செய்திகள்

போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த பாடசாலை அதிபர்களும் ஒத்துழைக்க வேண்டும்:கஜதீபன்

யாழ்.மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெறும் போதைப் பொருள் விற்பனையைத் தடுத்து நிறுத்த அனைத்துப் பாடசாலை அதிபர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனத் தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் இதனை வலியுறுத்தும் அறிவுறுத்தல் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக வடமாகாணக் கல்வியமைச்சினால் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டச் சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.இதில் கலந்து கொண்ட யாழ்.மாவட்ட உளசமூக பாதுகாப்பு உத்தியோகஸ்தர் கௌதமன் யாழ்.மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் மாணவர்களை இலக்கு வைத்துப் போதைப் பொருள் விற்பனை அதிகரித்துள்ளது.இத்தகு செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் தகுந்த ஒத்துழைப்புக்களைத் தருகின்ற அதேவேளை பாடசாலை அதிபர்களுடைய ஒத்துழைப்புப் போதாமையாகவுள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்தே வடமாகாணக் கல்வியமைச்சினூடாக அனைத்துப் பாடசாலை அதிபர்களுக்கும் போதைப் பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்திக் கடிதங்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக கஜதீபன் மேலும் தெரிவித்தார். யாழ்.நகர் நிருபர்-