செய்திகள்

மகிந்தவை தோற்கடிக்க வகுக்கப்பட்ட திட்டம்: இரகசியங்களை வெளிப்படுத்துகிறார் சந்திரிகா

மகிந்த ராஜபக்‌ஷவை தோற்கடித்து மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக்கியவர்களில் முக்கியமானவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. மகிந்த அரசினால் தாம் பழிவாங்கப்பட்ட விதம் குறித்தும், அவரைத் தோற்கடிப்பதற்காக வகுக்கப்பட்ட திட்டம் குறித்தும் ‘சிரச’ தொலைக்காட்சிக்கு சுவாரஸ்யமான பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் மகிந்தவுக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசி அழைப்பை எடுத்தபோது அவர் தொடர்ந்து 19 நிமிடங்கள் என்னை தகாத வார்த்தைகளால் பேசினார். அமைதியாக மனவேதனையுடன் கேட்டுக்கொண்டிருந்த நான் மூன்று எழுத்து இரகசியத்தை கூறினேன். அவர் பதிலுக்கு தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டார். இந்த இரகசியம் எனக்கும், எனது தம்பி அநுரவுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று என பல உண்மைகளை ஊடகத்துக்கு முதன்முறையாக தெரிவித்தார். அவரது பேட்டியின் சுருக்கமான தமிழ் வடிவம்:

“நான் ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்தேன். மகிந்தவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கினேன். லசந்த போன்றோரும் எதிர்த்தனர். 62 கட்சி உறுப்பினர்களில் 56 பேர் எனது முட்டாள்தனமான முடிவை எதிர்த்தனர். இருந்தும் நான் ஸ்ரீ.ல.சு. கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்தவை நியமித்தேன்.

மைத்திரிபால சேனநாயக்க, மகிந்த ராஜபக்ஷ மற்றும் எனது தம்பி அநுர ஆகிய மூவரும் இணைந்து எனது அம்மாவை அரசியலில் இருந்து ஒதுக்க திட்டமிட்டிருந்தனர். எனது தம்பியையும் அவர்கள் இணைத்துக் கொண்டு கட்சியை பிரிக்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் நானும் எனது விஜயவும் இணைந்து தலைமைத்துவத்தை எடுக்க முடிவெடுத்தோம். ஆனால் மகிந்த கட்சி தலைமைத்துவத்தை பெற இருப்பதாகத் தெரிந்தது. ஆனால் ஒரு பெண்ணாக தலைமையை நான் ஏற்றேன்.

கேள்வி:மகிந்தவின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்ததா?

பதில்: இருந்தது. எல்லா சந்தர்ப்பங்களிலும் இல்லை. நான் அவரை பிரதமராக்கவும் எதிர்க்கட்சி தலைவராக்கவும் மாற்ற தயாரானேன். அவர் ரணிலுடன் இணைந்து எனக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முயற்சித்தார். எனக்கு தெரியும் எனது கட்சியிலுள்ள சிலர் அவரோடு இணைந்தே இருந்தனர்.

நான் நாட்டு மக்கள் நலன் கருதியே முடிவுகளை எடுத்தேன். என்னால் ரணிலுடன் இணைந்து செயற்பட முடியாது. அதேநேரம் கடந்த கால அனுபவங்களை நான் கூறினேன்.

மகிந்தவின் வெற்றிக்கு பின்னர் அவரை வாழ்த்துவதற்காக தொலைபேசி அழைப்பை எடுத்தேன். அப்போது மகிந்த தொலைபேசியில் தொடர்ந்து 19 நிமிடங்கள் தகாத வார்த்தைகளில் பேசினார். அதற்கு நான் மூன்று சொற்களில் மகிந்த, அநுர மற்றும் எனக்கும் மட்டுமே தெரிந்த இரகசியத்தை பதிலாக தெரிவித்தேன். தொலைபேசியை அவர் துண்டித்துவிட்டார். என்னை திட்டமிட்டு அரசியலிலிருந்து வெளியேற்றிய மனவேதனையில் இருந்த காலத்தில் அவர் தகாத வார்த்தைகளில் பேசினார். இரகசியமானது வேறு யாருக்கும் தெரியாது.

பின்னர் ஹெல உறுமயவின் எம்.பி ஒருவரை தூது அனுப்பி எனது உத்தியோகபூர்வ இல்லத்தை பறிக்க திட்டமிட்டார். வழக்கு தீர்ப்பில் அது அவரால் முடியாமல் போனது. பின்னர் எனது பாதுகாப்பை பறித்தார். விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் என்று எனது அலுவலகம் மூடப்பட்டது.

மகிந்தவுக்கும், கோதாவுக்கும் கடிதம் எழுதினேன். பாதுகாப்பை கேட்டேன். பதில் இல்லை, பின்னர் எனது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள நான் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் உதவியை நாடினேன். பழிவாங்கப்படுவதை முறையிட்டேன். அதன் பின்னரே எனது பாதுகாப்பை மீளப்பெற்றேன். குறித்த நாடுகளிற்கு முறைப்பாடு தெரிவித்ததன் பின்னர் மகிந்தவிடமிருந்து வந்த அழுத்தம் சற்று குறைந்தது. மகிந்தவின் உத்தரவால் நான் பல வழிகளில் பழிவாங்கப்பட்டு வதைக்கப்பட்டேன். எனக்காக எவருமே பேச முன்வரவில்லை. ஆனாலும் சிலர் இரகசியமாக தகவல்களை தருவார்கள்.

கேள்வி: அமைச்சரவைக்கு வரும்படி மகிந்த அழைத்தாரா?

பதில்: ஆம், வெளிநாட்டு அழுத்தத்திலிருந்து மீள மகிந்த பிரதான அமைச்சர்கள் சிலரின் ஊடாக செய்தி அனுப்பினார். சுமார் 15 பேர் என்னிடம் பேசினார்கள். மீண்டும் வருமாறு அழைத்தனர். 62 பேரும் மகிந்தவின் பக்கம் இருப்பதாக கவலைப்பட்டனர். ஆனால் நான் மீண்டும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற முடிவை எடுத்திருந்தேன்.

கேள்வி: இன்று எடுத்த முடிவை ஏன் மூன்று வருடங்களுக்கு முன் எடுக்கவில்லை?

பதில்: மகிந்த யுத்த வெற்றிக்கு பின்னர் பல தவறுகளை செய்தார். இதனை மாற்ற வேண்டும் அதற்கு பதில் யாரும் இருக்கின்றார்களா என சிந்தித்தபோது மைத்திரிபால சிறிசேன பெயர் வந்தது. அப்போது அவரை அழைத்து தலைமைத்துவத்தை ஏற்கத் தயாராகும்படி கூறினேன். மைத்திரி பொதுவாக வெட்கப்படுபவர். கட்சி மீது மிகுந்த பக்தி உள்ளவர்.

அவர் எனது அரசின் சிறந்த மனிதர். இலஞ்ச ஊழல் குற்றம் அற்றவர். எனினும் பொதுவான ஒரு வேட்பாளராக அதாவது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைவராக நிறுத்தவே முடிவு செய்தேன். பொதுவேட்பாளர் என்பது என்னுடைய திட்டம்.

மகிந்தவை பழிவாங்கவேண்டும் என்ற திட்டம் என்னிடம் இருக்கவில்லை. இந்த ஆட்சியை மாற்றி மக்கள் நலன் பேணவேண்டும் என்பதே எனது திட்டம். அத்துடன் எமது கட்சியை மிகவும் அபாயகரமான நிலையில் இருந்து காக்கவேண்டி இருந்தது.

கேள்வி: மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் அலரிமாளிகையில் இராணுவ புரட்சி ஏற்படுத்த திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படுகின்றதே?

பதில்: நான் ஒரு அரசியல் விஞ்ஞானி என்ற வகையில் இராணுவ புரட்சி ஏற்பட வாய்ப்பு இருந்ததாகவே கூறுவேன். பதவியில் இருந்த ஒருவர் அமைதியான முறையில் வெளியேறும் சந்தர்ப்பங்கள் குறைவு. இரண்டு மூன்று நாட்களின் பின்னராவது புரட்சி ஏற்பட்டிருக்கும். அவரோடு இருந்தவர்கள் கூறியதன்படி பிரதம நீதியரசர், இராணுவ தளபதி, பொலிஸ்மா அதிபர் ஏன் மகிந்தவை சூழ இருக்கவேண்டும். ரணில் இதனை நேரில் கண்ட சாட்சி.ஆயிரக்கணக்கில் இராணுவத்தினரை கொழும்புக்கு கொண்டுவந்ததன் அவசியம் என்ன?

முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு முன்னால் இராணுவங்கள் குவிக்கப்பட்டிருந்தன. எனது வீட்டுக்கு முன்னாலும் இராணுவத்தினர் பேரணியை தடுக்க என குவிக்கப்பட்டிருந்தனர். இப்படி பார்க்கையில் இராணுவ புரட்சி ஒன்றை ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது என்றே கூறமுடியும்.

கேள்வி: இந்த ஜனாதிபதி தேர்தலின் வெற்றிக்கு ஐக்கிய தேசிய கட்சிதான் காரணம் என்று சிலர் கூறுகின்றனர். சிலர் நீங்கள் என்று கூறுகின்றனர். இவ்வெற்றிக்கு பலர் உரிமை கோருகின்றனர். உண்மையில் நடந்தது என்ன?

பதில்: நிறைய தனிநபர்கள் வெற்றிக்கான காரணத்திற்கு உரிமை கோரினார்கள் என்பது யார் இதற்கு காரணம் என்று எனக்கு தெரியும். நான் ஐக்கிய தேசிய கட்சியுடன் முதலில் பேசினேன். அதன் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்மோடு இணைந்தது. இன்னொரு குழு மற்றும் ரணில் உட்பட அனைவரும் இறுதியில் எம்மோடு இணைந்தனர். இப்போது வெற்றிக்கு உரிமை கோருபவர்கள் எவரும் அப்போது எம்மோடு இருக்கவில்லை.

சோபித தேரர் முதலில் பேசினார். யாரும் அவ்வாறு பேசியிருக்க மாட்டார்கள். அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். சோபித தேரர் ஜனங்களிடம் பகிரங்கமாக பேசினார். அதற்கான பெறுபேறுதான் இப்போது நாம் வெற்றி. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியினர் மற்றும் தலைவர்கள் வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர் என்பதை கட்டாயமாக கூறவேண்டும். மைத்திரிபால சிறிசேன 3 வாரங்களுக்கு முன்பு தான் எம்மோடு இணைய முன்வந்தார். நவம்பர் 06 ஆம் திகதிதான் ரணிலுக்கு மைத்திரியின் பெயரை தெரிவித்தேன்.

கேள்வி நீங்கள் எங்கு சந்தித்துக்கொண்டீர்கள்? சிங்கப்பூரிலா அல்லது கொழும்பிலா?

பதில்: கொழும்பில் தான். என்னுடைய பாதுகாப்பு உத்தியோகத்தரை தவிர யாருக்கும் இது தெரியாது. நாங்கள் எனது நண்பர் ஒருவரின் வீட்டில் வைத்து சந்தித்து பேச்சுவார்ததை நடத்தினோம். ஐக்கிய தேசிய கட்சியினர் முதலில் ஏற்க மறுத்தனர். பிறகு அனைத்து அமைச்சர்களும் இரண்டு வாரங்களில் இணைந்து கொண்டனர்.

கேள்வி: மகிந்த புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது தொடர்பாக?

பதில் அது தொடர்பாக எனக்கு தெரியாது. ஆனால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.தே.கவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டும் தனித்தனியே போட்டியிடும். தேர்தலில் அதிக ஆசனங்களை பெறும் கட்சியின் தலைவர் நிறைவேற்று பிரதமராக தெரிவு செய்யப்படுவார். இதில் பெரிய பிரச்சினைகள் வரலாம். அதுபற்றி இன்னும் நாம் பேசவில்லை.

நான் ஒரு அரசியல் விஞ்ஞானி. அதற்கு முதல் நான் ஒரு மார்க்சிசவாதி. அரசியல் கட்சிகளுக்கு அமையவே அரசியல் செய்தேன். கட்சி மாறி ஐ.தே.க.வுக்கு போகவில்லை. தனியாக மஹஜன கட்சியை உருவாக்கினேன். ஆரம்பத்திலிருந்து என்னுடன் மங்கள சமவீர, எனது தம்பி அநுர போன்றோர் இருந்தனர்.

ஐ.தே.க. என்பது தனிக் கட்சி. அதற்கு கூட்டணி ஒத்து வராது. இருந்தும் கூட்டணி அமைக்க நான் உழைத்தேன். இதுவே ஐ.தே.க.வின் முதல் கூட்டணி. நான் வெளியே இருந்தும் பொதுவேட்பாளரை தெரிவு செய்ய இலகுவாக இருந்தது.