செய்திகள்

மகிந்தவைத் தோற்கடித்த ஒபாமா – மோடி: கம்பன்பில குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போன்ற ஓர் யுக புருஷரைத் தோற்கடித்தமை ஓர் வரலாற்றுத் தவறாகும் என பிவித்துரு ஹல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மகிந்த அரசாங்கத்தை ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது மைத்திரிபால சிறிசேனவோ தோற்கடிக்கவில்லை. பராக் ஒபாமா, நரேந்திர மோடி போன்றவர்கள் கூட்டாக இணைந்தே மகிந்தவை தோற்கடித்தனர்.

ஜோன் கெரி, நரேந்திர மோடி போன்றவர்கள் இலங்கை விஜயம் செய்தமை தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தவேயாகும்.

இலங்கைக்கு விஜயம் செய்த நரேந்திர மோடி மற்றும் ஜோன் கெரி இலங்கைக்கு உதவியாக ஒரு சதமேனும் நிதியுதவி வழங்கவில்லை. அவ்வாறான ஒர் அரச தலைவரை தோற்கடித்தமை வரலாற்றில் நாம் செய்த மாபெரும் தவறாகவும் முட்டாள்த்தனமாகவும் கருதப்பட வேண்டும்.
இன்னும் 40 ஆண்டுகளில் நாட்டின் எரிபொருள் வளம் இல்லாமல் போய்விடும். மன்னாரில் காணப்படும் எரிபொருள் வளங்களை சூறையாடவே வெளிநாட்டு சக்திகள் இந்த முயற்சியை மேற்கொள்கின்றன.

இலங்கையை இந்தியாவினதோ அல்லது அமெரிக்காவினதோ காலணியாக மாற்ற இடமளிக்க முடியாது என உதய கம்மன்பில தெரிவித்தார்.