செய்திகள்

போர் முடிந்த பின்னரே போதைப் பொருள் பாவனை வடக்கிற்கு வந்தது: சி.வி.

“2009 மே மாதத்திற்கு முன்னதாக போதைப் பொருள் பாவனை சிறிதளவு கூட வடக்கில் இருக்கவில்லை. ஆகவே 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரே இந்த பழக்கம் அதிகரித்துள்ளது. அது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதைப் பொருளை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டம் அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபையினால் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுத் தேசிய சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அத்துடன் இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி,விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்ததாவது:

“2009 மே மாதத்திற்கு முன்னதாக போதைப் பொருள் பாவனை சிறிதளவு கூட வடக்கில் இருக்கவில்லை. ஆகவே 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரே இந்த பழக்கம் அதிகரித்துள்ளது. அது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

போதைப்பொருள் சற்றும் இருக்காத மாகாணத்திற்கு எவ்வாறு இந்த போதைப் பொருட்கள் வந்துள்ளன என்பதை ஆராய்ந்து அதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தீர்மானிக்க வேண்டும். எமது ஜனாதிபதி வந்த போது நாம் இது தொடர்பில் கூறினோம்.

வித்யாவின் மரணத்தை அடுத்து இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு, இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றோம். அதற்காகவே இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டை மேற்கொண்டோம்.”