங்கள்,கிடைக்கும் நிதிகளை தாண்டி அபிவிருத்திக்காக நிதியை கொண்டுவரும் அதிகாரம் உள்ள மாகாணசபையாக மாறும்.13வது சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை உள்வாங்கிய மாகாணசபையாக மாற்ற போராடவேண்டிய பொறுப்பு இங்குள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கும் உள்ளது.

அதற்காக நாங்கள் குரல்கொடுத்துவருகின்றோம்.ஒரு நல்லாட்சி என்று கூறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலே இந்த நாட்டில் இருக்கின்ற இரண்டு மிகபெரிய கட்சிகள் இணைந்து ஓரு நல்ல அரசியல் கலாசாரத்தினை ஏற்படுத்தியுள்ள ஒரேயொரு காலகட்டம் இதுமட்டுமே.

எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் நடைபெற்ற அரசியல் காலங்களில் இவ்வாறான தீர்மானங்கள் கொண்டுவரும்போது எதிர்க்கட்சி எதிர்த்திருக்கலாம்.ஆனால் அந்த சூழ்நிலையினை தாண்டிய அரசியல்நிலை ஏற்பட்டுள்ளவேளையிலும் இந்த 13வது அரசியல் அமைப்பு சட்டத்தினை அமுல்படுத்தவில்லையென்றால் ஒரு காலத்திலும் இந்த அரசாங்கம் அதனை வழங்கப்போவதில்லை.அதனை வழங்கவேண்டிய கடப்பாடு ஜனாதிபதிக்கும் உண்டு,பிரதமருக்கும் உண்டு.ஆட்சியில் அவர்களை அமரவைத்ததில் அதிகளவு பங்களிப்பனை செய்துள்ளவர்கள் என்ற வகையில் அவர்களுக்கு அந்த கடப்பாடு உள்ளது.