செய்திகள்

போதைப் பொருள் கடத்தல்: இலங்கைத் தமிழர் உட்பட இருவருக்கு நாளை மரண தண்டனை

இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இரண்டு பேரும் மரண தண்டனை விதிக்கப்படும் தீவிற்கு நாளை புதன்கிழமையன்று கொண்டுசெல்லப்படுவார்கள் என பாலியிலிருக்கும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆண்ட்ரூ சான் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் ஆகிய இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டதும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

இந்த மரண தண்டனையை நிறுத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப் போவதாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
02
“நாளை மதியம் அவர்கள் அங்கே கொண்டுசெல்லப்படுவார்கள். எல்லாம் தயாராக இருக்கிறது. குற்றவாளிகளும் பாதுகாப்புப் படையினரும் இரண்டு விமானங்களில் ஏற்றிச் செல்லப்படுவார்கள்” என பாலி உயர் நீதிமன்றத்தின் தலைவரான மொமோக் பம்பாங் சமியர்சோ பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

சானும் சுகுமாரனும் தற்போது பாலியிலிருக்கும் கெரோபொகன் சிறையில் இருந்துவருகின்றனர். இவர்கள் ஜாவாவுக்கு அருகில் இருக்கும் நுஸகம்பகன் தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

அவர்களுடன் பாலி சிறையிலிருந்து மேலும் இருவர் கொண்டுசெல்லப்படுவார்கள் என அசோஸியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. 45 வயதாகும் நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர், ஸ்பெயினைச் சேர்ந்த 30 வயதுப் பெண்மணி ஒருவர் ஆகிய இரண்டு பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கிறது.

நைஜீரியா, பிரேஸில், ஃப்ரான்ஸ், கானா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆறு பேரோடு சேர்த்து இவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
03
தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதைத் தடுக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து ராஜதந்திர ரீதியாக முயற்சித்து வருகிறது.

2005ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலிருந்து ஹெராயினை கடந்த முயன்றதாக சான் மற்றும் சுகுமாரன் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் சிறையில் இருந்த காலகட்டத்தில் திருந்திவிட்டதாக இவர்களது உறவினர்கள் கூறுகின்றனர்.

இவர்களைக் காப்பாற்ற தொடர்ந்து சட்டரீதியாகப் போராடிவருவதாக இவர்களது வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இவர்களது கருணை மனுக்களை இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ நிராகரித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு மேலதிகமாக சட்ட ரீதியான வாய்ப்புகள் ஏதும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதத் துவக்கத்தில், தற்போது உயிரோடு இருக்கும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, சானையும் சுகுமாரனையும் விடுவிக்கும்படி கோரினர். இந்தோனேசியாவில் நான்கு ஆண்டுகளாக மரண தண்டனை இருந்த தடை 2013ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது.