செய்திகள்

மகிந்தவுக்கு வேட்புமனு தொடர்பில் சுதந்திரக்கட்சி எந்த முடிவும் எடுக்கவில்லை: சந்திரிகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்கப்பட்ட செய்தி குறித்து தமக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஆனால் சுதந்திரக்கட்சி இதுதொடர்பில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இன்று சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோதே மிகச் சுருக்கமாக இரண்டொரு வார்த்தைகளில் அவர் இதனை தெரிவித்தார்.

இந்த நிலையில், ராஜபக்‌ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தெரிவித்து சுசில் பிரேமஜயந்தவினால் வெளியிடப்பட்ட அறிக்கை அரசியல்வாதிகளுக்கிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் இதுதொடர்பில் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது.