செய்திகள்

மகிந்த ஆதரவு கூட்டத்தில் கலந்துகொண்டோர் மீது நடவடிக்கை! சுதந்திரக் கட்சி அறிவிப்பு

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்திருக்கிறார். அடுத்த பிரதம வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு ஆதரவுகோரி அக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

கட்சியின் எதிர்காலத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென டிலான் பெரேரா கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளியான மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, எல்.ஏ.எவ் பிவித்துரு, ஹெல உறுமய ஆகிய கட்சிகளினால் இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச மக்கள் ஐக்கிய தலைவர் தினேஸ் குணவர்தன. எல்.ஏ.எவ் தலைவர் வாசுதேவ நாணயக்கார, பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேடையில் சு.க. எம்.பி. டிலும் அமுனுகம அமர்ந்திருந்ததாகவும் அதேவேளை முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்க உட்பட மாகாண உறுப்பினர்கள் பலர் பங்கேற்றிருந்ததாகவும் கூறப்படுகின்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அனுப்பிவைத்த செய்தியை சு.க. வின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் மத்திய மாகாண முன்னாள் ஆளுநருமான டிக்கிரி கொப்பேகடுவ வாசித்திருந்தார்.