செய்திகள்

போலி சாரதி அனுமதிப் பத்திரத்துடன் பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த இளைஞர் மானிப்பாயில் கைது

போலியான சாரதி அனுமதிப் பத்திரத்தைக் காட்டிப் பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த 21 வயது இளைஞரொருவர் கடந்த புதன்கிழமை இரவு மானிப்பாய் வீதியில் வைத்துப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை(30.4.2015) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமையிரவு மானிப்பாய் வீதியில் ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த வாகனங்களை இடைமறித்துச் சோதனையிட்டனர்.அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த மோட்டார்ச் சைக்கிளொன்றை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை காட்டினர்.

இதன் போது குறித்த மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞர் பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச் சென்ற போது துரத்திச் சென்ற பொலிஸார் இளைஞனைக் கைது செய்து விசாரணை செய்ததில் போலியாகச் சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்து அதனைப் பயன்படுத்தி வந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த நபரை மல்லாகம் நீதிமன்றில் நேற்று முன்தினம் ஆஜர் படுத்திய போது வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
யாழ்.நகர் நிருபர்-