செய்திகள்

மகிந்தவின் மகன் கடற்படையில் இணைக்கப்பட்டது எவ்வாறு? விசாரணைக்கு ஜே.வி.பி. கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோஷித்த ராஜபக்‌ஷ கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பில் முழு அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜே.வி.பி. வலியுறுத்தியிருக்கின்றது.

இலங்கை கடற்படையில் யோஷித ராஜபக்ஷ இணைத்துக்கொள்ளப்பட்ட முறை தொடர்பிலும் பிரித்தானியாவின் புகழ்பெற்ற கடற்படை கற்கைநெறி கல்லூரியில் புலமைப் பரிசில் பெற்று இரண்டு வருட கற்கை மேற்கொண்டமை தொடர்பிலும் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜே.வி.பி.  பாதுகாப்பு செயலாளர் பி.எம்.யூ.டி.பஸ்நாயக்கவிடம் கோரியுள்ளனர்.

இது தொடர்பில், பாதுகாப்பு செயலாளரிடம் மக்கள் விடுதலை முன்னணியினர் குற்றப்பத்திரம் ஒன்றினை கையளித்துள்ளனர் என்று மேல் மாகாணசபை உறுப்பினர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கடற்படையில் இணைக்கப்பட்ட யோஷித்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற மறுநாள் அதிலிருந்து விலகிக்கொண்டார். தேர்தல் தோல்வி என்பது உறுதியானவுடன் மகளை கடற்படையிலிருந்து விடுவிப்பதற்கான உத்தரவிலேயே மகிந்த ராஜபக்‌ஷ கைச்சாத்திட்டார். அவரது பதவிக்காலத்தில் அவர் பிறப்பித்த இறுதி உத்தரவாக அது அமைந்திருந்தது.