செய்திகள்

போர் வெற்றி தினத்தின் பெயர் மாற்றம்: பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட தினம்

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் இலங்கை அரசின் சார்பில் போர் வெற்றிநாளாக கடைபிடிக்கப்பட்டுவந்த மே மாதம் 19ஆம் தேதியை பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்ட தினமாக கொண்டாடுவதற்கு தற்போதைய அரசு தீர்மானித்துள்ளது.

இந்த முடிவை இலங்கை அரசின் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன வியாழனன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் சேனாரத்ன அறிவித்தார்.

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்த 2009ஆம் ஆண்டு முதல், முந்தைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் யுத்தம் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அறிவித்த மே மாதம் 19 தேதியை யுத்த வெற்றி தினமென்று அறிவித்துக் கொண்டாடி வந்தது.

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று கூறிய அமைச்சர் ராஜித்த சேனரத்ன, இலங்கையில் வாழும் ஒரு சமூகத்திற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திய ஒரு தினத்தை யுத்தவெற்றியென்று கருதுவதற்கு தற்போதைய அரசாங்கம் தயாரில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால் யுத்தம் முடிவுக்குகொண்டுவந்த தினம் நாட்டில் பிரிவினை வாதம் தோற்க்கடிக்கப்பட்ட தினமென்று அனுஷ்டிப்பதற்கு தற்போதைய இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் சேனாரத்ன.

இதனடிப்படையில், பிரிவினைவாதத்தை தோற்க்கடிப்பதற்காக செயற்ப்பட்ட இலங்கை ராணுவத்தினரை கவுரவிப்பதற்கான நிகழ்ச்சியொன்றை மே 19 ஆம் தேதி மாத்தரை பகுதியில் நடத்துவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாவும் ராஜித்த சேனாரத்ன கூறினார்.