செய்திகள்

போர் முடிவுக்குப் பின்னர் தகர்க்கப்பட்ட சம்பூர் பத்திரகாளி அம்பன் கோவில் (பட இணைப்பு)

சம்பூர் பத்திரகாளி அம்பன் கோவில் திட்டமிட்ட முறையில் இடித்துத் தரைமட்டமாக்கப்படுவதற்குப் பொறுப்பாக இருந்த திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வாவை இடமாற்றம் செய்வதாக உறுதியளித்திருந்தும் அதனை அரசாங்கம் இதுவரையில் செய்யாமலிருப்பது ஏன் என அகில இலங்கை தமிழ் மகா சபாவின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஆலோசகருமான டாக்டர் கே.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சம்பூரின் பிரசித்திபெற்ற பத்திரகாளி அம்பன் கோவில் போர் முடிவுக்கு வந்த பின்னரே தகர்த்துத் தரை மட்டமாக்கப்பட்டதாகவும், அது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

சம்பூர் பத்திரகாளி அம்மன் கோவில் தகர்க்கப்பட்டதன் பின்னர் உருவாகிய அழுத்தங்களையடுத்து இராணுவப் பின்னணியைக் கொண்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்வதற்கு அரச தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட டாக்டர் விக்னேஸ்வரன். தேர்தலின் பின்னர் இடமாற்றத்தை மேற்கொள்வதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போதும் அவர் அரசாங்க அதிபராகவே தொடர்ந்தும் இருக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த டாக்டர் விக்னேஸ்வரன் மேலும் கூறியதாவது;

“சம்பூர் பத்திரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தமானது. சம்பூர் மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்த கோவில் அது. போர் ஆரம்பமானபோது, 2006 இல் சம்பூர் மக்கள் முற்றாக இடம்பெயர்ந்தனர். அந்தப் பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாகவும் பிரகடனம் செய்யப்பட்டது. மக்கள் செல்வதற்கும் தடை செய்யப்பட்டது. போர் முடிந்த பின்னரும் மக்கள் தமக்குச் சொந்தமான இடத்துக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

2010 இல் போர் முடிவடைந்த பின்னர் எடுக்கப்பட்ட படம் இது. கோவில் முழுமையாக இருப்பதை இதில் காணலாம்.

2010 இல் போர் முடிவடைந்த பின்னர் எடுக்கப்பட்ட படம் இது. கோவில் முழுமையாக இருப்பதை இதில் காணலாம்.

போர் முடிவுக்கு வந்து 3 வருடங்களின் பின்னர் 2012 ஆம் ஆண்டில் ஒரு சில கிராமங்களுக்கு மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அவர்களின் இருப்பிடங்கள் அமைந்திருந்ததால், கடற்படையின் பாதுகாப்பு அரணைத் தாண்டியே சென்றுவந்தனர்.

இந்த அதி உயர் பாதுகாப்பு வலயம் திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சித் டி சில்வாவின் கட்டுபாட்டிலேயே இருந்தது. அவருடைய அனுமதியைப் பெற்றுத்தான் அங்கு சென்றுவர முடியும். இந்தக்கால கட்டத்தில் சம்பூர் பத்திரகாளி அம்மன் கோவில் முழுமையாக இருந்துள்ளது. கோவில் சிலைகளும் இருந்துள்ளன. அதனை புகைப்படங்களும் உறுதிப்படுத்துகின்றன.

2013 இல் எடுக்கப்பட்ட படம் இது. கோவில் இருப்பதை காட்டுகின்றது.

2013 இல் எடுக்கப்பட்ட படம் இது. கோவில் இருப்பதை காட்டுகின்றது.

2013 ஆகஸ்ட்டில் மேலதிக மக்களை சம்பூரில் குடியேற்றுவதற்கு முன்னர் அந்தக் கோவிலைத் தகர்த்து சிறிய கோவிலாக மாற்றுவதற்காக திட்டமிடப்பட்டது. அரச அதிபர்தான் இதன் பின்னணியில் இருந்தர். 2013 ஆகஸ்டில் கடற்படையினரின் உதவுயுடன் கோவில் இடிக்கப்பட்டது. இதனை மக்கள் கண்டுள்ளனர். அதாவது கோவில் போரால் பாதிக்கப்படவில்லை. போர் முடிவடைந்த பின்னரே அது திட்டமிட்ட முறையில் தகர்க்கப்பட்டது.  இதற்கு புகைப்பட ஆதாரங்கள் சான்றாக உள்ளன.

2014 இல் எடுக்கப்பட்ட படங்கள் கோவில் முற்றாக தகர்க்கப்பட்டு அந்த இடத்தில் சிறிய கோவில் அமைக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. இங்கிருந்த விக்கிரகங்களும் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் மௌனமாக இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விடயமாகவுள்ளது.

திருமலை அரசாங்க அதிபரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலுள்ள கோவில் தகர்க்கப்பட்டமைக்கு அவரே பொறுப்புக் கூறவேண்டியவர். இது தொடர்பில் இந்தியாவிலுள்ள முக்கியஸ்த்தர்கள் சிலருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து அரச அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கொடுக்கப்பட்ட அழுத்தத்தையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், முன்னாள் ஆட்சியாளர்களின் நெருங்கிய உறவினராக அவர் இருந்தமையால்அதனை முன்னைய அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

இது அண்மையில் எடுக்கப்பட்ட படம்: கோவில் மணிக் கோபுரம் மட்டும் உள்ளது. கோவில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

இது அண்மையில் எடுக்கப்பட்ட படம்: கோவில் மணிக் கோபுரம் மட்டும் உள்ளது. கோவில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

தேர்தலின் பின்னர் இந்த இடமாற்றம் செய்யப்படுவார் எனக் கூறப்பட்டும், அது இப்போதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கும் தெரிவித்தேன். உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.

புதிய அரசாங்க அதிபர் ஒருவரை அரசாங்கம் நியமித்துள்ள போதிலும், ரஞ்சித் டி சில்வா வெளியேறாமையால், புதியவர் வந்து பொறுப்பேற்க முடியாத நிலை தொடர்கின்றது.

இராணுவப் பின்னணியைக் கொண்ட திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் டி சில்வா உடனடியாக மாற்றப்படவேண்டும். பத்திரகாளி அம்மன் கோவில் இடிக்கப்பட்டமை தொடர்பில் பாராபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தப்படவேண்டும்.”

இவ்வாறு டாக்டர் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.