செய்திகள்

போலி ஆவணத்தை வெளியிட்டார் திஸ்ஸ: வழக்கு தாக்கல் செய்ய பொலிஸார் திட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நாட்டை பிரிவினைக்குட்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று  கைச்சாத்தாகியது என பகிரங்கப்படுத்திய முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவித்து போலி ஆவணமொன்றை, திஸ்ஸ அத்தநாயக்க பகிரங்கப்படுத்தியதாக அவர்மீது குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது. ஐ.தே.க.வினர் இந்த முறைப்பாட்டைத் தெரிவித்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர், திஸ்ஸ அத்தநாயக்கவினால் காண்பிக்கப்பட்ட ஒப்பந்தம் போலியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கையெழுத்து மோசடி தொடர்பில் திஸ்ஸ மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய சாத்தியங்கள் சட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.