செய்திகள்

மகிந்தவுக்கு வேட்பு மனு ஜனாதிபதி ஏற்கவில்லை: அர்ஜுன ரணதுங்க

மகிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.ம.சு.மு.வில் போட்டியிடுவதற்கான நியமனப் பத்திரம் வழங்கப்படும் என்ற அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமலேயே பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார் என துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்திருக்கின்றார்.

தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டிருக்கும் ரணதுங்க, சுசில் பிரேமயெந்த தயாரித்த அறிக்கையின் மூலப் பிரதியில் கையொப்பமிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால மறுத்துவிட்டார் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். இதனையடுத்து மற்றொரு பிரதியைத் தயாரித்த சுசில் பிரேமஜயந்த தன்னுடைய   கையொப்பத்துடன் அதனை வெளியிட்டதாகவும் ரணதுங்க தெரிவித்திருக்கின்றார்.

“மகிந்த ராஜபக்ஷவிற்கு ஐ.ம.சு.மு. நியமனத்தை வழங்கினால், ஸ்ரீ.ல.சு.க. அதற்கான அங்கீகாரத்தை வழங்கவேண்டும். ஆனால், இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவோ தமது அங்கீகாரத்தை வழங்கவில்லை’ எனவும் ரணதுங்க தெரிவித்துள்ளார்.