செய்திகள்

போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்க நிபுணர் இலங்கையில்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புஜ்வால்ட் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புஜ்வால்ட் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தப் பேச்சுக்களில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் மற்றும் இலங்கை  வெளிவிவகாரச் செயலர் சித்ராங்கனி வகீஸ்வரா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அமெரிக்க- இலங்கை   உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவே இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக, அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், போர்க்கால மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் தொடர்பாகவே முக்கியமாக ஆராயப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஒரு அங்கமான பூகோள குற்றவியல் பணியகம், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள் குறித்த விவகாரங்கள் குறித்து, அமெரிக்க இராஜாங்கச் செயலர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்குவதாகும்.

பாரிய கொடூரங்களுக்குப் பொறுப்புக்கூறுவதை அடிப்படையாகக் கொண்ட, அமெரிக்காவின் கொள்கைகளை வகுப்பதற்கு பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகமே உதவி வருகிறது.

முன்னர், தூதுவர் ஸ்டீபன் ராப் தலைமையில் இந்தப் பணியகம் செயற்பட்டது. தூதுவர் ஸ்டீபன் ராப் சிறிலங்காவுக்கும் பயணம் மேற்கொண்டு, போர்க்குற்றங்களுக்குப் பெபாறுப்புக்கூறுவதற்கான அவசியத்தை வலி்யுறுத்தியவராவார்.

அவர் அந்தப் பணியில் இருந்து விலகிய பின்னர், பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகம், சிறப்பு இணைப்பாளர் என்று புதிய பதவியின் கீழ், அதிபர் ஒபாமாவினால் கொண்டு வரப்பட்டது.

கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம், பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளராக, ரொட் எவ். புஜ்வாட் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர், அமெரிக்காவின் சட்டப் பணியகத்தின் சட்டத்தரணியாகப் பணியாற்றியவராவார்.

இவரே தற்போது சிறிலங்காவுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இவரது பயணம் தொடர்பாக முன்கூட்டியே அறிவிப்புகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

yu

n10