செய்திகள்

போரில் வெற்றிபெற்றுள்ள போதிலும் அமைதியை வெற்றிகொள்ளவில்லை: சந்திரிகா உரை

“போரில் வெற்றி பெற்ற போதும், அமைதியை இன்னமும் வெற்றி கொள்ளவில்லை. ஒரு மோதல் அல்லது போரின் முடிவு, அமைதியைக் கொண்டு வர வேண்டியது அவசியமில்லை. வெறுமனே போர் இல்லாத நிலைமையை அமைதி எனக் கொள்ள முடியாது. வெற்றியை விட அமைதி மிகவும் இன்றியமையாதது.  பல போர்களின் வெற்றி,  அமைதியைக் கட்டியெழுப்பும் நோக்கத்தைக் கொண்டதாக இருக்கவில்லை.

இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ள நிலையில் வேறு சில கட்சிகளும் அதற்குச் சார்பாகச் செயற்படும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டின் முக்கிய பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்திருக்கின்றார்.

000அதிகாரப் பகிர்வின் மூலமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு உண்மையான சமாதானத்தையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கான வழிமுறையை ஏற்படுத்தலாம் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

தந்தை செல்வாவின் 38 வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு தமிழரசுக்கட்சி நேற்று சனிக்கிழமை கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடத்திய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே சந்திரிகா குமாரதுங்க இதனைத் தெரிவித்தார். சந்திரிகா குமாரதுங்க தனது உரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“எனக்கு எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை சிறு வயது முதலே தெரியும். எனது தந்தையுடனும் தாயுடனும் பேசுவதற்காக வீட்டுக்கு வரும்போது அவரைச் சந்தித்திருக்கின்றேன். அதேபோல, டர்டர் நாகராஜனுடைய கடைசி மகள் என்னுடைய நண்பி. அவரைப் பார்க்க அவரது வீட்டுக்குப் போகும் போது, தந்தை செல்வநாயகத்தையும் அங்கும் சந்தித்திருக்கின்றேன். அவர் ஒரு நேர்மையான அரசியல்வாதி.

நாட்டின் தமிழ்த் தலைவர்கள் சுதந்திரம் அடைந்தது முதல் சுதந்திரமடைந்தது முதல் ஜனநாயக முறைப்படி தங்களுடைய உரிமைகளை நிலைநாட்டுவதற்காக பலகாலமாக உழைத்தனர். அதற்காகப் போரிட்டனர். முதலில் சம உரிமை கேட்டனர். அது கிடைக்காது போனபோது சமஷ்டியைக் கேட்டனர். அதற்கும் செவிமடுக்காது போனபோது தனிநாடு கேட்னர். தொடர்ச்சியாக இவற்றைப் புறக்கணித்தன் மூலமாகவே வன்துறை வெடித்தது.

தந்தை செல்வா சமாதானத்துக்காகச் செய்யக்கூடிய அனைத்தையும் செய்ததுடன் பல ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டார். சிங்கள தீவிரவாதக் குழுக்கள் சிறு குழுக்களாக இருந்த போதிலும், அரசியலில் அந்ததந்த காலங்களில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டு ஒப்பந்தங்களை செயற்படுத்த முடியாது தடுத்தன.

தற்போது முக்கிய மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இரு முக்கிய தேசியக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து அரசாங்கத்தை அமைத்திருக்கின்றன. அதனால், இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி இதுவரை அடைய முடியாதிருத்த அதிகாரப் பகிர்வின் மூலம் அனைவருக்கும் சம உரித்து சமவாய்ப்பை வழங்குவதற்கான ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலமாக இனநெருக்கடிக்குத தீர்வு காணப்பட வேண்டும். இதற்காக பல முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றோம்” எனவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.