செய்திகள்

போர்க்குற்ற விசாரணையில் ஐ.நா. தளர்வு காட்டக்கூடாது: வலியுறுத்துகின்றார் சுரேஷ்

இலங்கைமீதான ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணைகளில் எந்தத் தளர்வுகளையும் காட்டக்கூடாது என அமெரிக்காவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துமென அதன் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இரு நாள் பயணமாக இன்று திங்கட்கிழமை இலங்கை வரும் அமெரிக்காவின் தெற்கு, மத்திய கிழக்கு, ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசுவர்.

இதன்போது கூட்டமைப்பினர் அமெரிக்காவிடம் நான்கு முக்கிய விடயங்கள் குறித்து வலியுறுத்துவர். இவற்றில் முக்கியமாக இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளில் ஐ.நா. எந்தவிதமான தளர்வுகளையும் காட்டக்கூடாது என்பது முக்கிய இடம் பிடிக்கும்.

இது தவிர அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் விடயம், வலி. வடக்கு, சம்பூர் பகுதிகளில் மக்களின் மீள்குடியேற்றம் என்பவை தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை இலங்கை எடுக்க அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு இந்த சந்திப்பின்போது கூட்டமைப்பினர் நிஷாவிடம் வலியுறுத்துவர் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.