செய்திகள்

மகிந்தவுக்கு அப்பால் கடுந்தீவிர சிங்களத் தேசியவாதம்

“அதிகாரம் தங்கள் கையை விட்டுப் போக ராஜபக்ஷாக்கள் உண்மையில் அனுமதிப்பார்களா?’ சமுதாயத்தின் சகல பிரிவுகளையும் சேர்ந்த சாதாரண மக்கள் அண்மைக்காலமாக என்னிடம் அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கின்ற கேள்வி இது. இவ்வாரம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ தோல்விகாணும் பட்சத்தில் நாட்டில் ஆட்சிமுறையின் எதிர்காலம் பற்றியே அவர்கள் கேட்கிறார்கள். 1978 ஆம் ஆண்டிலிருந்து நான் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகின்றேன். பதவியில் இருக்கும் ஆட்சியாளர் ஒருவர் தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டாலும் கூட அரசியலமைப்புக்கு முரணான முறையில் அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க முயற்சிப்பாரா என்ற கேள்வியை எனது இதுகாலவரையான பத்திரிகைத்துறை அனுபவத்தில் ஆட்கள் இப்போதுதான் முதற்தடவையாக என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.

முன்னைய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்களின் போது, அதுவும் குறிப்பாக, வர்த்தக சமூகத்துக்கு ஆதரவான ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தில் இருந்தகால கட்டங்களில் நடத்தப்பட்டிருக்கக்கூடிய தேர்தல்களின்போது அரசாங்கங்கள் பதவியிலிருந்து இறங்காமல் இருக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் குறித்து எனது தீவிர இடதுசாரி சகாக்கள் தத்துவார்த்தரீதியில் ஊகிப்பது குறித்து மாத்திரமே நான் கடந்த காலத்தில் கேள்விப்பட்டிருக்கின்றேன். இடதுசாரி அல்லது மார்க்சிய சிந்தனையில் இத்தகைய ஊகங்கள் இயல்பானவை. ஏனென்றால், முதலாளித்துவ பொருளாதாரத்தின் பொதுப்படையான தர்க்கத்தின் அடிப்படையிலும் நவீன உலக வரலாற்றின் வெளிப்படையான அனுபவத்தின் அடிப்படையிலும் நோக்கும்போது ஆளும் வர்க்கம் சட்டபூர்வமானதும் அரசியலமைப்பு ரீதியானதுமான வழி முறைகளில் மாத்திரமல்ல,இராணுவபலம் மற்றும் அரசியல் அடக்குமுறையை கொடூரமான முறையில் பயன்படுத்தியும் கூட அரச அதிகாரத்தை தக்கவைப்பதற்கு சூழ்ச்சித்தன முறையில் நடந்துகொண்டன என்பதற்கான பெருவாரியான
சான்றுகள் உள்ளன.

ஆனால், இந்தக் கேள்வியை அடிக்கடி இந்தளவு பெருந்தொகையான மக்கள் இலங்கை வாக்காளர்கள் என்னிடம் முன்னர் ஒருபோதுமே கேட்டதில்லை. ராஜபக்ஷவுக்கு தோல்வி ஏற்படும் பட்சத்தில் எந்தவழி முறையில் என்றாலும் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்று நினைக்கின்ற ஒரு கட்டத்தை சாதாரண அரசியலில் பெரிதும் அக்கறை காட்டாத பிரஜைகள் அடைந்திருக்கிறார்கள் என்றால், அது எமது நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரக்கூடிய இரு விடயங்களை சுட்டிக்காட்டுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், முதலாவதாக சரியோ தவறோ சாதாரண மக்கள் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெருமளவு தவறான காரியங்களை செய்துவிட்டதாகக் கருதுகின்றார்கள். குறிப்பாக இந்த ஆட்சியாளர்கள் சட்டத்தை தனக்கு ஏற்றமுறையில் வளைத்துச் செயற்பட்டிருக்கிறார்கள். சட்டவிரோதமான முறையில் செல்வத்தைக் குவித்திருக்கிறார்கள். பலரைக் கொடுமைக்குள்ளாக்கியிருக்கிறார்கள். கொடுமைகளை அனுபவித்தவர்கள் ஆட்சியாளர்களின் தவறுகளுக்காக நீதியைப் பெறவிரும்புகின்றார்கள். ஆனால் ஆட்சியாளர்களோ, தங்களை வஞ்சம் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க விரும்பமாட்டார்கள் என்று மக்கள் உணருகிறார்கள்.

இரண்டாவதாக ,ராஜபக்ஷ அரசாங்கம் சட்டத்தையும் நீதி விதிமுறைகளையும் பொருட்படுத்தாமல், இராணுவத்தையும் பொலிஸாரையும் ஏன் குண்டர்களையும் பயன்படுத்தி அதன் விருப்பு வெறுப்புகளை அடாத்தாகத் திணிக்கும் காரியங்களில் ஈடுபட்டிருக்கிறது என்று சாதாரண மக்கள் இன்று கருதுகிறார்கள். தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேருமானால் அதிகாரத்தில் தொடர்ந்தும் இருப்பதற்கு இதேவழிமுறைகளை ராஜபக்ஷாக்கள் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். இந்த எண்ணமே ஒரு பத்திரிகையாளரிடம் மேற்கூறப்பட்ட கேள்வியைக் கேட்பதற்கு மக்களை உந்தித்தள்ளியிருக்கிறது. தோல்வி ஏற்படும் பட்சத்தில் “சுமுகமான அதிகார கைமாற்றம்’ குறித்து வேறுயாருமல்ல, இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் சங்கத்தைச் சேர்ந்த வணக்கத்துக்குரியவர்களே பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிடம் பண்பான முறையில் கேட்டிருக்கிறார்கள் என்றால், அரசியலமைப்புக்கு முரணான அத்தகைய நடத்தையின் சாத்தியம் குறித்து இலங்கைச் சமுதாயம் எந்தளவுக்கு நினைக்கிறது என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறதல்லவா?
“படுமோசமான’ நிகழ்வுகள் இடம்பெறுமென்று பயப்படவேண்டாம் என்றே நான் அனுபவமுடைய ஒரு பத்திரிகையாளன் என்றவகையில் மக்களுக்கு தைரியமூட்ட விரும்புகிறேன். தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேருமானால் அரசியலமைப்புக்கு முரணான முறையில் ஆட்சியதிகாரத்தில் தொடர்ந்தும் இருப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்குமா என்று நான் தனிப்பட்ட முறையில் சந்தேகிக்கின்றேன். அவ்வாறு அதிகாரத்தை தொடர்ந்தும் தங்கள் கைகளில் வைத்திருக்க மகிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பமும் அவர்களுக்கு விசுவாசமான சில நண்பர்களும் முயற்சித்தாலும் கூட, அத்தகைய முயற்சிக்கு கணிசமான எந்தவொரு அரசியல் ஆதரவை அல்லது நியாயப்பாட்டை அவர்கள் பெறக் கூடியது சாத்தியமில்லை.

அவ்வாறு அதிகாரத்தை அபகரிப்பதற்கான முயற்சிக்கு ஒரு நியாயப்பாட்டைத் தேடிக் கொள்வதென்பது சாத்தியமாகக் கூடிய காரியமல்ல. அந்த அளவுக்கு இலங்கையின் பொதுவான அரசியல் கலாசாரமும் உயர்மட்ட அரச அதிகாரிகளினதும் ஆயுதப் படைகளினதும் பொதுவான துறைசார் மனப்பான்மையும் நிறுவன ரீதியாக ஜனநாயக மயப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கடசிக்குள் இருக்கின்ற ராஜபக்ஷ குடும்பத்தின் பல நேச சக்திகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டரசாங்கத்திற்குள் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளும் அத்தகைய அதிகார அபகரிப்புக்கு ஆதரவு அளிப்பது சாத்தியமில்லை. இதற்குக் காரணம் (ஜனாதிபதியைப் போலன்றி) அவர்கள் சகலருமே பாராளுமன்றத் தேர்தல்களின் ஊடாகவே மக்களின் ஆதரவைப் பெற்று பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். என்னதான் சட்டரீதியான சாக்குப்போக்கில் அதிகாரம் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுமானால் பிறகு அவர்கள் எல்லோரும் பாராளுமன்றத் தேர்தல்களைத் தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாவர். தற்போது செறிவு தளர்ந்து கொண்டு போகும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பல்வேறுவகையான சமூக வாக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவையாக இருக்கின்றன. சில கட்சிகள் முரண்பட்ட நலன்களைக்கொண்ட சிறுபான்மையினங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவையாவுமுள்ளன. இத்தகைய பல்வகைமையான பங்காளிக் கட்சிகளைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் ஆட்சியதிகாரத்தை அபகரிக்கும் கடுமையான ஒடுக்குமுறை நடவடிக்கையொன்றுக்கு மத்தியில் ஒருங்கிணைந்து செயற்பட இயலாததாகவே இருக்கும்.

இது விடயத்தில் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் என்றபோதிலும் “அதிகார அபகரிப்பு’ பற்றிய இந்த ஊகம் இலங்கை அரசின் நிறுவன ரீதியான வலிமை பாரதூரமான அளவுக்கு சீர்குலைந்திருக்கிறது என்பதை உணர்த்தி நிற்கிறது என்பதிற் சந்தேகமில்லை. இலங்கை அரசு பல்வேறு வழிகளில் நீண்டகாலமாகவே எதேச்சாதிகாரமானதாகவே இருந்து வந்திருக்கிறது. அத்தகைய எதேச்சாதிகாரம் இனத்துவ சமூகங்களை ஒடுக்கு முறைக்குள்ளாக்கியதுடன் தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்ற அதேவேளை, அரசையே மலினப்படுத்துகின்ற அளவுக்கு பிரயோகிக்கப்படவில்லை. இத்தகைய நிலைமையே இன்று வரை காணப்படுகிறது.

சிறுபான்மையினத்தவர்கள் குறிப்பாக தமிழர்கள் மிகவும் நீண்டகாலமாக பாரபட்சங்களையும் ஒடுக்கு முறைகளையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. இன்று முதற்தடவையாக பெரும்பான்மையினத்தவர்களான சிங்களவர்கள் எதேச்சாதிகாரத்தின் விளைவுகளை அனுபவிக்க வேண்டியநிலை ஏற்பட்டிருக்கிறது. இன்று சிங்களவர்கள் எதிர்ப்பை காட்டுகிறார்கள். தாங்கள் இனரீதியாக மேலாதிக்கம் செய்ய முயற்சித்து வந்திருக்கும் அதே அரசை அடிப்படையில் மலினப்படுத்தக்கூடிய வலுக்கட்டாய அரசியல் திணிப்புகள் இடம்பெறுமென்று
சிங்களவர்கள் ஏங்குகிறார்கள். சிங்களவர்கள் எதிர்நோக்குகின்ற அநீதிகள் சிறுபான்மையினத்தவர்களை அவலத்துக்குள்ளாக்கிய அநீதிகளில் இருந்து தன்மையில் வேறுபட்டவையாக இருக்கின்ற போதிலும் கூட , இன்று பெருமளவிலான சமூக அநீதிக்கும் அரசியல் அடக்குமுறைக்கும் எதிராக குரலெழுப்புபவை சிங்களவர்கள் தலைமையிலான அரசியல் கட்சிகளாகவே இருக்கின்றன.

‘ராஜபக்ஷவின் கொடுங்கோண்மை மற்றும் மோசமான ஆட்சியின் கீழ் நாடு வீழ்ச்சி காணுவதை தடுத்து நிறுத்தி நாம் அதைக் காப்பாற்ற வேண்டுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் சுகாதார அமைச்சரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளருமான மைத்திரிபால சிறிசேன தனது பிரசாரக் கூட்டங்களில் அறைகூவல் விடுக்கிறார். அவரின் அரசியல் குருவும் கட்சியின் முன்னாள் தலைவருமான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நாட்டுப் பிரஜைகளுக்கு விடுக்கப்படுகின்ற இந்த வலிமையான அறைகூவலை எதிரொலிக்கிறார். எதேச்சாதிகாரத்தையும் தவறான ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த இயக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவும் இணைந்து நிற்கிறார்கள்.

நேரப்போகின்ற தேசிய அனர்த்தம் பற்றிய முன்னெச்சரிக்கையே இந்த அரசியல் தலைவர்கள் சகலரும் ஒன்றிணைந்து நிற்பதற்கான பொதுவான நியாயப்பாடாகும். எதேச்சாதிகார ஆட்சியின் பன்முக அதிர்வுகள், குடும்பாதிக்கம், அரச நிருவாகம் அழித்தொழிக்கப்படும் போக்கு, தலைவிரித்தாடும் ஊழல் மோசடிகள், தவறான பொருளாதார முகாமைத்துவம் உட்பட பல்வேறு வகையான கெடுதிகளின் விளைவாக இலங்கை அரசு தகர்ந்து போகக்கூடிய அனர்த்தம் குறித்து இந்த அரசியல் தலைவர்கள் எச்சரிக்கிறார்கள். தங்களது பொதுவேட்பாளர் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் அமைக்கக்கூடிய அரசாங்கம் சிறப்பாகச் செயற்படுவதன் மூலம் மாத்திரம் இந்த நெருக்கடிகளுக்கெல்லாம் பரிகாரம் கிடைத்துவிடும் என்று இவர்கள் கூறவில்லை. பதிலாக விரிவானதொரு அரசியலமைப்புச் சீர்திருத்த வேலைத்திட்டத்தையும் முன்வைத்திருக்கிறார்கள். மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையும் நீதித்துறை மற்றும் அரச நிருவாக நிறுவனங்கள் மீதான அதன் மனம்போன போக்கிலான கட்டுப்பாடுமே இன்றைய பிரதான பிரச்சினையாக இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக்காண்பதற்கே அந்த அரசியலமைப்புச் சீர்திருத்த யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக எதிரணித் தலைவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இந்தத் தலைவர்கள் தேசிய அரசியல் பிரதான நீரோட்டத்தில் கூடுதலான அளவுக்கு தாராளவாத (லிபரல்) போக்கைக் கொண்ட பிரிவினராக இருக்கிறார்கள். இலங்கை மீதான சிங்கள இனத்துவ மேலாதிக்கத்துக்காக கனவு கண்டுகொண்டு, அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்காக ராஜபக்ஷாக்களை ஆதரித்து நின்ற கடுந்தீவிரவாத சிங்கள தேசியவாத சக்திகளும் சிங்கள உச்ச உயர் நிலை மேலாண்மை வாத சக்திகளும் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்?

தமிழ்ப் பிரிவினைவாத ஆயுதக் கிளர்ச்சிக்கு “இராணுவத்தீர்வு’ காணப்பட்டதற்குப் பிறகு நாட்டில் படு மோசமான நிலைக்குச் சென்றிருக்கும் இனப்பிளவுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்கும் போது, சிங்கள இன மேலாதிக்கத்துக்கான இயக்கத்தின் திசை மார்க்கத்தை உறுதியாகத் தெரிந்துகொள்வதற்கு தற்போதைய ஜனாதிபதித் தேர்தலின் அரசியலை ஆராயவேண்டியது அவசியமாகிறது.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் மூலமாக உள் நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் “ இலங்கைத் தமிழர்கள் ‘ என்று கூறப்படுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்கள் இலங்கை அரசின் கொடூரமான அடக்குமுறையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது இந்த அரசின் இரு முக்கிய குணாதிசயங்களின் தர்க்க ரீதியான விளைவாகும். முதலாவது குணாதிசயம் அரசு மீதான சிங்கள உச்ச உயர் நிலை மேலாதிக்கம். 1957 தனிச் சிங்களச் சட்டத்தில் தொடங்கி 1980 களின் இனவெறி வன்முறைகளின் ஊடாக இன்று தலைவிரித்தாடுகின்ற மேலாதிக்க வாதம் வரை இது வளர்ச்சி கண்டு வந்திருக்கிறது. இரண்டாவது குணாதிசயம், தற்போதைய ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் மிகுதியாக மத்தியமயப்படுத்தப்பட்ட அரசியல் நிருவாகம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை அறிமுகம் செய்த இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியல் அமைப்பு பிராந்தியங்களுக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கி பலப்படுத்துவதற்குப் பதிலாக அந்த அதிகாரங்களை தளர்த்தி வைத்திருக்கிறது; சிறுபான்மையினங்களின் அரசியல் மற்றும் மனித உரிமை அபிலாஷைகளை அலட்சியம் செய்கிறது. அதிகாரங்களை மத்தியமயப்படுத்துகின்ற விடாப்பிடியான போக்கும் எதேச்சாதிகார ஆட்சிமுறையும் பல் கலாசாரத் தன்மைக்கும் சமூகங்களிடையேயான இணக்கத்துக்கும் பாதகமான முறையில் சிங்கள உச்ச உயர் நிலை மேலாதிக்க இயக்கம் அரசை ஆதிக்கம் செய்வதற்கு துணை செய்திருக்கிறது என்று கடந்த காலத்தில் எனது பல கட்டுரைகளில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அண்மைய வருடங்களில் அரசாங்கமும் தமிழ்த் தீவிரவாத இயக்கங்களும் ( குறிப்பாக விடுதலைப் புலிகள் ) நடத்திய போரின் கடூரம் சிங்கள மேலாதிக்க வாதக் குழுக்களையும் அரசியல் கட்சிகளையும் பலப்படுத்தியதுடன் அந்தக் குழுக்கள் ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அளவுக்கு முன்னேற்றம் கண்டன.

யார் இந்த சிங்கள மேலாதிக்கவாத சக்திகள் ? அவர்களின் இலட்சியத்துக்காக பாடுபடுகின்ற குழுக்கள், கட்சிகள் மத்தியில் மிகவும் பிரபல்யமானதாகவும் செயல்முனைப்புடையதாகவும் விளங்குவது ஜாதிக ஹெல உறுமயவாகும். இக் கட்சிக்கு சிங்கள பேரினவாத நிலைப்பாட்டைக் கொண்ட பல்வேறு சிவில் குழுக்களிடமிருந்து ஆதரவு கிடைத்தது. ஜாதிக ஹெல உறுமய ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னோடிகளாக இருந்த சில முன்னைய குழுக்களில் சிங்கள வீர விதானயா, பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கம், பல சிங்கள மேலாதிக்க வாத குழுக்களின் கூட்டமைப்பான கூட்டு தேசியக் கமிட்டி மற்றும் தற்போது செயலிழந்து போன சிங்கள ஆரக்ஷக சங்விதானய ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மிக அண்மையில் உருவான ஜாதிக ஹெல உறுமய சமாந்திரமான சிந்தனை கொண்டதாக இருக்கின்ற அதேவேளை, மேற்கூறப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புபட்டதல்ல. ராஜபக்ஷக்கள் அவர்களது எளிமையான அரசியல் மனப்பாங்கு காரணமாக இந்த சிங்கள இன மேலாதிக்க வாத சக்திகளை தங்களது சொந்த செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காகவும் அதிகாரம் மீதான தங்கள் பிடியை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காகவும் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை இயக்கத்துக்கு எதிரான போரை வெற்றி கொள்ளும் நோக்கத்துக்காக சிங்கள இன மேலாதிக்க சக்திகள் இலங்கை அரசியல் சமுதாயம் முழுவதையும் நகர்த்தி பயன்படுத்திக் கொண்டிருந்தன என்று எனது முன்னைய கட்டுரைகளில் நான் அடிக்கடி சுட்டிக்காட்டியிருந்தேன். உண்மையில் , அரசை “ அரக்கத்தனமாக்கும்‘ (இச்ணணடிஞச்டூடிண்ச்tடிணிண) செயற்பாடு என்று முன்னர் நான் அழைத்திருக்கிறேன். அண்மைய தசாப்தங்களில் தூர நோக்கற்றதும் இனவாத உணர்வை மையமாகக் கொண்டதுமான குயுக்தியுடன் இந்த சக்திகள் போர் வெற்றிக்காக அரசின் முழு வலுவையும் வளங்களையும் அர்ப்பணிப்பதற்கு முயற்சித்தன. இந்த இராணுவ வெற்றியென்பது நாட்டின் சொந்தப் பிரஜைகளில் ஒரு பிரிவினரை வன்முறை மூலம் அடக்கியொடுக்குவதன் வாயிலாகப் பெறப்படுவது என்ற உண்மையை அலட்சியம் செய்து கொண்டே அச் சக்திகள் அவ்வாறு செயற்பட்டன.

இன்று இந்தக் குழுக்களில் அரசியல் ரீதியில் மிகவும் வளர்ச்சி கண்டதான ஜாதிக ஹெல உறுமய கட்சி ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் அரசு எந்தளவு தூரத்துக்கு தரங்குறைந்து போயிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளக் கூடிய அளவுக்கு அரசியல் முதிர்ச்சியையும் தலைமைத்துவ விவேகத்தையும் கொண்டிருக்கிறது. பொது பல சேனாவின் அப்பட்டமான, முரட்டுத்தனமான போக்கும் இனங்களுக்கிடையே அச்சவுணர்வையும் அவ நம்பிக்கையையும் மேலும் கிளப்பி விடுவதற்காக இந்தச் சேனாவை பயன்படுத்துவதில் அரசாங்கம் வெளிக்காட்டிய அறிவிலித்தனமுமே கூடுதல் உணர்வுத் தெளிவும் அரசியல் நயநாகரிகமும் கொண்ட ஜாதிக ஹெல உறுமயவை இந்த ஆபத்தான போக்கைத் தடுத்து நிறுத்துவதற்கு செயலில் இறங்குவதற்கு உந்தித் தள்ளின. நம்பிக்கையிழந்த நிலையில் இனங்களுக்கிடையே வன்முறையைத் தூண்டிவிடுவதில் அரசாங்கம் நாட்டம் காட்டுகின்றது என்றும் சிங்களவர்கள் மத்தியில் ராஜபக்ஷக்கள் செல்வாக்கை இழந்து கொண்டு போகின்றார்கள் என்றும் ஜாதிக ஹெல உறுமய வினருக்குத் ஏற்பட்ட புரிதலே அவர்களை ராஜபக்ஷாக்களுக்கு அப்பால் சிந்திப்பதற்கு தூண்டியது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஜாதிக ஹெல உறுமயவினரின் இனத்துவ மேலாதிக்க குறிக்கோள்களை நாம் இணங்கிக் கொள்ளாவிட்டாலும் கூட , அவர்களது அரசியல் இலக்குகள் ராஜபக்ஷக்களைப் போலன்றி மெய்யாகவே அரசியல் நெறிமுறை சார்ந்தவையேயாகும். தங்களது சொந்த நலன்களுக்காக சூழ்ச்சித் தனமாக நடந்து கொள்வதையும் சூறையாடுவதையும் தவிர ராஜபக்ஷ வம்சம் ஒரு போதுமே ஆட்சி செய்வதற்கோ, அபிவிருத்தியை செய்வதற்கோ வேண்டிய ஆற்றல்களை வெளிக்காட்டவில்லை. ஆனால், ஜாதிக ஹெல உறுமயவும் ஏனைய கடுந் தீவிர சிங்கள தேசியவாத சக்திகளும் அரசு மீதான சிங்கள மேலாதிக்கத்தை இலக்காகக் கொண்டிருக்கின்றன. இந்த நோக்கைப் பொறுத்தவரை இச் சக்திகளுக்கு ஒரு மாறாத கொள்கை வரலாறு இருக்கிறது.

அதனால் போரின் முடிவுக்குப் பின்னரான கால கட்டத்தில் சிங்கள மேலாதிக்கத்தைக் கட்டியெழுப்புதலைப் பொறுத்தவரை ராஜபக்ஷ ஆட்சி அதன் எல்லைக் கோட்டை எட்டுகின்றது என்பதை இந்த கடுந் தீவிர சிங்களத் தேசியவாத சக்திகள் மனத்தால் உணர்ந்து கொண்டதும் தாங்கள் மேலாதிக்கம் செய்ய விரும்புகிற அதே அரசை மலினப்படுத்தாத அரசியல் சாதனம் ஒன்றை தெரிவு செய்து கொள்வதற்காக ராஜபக்ஷக்களை கைவிட வேண்டுமென்ற தேவையை விளங்கிக் கொண்டன. இந்த அளவுக்கு பாராளுமன்ற ஜனநாயகத்திற்குள் ஒரு அரசியல் கட்சியாக ஜாதிக ஹெல உறுமய முதிர்ச்சியடைய ஆரம்பித்திருப்பதைக் காண்கிறோம் ; அந்த ஜனநாயகத்தில் ஒரு அங்கமென்ற வகையில் தனது சொந்த வகிபாகம் பற்றிய பிரக்ஞை கொண்ட கட்சியாக அதைப் பார்க்க முடிகிறது; தனது சொந்த அரசியல் நோக்கையும் குறிக்கோள்களையும் தெரிந்து கொண்ட கட்சியாக அதைப் பார்க்க முடிகிறது.

தவறிழைக்கின்றதும் அருவருப்பானதுமான ராஜபக்ஷ ஆட்சியை ( சிங்கள மேலாதிக்கத்துக்கான ஒரு சாதனம் என்ற வகையில் இனிமேலும் பயன்படுத்தாமல் ) கைவிடுவதற்கு ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்த போது, அரசு மீதான பிரத்தியேகமான இன மேலாதிக்கம் பற்றிய அதன் நோக்கையும் கைவிட்டு விட்டது எனலாம். பல இனங்களையும் பல்வேறு கோட்பாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் சக்திகளை ஒன்றிணைத்திருக்கும் எதிரணியில் தன்னை இணைத்துக்கொண்ட போது ஜாதிக ஹெல உறுமய அதன் அரசியலில் இனிமேலும் ஆழமற்ற மேலோட்டமான சிந்தனையைக் கொண்ட கட்சியாக இல்லை என்பதை வெளிக்காட்டியிருக்கிறது ; இலங்கை போன்ற பல் கலாசார சமுதாயத்தில் எந்தவொரு இனக் குழுமத்துக்கும் பிரத்தியேக அந்தஸ்தை நாடுவது இறுதியில் முழுச் சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் கேடாக அமையும் என்பதை புரிந்து கொள்கிற ஒரு கட்சியாக தன்னை வெளிக்காட்டியிருக்கிறது.

இவ்வார தேர்தலின் முடிவுகள் எந்த வகையாக அமைந்தாலும் இலங்கையின் தேசியப் பிரச்சினை குறித்து (ஐண்ண்தஞு ணிஞூ Nச்tடிணிணடணிணிஞீ) எதிரணிக் கூட்டணியில் பங்காளிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவதில் எந்தளவுக்கு ஆற்றல்களை ஜாதிக ஹெல உறுமய கொண்டிருக்கிறது என்பதை அடுத்து வரும் நாட்களில் தான் காணக்கூடியதாக இருக்கும். ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பிறகும் எதிரணிக் கூட்டணியில் ஜாதிக ஹெல உறுமய அங்கம் வகித்து ராஜபக்ஷ எதேச்சாதிகாரத்தைத் தொடர்ந்து எதிர்த்து நிற்குமாக இருந்தால், அதற்குப் பிறகு அதன் அரசியல் , அந்தக் கூட்டணியின் பன்முகத்தன்மை மற்றும் அரசியல் நோக்கு நிலையினாலேயே ஓரளவுக்கு வரையறுக்கப்படும். அவ்வாறு செய்வதில் ஜாதிக ஹெல உறுமய வெளிக்காட்டக் கூடிய விருப்பம் முன்னைய பிரத்தியேக இனத்துவ மேலாதிக்க மருட்சிகளை விடவும் முழு இலங்கைச் சமூகம் மீதான அதன் மெய்யான தேச பக்த பற்றுறுதியை நிரூபிப்பதாக அமையலாம். இனங்களுக்கிடையிலான போரினால் முழு நாடுமே சலிப்படைந்து விட்ட நிலையில், அத்தகைய புதிய பாதை ஒரு புறத்தில் ஜாதிக ஹெல உறுமயவுக்கான வாக்காளர் ஆதரவை அதிகரிப்பதுடன் மறுபுறத்தில் இனத்துவ மேலாதிக்கத்துக்கான போக்குகளை கட்டுப்படுத்துவதற்கான மக்கள் ஆதரவு கொண்ட சாதனமாகவும் விளங்கக் கூடியது சாத்தியம் !