செய்திகள்

போர்க் குற்ற விசாரணை தொடர்பில் இலங்கையுடன் இணைந்து செயற்பட முடியும்: மூன் நம்பிக்கை

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கு புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ள போதிலும், ஐ.நா. மேற்கொண்டுள்ள விசாரணைகளுடன் இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்படும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்திருக்கின்றார்.

போர்க் குற்ற விசாரணைகள் தொடர்பில் இலங்கை எவ்வாறு ஐ.நா.வுடன் இணைந்து செயற்பட முடியும் என்பதையிட்டு ஐ.நா. ஆராய்ந்து வருவதாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்ரெபன் டுஜாரிக் தெரிவித்தார்.

இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற அத்துமீறல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச தரத்திலான உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்தப்போவதாக புதிய அரசாங்கம் இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்ததது. இதற்காகத் தேவையேற்பட்டால் சர்வதேச நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் எனவும் இலங்கை அரசு தெரிவித்திருந்தது.

“இந்த அறிக்கைகளை நாம் பார்வையிட்டோம்” எனத் தெரிவித்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர், “ஐ.நா. மனித உரிமைகள் விசாரணைகளுடன் இலங்கை எவ்வாறு இணைந்து செயற்பட முடியும் என்பதையிட்டு நாம் ஆராய்ந்துவருகின்றோம். ஐ.நா. விசாரணையுடன் இலங்கை இணைந்து செயற்படுவதற்காக வாய்ப்புக்கள் இருப்பதாகவே நாம் நம்புகின்றோம்” எனவும் குறிப்பிட்டர்.