செய்திகள்

மகிந்த குறித்த விசாரணைகளுக்கு இந்தியாவிடம் உதவி கோரும் இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய உதவுமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை முன்வைத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட மங்கள, மஹிந்த குடும்பத்தால் சட்டவிரோதமாக திரட்டப்பட்டதாக கூறப்படும் பணத்தை கண்டுபிடிக்க பல்வேறு சர்வதேச அமைப்புக்களின் ஆதரவு தேவை எனவும் இது குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் உதவி கோரியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் சுடப்படுவார்கள் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் சர்ச்சைக்குரிய கூற்று பற்றியும் மங்கள இதன்போது கருத்து வெளியிட்டார்.

பிரதமரின் இந்தக் கருத்து வெறுமனே உள்ளூர் மீனவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது ஒரு அச்சுறுத்தலாக மாத்திரமே இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வெறும் 26 மையில்களுக்கு அப்பால் இருந்தாலும், 27 வருடங்களின் பின்னர் இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு தற்போது விஜயம் செய்துள்ளமையால், மோடியின் இந்த வருகை தனித்துவம் மிக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.