போதைவஸ்து பாவித்த பாடசாலை மாணவர்கள் கைது
போதைவஸ்து பாவனையில் ஈடுபட்டிருந்த இருபாடசாலை மாணவர்கள் லுணுகலைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லுணுகலையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே நேற்றைய தினம் பாடசாலை வேளையில் போதைவஸ்து பாவனையில் ஈடுபட்டுள்ளனர். இவ்விரு மாணவர்கள் மீது சந்தேகங்கொண்ட ஆசிரியர் விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்தார்.
அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் மாணவர்களைக் கைது செய்து விசாரணைக்குட்படுத்தினர். அதன்போது போதைப் பொருட்களை லுணுகலை நகரில் அமைந்துள்ள கடையொன்றில் பணம் கொடுத்துப் பெற்றதாக தெரிவித்தனர். அதனையடுத்து குறித்த கடைக்கு சென்ற பொலிஸார் அக்கடையை உடனடியாக மூடியதுடன் அங்கிருந்த மூவரைக் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்தும் பொலிஸார் இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.