செய்திகள்

மகிந்தவுக்கு ஆதரவாக இரத்தினபுரியில் இன்று பேரணி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் கூட்டணிக் கட்சிகள் இன்று இரத்தினபுரியில் பேரணி ஒன்றை நடத்தவுள்ளன. மகிந்தவுக்கு ஆதரவாக இடம்பெறும் இந்த மூன்றாவது கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் சிலர் தடையையும் மீறிச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகின்றது.

மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, உள்ளிட்ட கட்சிகள் இணைந்து நடத்தும் இந்தப் பேரணியில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி 20 வரையிலான நாடாளுமன்ற. உறுப்பினர்கள் பங்கேற்பர் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே கண்டி, நுகேகொட ஆகிய இடங்களில் இத்தகைய கூட்டங்கள் நடத்தப்பட்டன. முதலாவது கூட்டம் நுகேகொடவில் நடத்தப்பட்ட போது சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். இதையடுத்து, பிற்கட்சிகளின் கூட்டங்களில் அனுமதியின்றி பங்கேற்கக்கூடாது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமை, தமது உறுப்பினர்களுக்குத் தடை விதித்தது.

எனினும் இந்த உத்தரவை மீறி 20 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட அழைக்கும் வகையில், இந்தப் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச தற்போது, உள்ளூராட்சிசபைகள், மாகாணசபைகளின் உறுப்பினர்களையும், பௌத்த பிக்குகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளையும் தொடர்ச்சியாகச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தி வருகிறார்.

இவ்வாறான சந்திப்புகள் சிலவற்றில், மகிந்த ராஜபக்சவின் உரை இடம்பெறும் போது, செய்தியாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படும் சம்பவங்களும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.