செய்திகள்

போர்க் குற்றம் தொடர்பில் யார் மீதும் விசாரணை நடத்தப்படாது: தேர்தல் விஞ்ஞாபனத்தில் மகிந்த

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்த எந்தவொரு இலங்கை குடிமகனையும், எந்தவொரு சர்வதேச நீதிமன்றத்துக்கோ அல்லது விசாரணைக்கோ உட்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் ஒன்றை, ஓராண்டுக்குள் நிறைவேற்ற தான் சித்தமாகவுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.

இலங்கையில் முழுமையான அரசியல் மறுசீரமைப்பு, புதிய அரசியல் கலாச்சாரம் ஆகியவற்றுடன் நாடு செழிப்பாக இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

00ஆனால் நாட்டில் தற்போதைய விவாதப் பொருளாகவுள்ள, ‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குதல்’ குறித்து அவரது தேர்தல் அறிக்கை வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை.

மாறாக நாட்டுக்கு புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாகும் போது, தேர்தல் நடைமுறைகள், ஜனாதிபதி பதவி, போன்ற பல விஷயங்கள் கவனத்தில் எடுக்கப்படும் என்று மேலோட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் இருந்து வரும் 1978 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் சாசனச் சட்ட அமைப்புக்கு மாறாக மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் ஒரு அரசியல் சாசனத்தை ஒராண்டு காலத்துக்குள் நிறைவேற்ற எண்ணம் உள்ளது என்பது மட்டுமே கூறப்பட்டுள்ளது.

அதிகாரப் பரவலாக்கம், நீடித்திருக்கும் இனப்பிரச்சினைக்கான நிரந்திரத் தீர்வு, சிறுபான்மை மக்களின் நலன்கள் போன்றவை குறித்து அவரது தேர்தல் அறிக்கை ஏதும் சொல்லவில்லை.

அண்டை நாடுகளுடன் உறவுகள் மேம்படுத்தப்படும் என்றும் அவரது தேர்தல் அறிக்கை கூறுகிறது.