செய்திகள்

மகிந்த உட்பட எவரையும் தேர்தலில் சந்திக்கத் தயார்; ரணில் சவால்

எதிர்வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல எவரென்றாலும் தன்னுடன் மோத வருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சவால் விடுத்துள்ளதுடன் தன்னிடம் மக்கள் பலம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் தேர்தலில் பின் முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கம் ஒன்றாக நிலைப்படுத்தி நாட்டு மக்களுக்கு உதவி செய்வதே எமது நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டார்.

கல்கமுவை மற்றும் நிக்கரவெட்டி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடத்திய மக்கள் சந்திப்பின் போது அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் பேசுகையில்;

அபிவிருத்தி என்பது மக்களின் கைகளில் பணம் சேர்வதேயாகும். கடந்த காலத்தில் மகிந்த கோஷ்டி தங்களை  அபிவிருத்தி செய்தனரே தவிர மக்களை அல்ல. எமது நோக்கம் மக்களை அபிவிருத்தி செய்வதேயாகும்.

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நெல்லின் விலை 50 ரூபாவாக  உத்தரவாதப்படுத்தப்பட்டதுடன் அரச, தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எரிபொருள் உட்பட மற்றும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு மக்களுக்கு நன்மை பெற்றுக் கொடுக்கப்பட்டது.

இதனால் தமிழ், சிங்கள புத்தாண்டில் மக்களிடம் பணப் புழக்கம் நன்றாக இருந்தது. வியாபாரிகள்  சிறப்பாக வியாபாரம் இடம்பெற்றதாக குறிப்பிட்டனர். குறுகிய காலத்தில் நாம் மக்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தது போல் எதிர்காலத்தில் அவர்களுக்கு பாரிய நன்மைகளை பெற்றுக் கொடுப்போம்.

இதன் அடிப்படையில் 10 இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படும். மகிந்த வீதிகள் அமைத்து தற்காலிகமாக பெற்றுக் கொடுத்த தொழில் போல் இல்லாது நிரந்தரமானதாகவும் சிறப்பானதாகவும் இருக்கும்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் முழுப் பாராளுமன்றத்தையும் அரசாங்கம் ஒன்றாக நிலைப்படுத்தி  நாட்டு மக்களுக்கு உதவி செய்வதே எமது நோக்கமாகும். தற்போது மகிந்தவுடன் இருக்கும் ஜி.எல். பீரிஸ், பந்துல குணவர்தன, டலஸ் போன்றவர்கள் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அவர்களது ஊழல் மோசடி அரசாங்கத்தில் செய்வோம் என்கின்றனர்.

10 வருடமாக ஆட்சியில் இருந்து செய்ய முடியாது போனதை குறுகிய காலத்தில் எவ்வாறு செய்வீர்கள் எனக் கேட்கின்றேன். மேலும் இவர்கள் நான் பின்வாசல் வழியாக பிரதமராக வந்ததாகவும் கூறுகின்றனர். கடந்த தேர்தலில் எமது கொள்கையை ஏற்றுக் கொண்ட மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி என்னைப் பிரமதராக்கினர்.

என்னைக் குறைகூறும் இவர்களே சுழலும் கதவினால் வந்தவர்கள். அவர்களுக்கு என்னைக் குறை கூற அருகதையில்லை. கடந்த ஜனவரி 8 இல் மக்கள் இவர்களை நிராகரித்து விட்டனர். கடந்த தேர்தல்களில் மகிந்த ராஜபக்ஷ பிரபாகரனின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதியானார்.

தற்போது பிரபாகரனும் இல்லை. விடுதலைப் புலிகளும் இல்லை. இனி எதன் மூலம் என்னைத் தோற்கடிக்க முடியும்? கடந்த 10 வருடமாக ஆட்சியில் இருந்தவரை மக்கள் கடந்த தேர்தலில் நிராகரித்தனர்.

இவ்வாறான நிலையில் மீண்டும் கொண்டுவர மக்கள் தயாரில்லை. மகிந்த அல்ல எவராயினும் தேர்தலில் என்னுடன் மோத வருமாறு கோருகின்றேன். என்னிடமே மக்கள் பலம் உள்ளது.

18 ஆவது அரசியல் திருத்தத்தைக் கொண்டு வந்து அராஜகம் செய்ததை மக்கள் மறந்துவிடவில்லை. 20 ஆவது அரசியல் திருத்தத்தை குழப்புகின்றவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான குழுவினரே.

இப்போது இவர்கள் தேர்தலுக்கு தயங்குகின்றனர். தமது கட்சி தலைவருக்கு துரோகம் செய்கின்றவர்கள் மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டார்களா எனக் கேட்கின்றேன்.