செய்திகள்

மகிந்தவின் பிரதமர் வேட்பாளர் கோரிக்கை: நிராகரித்த மைத்திரி

இலங்கையில் அடுத்துவரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை மைத்திரிபால தரப்பினர் நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் ஜனாதிபதிக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே, மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரால் இந்தக் கோரிக்கை பிரதானமாக முன்வைக்கப்பட்டது.

இந்த வேண்டுகோளுக்கு ஜனாதிபதி மைத்ரிபால தரப்பிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என, மஹிந்த ராஜபக்ஷவுடன் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் குமார வெல்கம செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அனைவரும் எதிர்பார்த்திருந்த பிரதமர் வேட்பாளர் தொடர்பில் திருப்திகரமான பதில் எதுவும் இந்தக் கூட்டத்தில் கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். எனினும் இவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்து பேச இணங்கியுள்ளனர் எனவும் குமார வெல்கம கூறுகிறார்.