செய்திகள்

மகிந்தவின் பெயர் காஸாவிலும் பிரபலம் என்கிறார் ரணில்

இலங்கையில் மாத்திரமல்ல காஸா பள்ளத்தாக்கிலும் மகிந்த ராஜபக்சவின் பெயர் பிரபலமானது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு மகிந்த ராஜபக்சவின் பெயரில் ஒரு மில்லியன் டொலர் செலவில் தொழில் பயிற்சி நிலையமொன்றை அமைப்பதற்காக முன்னைய அரசாங்கத்தினால் நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

கடந்த செவ்hவய்க்கிழமை பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜே.வி.பி. உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கடந்த 5 வருட காலத்தில் பாலஸ்தீன அரசுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய உதவிகள் தொடர்பாகக் வினாவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது –

இலங்கை அரசாங்கத்தினால் கடந்த 5 வருட காலப்பகுதியில் பாலஸ்தீனத்துக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் படி ஒரு மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது. அங்கு தொழிற் பயிற்சி நிலையமொன்றை மகிந்த ராஜபக்ச என்ற பெயர் இலங்கையில் மாத்திரமல்ல காஸா பள்ளத்தாக்கிலும் பிரபலமானது. அங்கும் பெயரில் நிர்மாணப் பணிகள் நடந்துள்ளது. இவ் விடயம் நியாயமானதல்ல. இது தொடர்பாக எம்மிடம் கேள்வி கேட்பதும் நியாயமானதல்ல.

இதேவேளை உயிருடன் இருப்பவர்கள் தங்களின் பெயர்களில் எந்தவொரு நிர்மாணத்தையும முன்னெடுப்பதில்லை. டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தன போன்ற யாரும் தமது பெயரில் எதனையும் அமைக்கவில்லை. ஆனால் மகிந்த ராஜபக்ச, மகிந்த சிந்தனையில் அதனை மாற்றியமைத்துள்ளார்.

உண்மையில் நாம் மக்களுக்கு சேவை செய்தாலே போதும். சேவை செய்து விட்டுப் போவோம். அதற்காக நிர்மாணங்களுக்கு தமது பெயர்களை சூட்டத் தேவையில்லை வேண்டுமென்றால் சொந்தப் பணத்தை ஏதேனும் செய்திருந்தால் அதற்குப் பெயரைச் சூட்டலாம். அதற்காக பொது நிதியில் அமைக்கப்படும் நிர்மாணப் பணிகளுக்கு பெயர்களை சூட்டுவது நியாயமில்லை எனவும் தெரிவித்தார்.