செய்திகள்

மகிந்த அரசைப் போன்று மைத்திரி அரசு செயற்பட முடியாது:மாவை

மகிந்த அரசைப் போன்று மைத்திரி அரசம் சிறுபான்மை மக்களைப் புறந்தள்ளி விட்டுச் செயற்பட முடியாது.அவ்வாறு செயற்பட்டால் கடந்த காலங்கள் போன்று இந்த அரசிற்கெதிராகவும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வடபிராந்திய உதவிப் பொது முகாமையாளர் மற்றும் பிராந்திய அலுவலகம் ஆகியன யாழ்.பண்ணைப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கெதிராகப் பாரிய அநீதி இழைக்கப்பட்டு வந்தது.இதனால் அந்த அரசிற்கெதிராகப் பல போராட்டங்களை நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தோம்.அத்தோடு அந்த அரசாங்கத்தையே மாற்ற வேண்டுமென விரும்பி மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றோம்.

இந்த மாற்றத்துக்காக விரும்பி வாக்களித்த மக்கள் பல பல எதிர்பார்ப்புக்களுடனேயே இருக்கின்றனர்.ஆனால்,தற்போது மாற்றத்தை விரும்பிய மக்களுக்கே பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.ஆகவே,இத்தகைய செயற்பாடுகளைக் கைவிட்டு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும்.

குறிப்பாகத் தமிழ்,முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏற்கனவே தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இருந்து வந்த ஐக்கியம் நமக்குப் பல சந்தர்ப்பங்களில் பலன் அளிக்கவில்லை.ஆட்சி மாற்றத்துக்காக நாம் ஒன்றுபட்டுச் செயற்பட்டிருந்தோம்.அந்த மாற்றத்தின் பின்னரான தற்போதைய நிலையிலும் ஒன்றுபட்டு நிற்பது அவசியமாகவுள்ளது.தற்போதும் எமது அன்றாட மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையிலேயே உள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.