செய்திகள்

போர்க்குற்றத்திற்கு தீர்வு காணுமாறு இலங்கையை வலியுறுத்தும் துணிச்சலை மோடி வெளிப்படுத்த வேண்டும்: கெலும் மெக்ரே தெரிவிப்பு

கொழும்பிற்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு காணுமாறு இலங்கை அரசாங்கத்தை முன்தள்ளுவதற்கான துணிச்சலையும் பற்றுறுதியையும் வெளிப்படுத்த வேண்டுமென பிரிட்டிஷ் எழுத்தாளரும் ஆவணப் படத்தயாரிப்பாளருமான கலும் மெக்ரேன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் நீதியான, இதய சுத்தியான, சுதந்திரமான சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டும். சர்வதேச விசாரணைகளே, ஆதரவானதாகவும் இலங்கை சமூகங்களின் நம்பிக்கையை கொண்டதாகவும் அமையுமென்று மெக்ரே, ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகைக்குக் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் சுட்டுக்கொள்ளப்படுவதற்கு முன்னர் நொறுக்குத்தீனி சாப்பிட்டுக் கொண்டிருப்பதை காண்பிக்கும் படத்தை மெக்ரே எடுத்திருந்தார். அந்தப் புகைப்படமானது போர்க்குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்த உதவியிருந்தது. இந்த விடயத்தில் மோடி தலையிடுவதற்கு தூண்டுதல் அளிக்க தான் விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

குற்றமுடையவர்களாக இருக்கும் ஆட்கள் மட்டுமே அந்தமாதிரியான விசாரணைகளுக்கு பயப்பட வேண்டும். அத்தகைய விசாரணைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் மூலம் அவர்கள் தங்களைத்தாமே அடையாளப்படுத்த முடியும் என்ற மெக்ரே மேலும் கூறியுள்ளார்.