செய்திகள்

மகிந்த, கோத்தாவின் இராணுவ பாதுகாப்பு முற்றாக நீக்கப்படும்

முக்கிய பிரமுகர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு அளிக்கப்படுவது சட்டவிரோதம் என்றும், மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான இராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கப்படும் என்றும்  பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்

கொழும்பில்  செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அவர்,

“மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான இராணுவப் பாதுகாப்பு கட்டம்கட்டமாக விலக்கப்பட்டு, முற்றிலுமாக நீக்கப்படும். அதற்குப் பதிலாக, காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும், பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

 மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்குக் கூட இராணுவப் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.

கடந்த   தேர்தலுக்குப் பின்னர்,   மகிந்த ராஜபக்ச, தனது பாதுகாப்புக்காக இராணுவத்தினரை வைத்துக் கொண்டார். இது சட்டவிரோமான செயற்பாடு.இப்போது மகிந்த ராஜபக்ச 103 காவல்துறையினர், 103 இராணுவத்தினர் என மொத்தம் 206 படையினரைத் தனது பாதுகாப்பு அணியில் கொண்டிருக்கிறார்.

அவரது பாதுகாப்பு அணியில் இருந்து 50 இராணுவத்தினரை விலக்கிக் கொள்வதற்காக, 50 காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.ஆனாலும், அந்த 50 இராணுவத்தினரும் இன்னமும் அவரது பாதுகாப்பு அணியிலேயே இருக்கின்றனர். இப்போது அவரது பாதுகாப்பு அணியில் 256 படையினர் உள்ளனர்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அளித்து வரும், 50 படையினர் விரைவில் விலக்கிக் கொள்ளப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக 50 சிறப்பு அதிரடிப்படையினர் நியமிக்கப்படுவர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

n10