செய்திகள்

“மகிந்த உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அரசே அதற்கு பொறுப்பு’

அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்களுக்கு தலைமை வகித்த காமினி திசாநாயக்கா மற்றும் லலித் அதுலத் முதலி போன்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்படுமோ என்ற அச்சம் தம்முள் இருப்பதாக தெரிவித்த முன்னாள் விவசாய துறை அமைச்சரும் , மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த யாப்பா அபயவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் இந்த அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தார்.

பொரளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மஹிந்த யாப்பா அபயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ;

பொது மக்கள் எம்மீது நம்பிக்கை கொண்டுள்ளதால் இன்று நாட்டிலுள்ள எதிர்க்கட்சியின் பொறுப்பினை ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியே முன்னெடுத்து வருகின்றது. இதனால் பல்வேறு எதிர்ப்புகளுக்கு பொது எதிரணி இன்று முகம் கொடுக்கவேண்டியுள்ளது. குறிப்பாக எமது தரப்பின் தலைவரான முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குண்டு துளைக்காத வாகனம் செயலிழந்து மாதக்கணக்காகிறது. அதனை திருத்திக்கொள்வதற்கு இந்த அரசாங்கம் எந்தவொரு கொடுப்பனவையும் இதுவரை கொடுக்கவில்லை. உத்தியோகபூர்வ வாசஸ்தலமொன்றை மஹிந்தவுக்கு வழங்குவதாக அரசாங்கம் கூறியது. ஆனால் அதனையும் இதுவரை வழங்கவில்லை.

அவரது பாதுகாப்புக் கூட குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியல் வரலாற்றில் இது போன்று அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களை ஒன்றுதிரட்டிய அரசியல் தலைவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள் உள்ளன. குறிப்பாக காமினி திசாநாயக்கா மற்றும் லலித் அதுலத் முதலி போன்றவர்களும் இதுபோன்று சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆகவே திசாநாயக்கா மற்றும் லலித் அதுலத் முதலிக்கும் ஏற்பட்ட அந்நிலை எமது பொது எதிரணிக்கும் ஏற்படுமா என்ற அச்சம் எமக்கு உள்ளது. ஆகவே மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கான முழு பொறுப்பினையும் இந்த அரசாங்கமே எற்றுக்கொள்ள வேண்டும்.

n10