செய்திகள்

மகிந்த ராஜபக்ஷவின் தோல்வியும் இந்திய, சீன கேந்திர நலன்களும்

– பவித்திரன் –

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிருக்கும். தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. மகிந்த ராஜபக்‌ஷவின் தோல்வி உறுதியாகியிருந்தது.

அப்போதுதான் மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த நேரம் தேர்தலின் முடிவுகள் முழுமையாக வெளிவந்திருக்கவில்லை. முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கவுமில்லை. ஆனால், மைத்திரியின் வெற்றி உறுதியாகியிருந்தது.

அழைத்தவர் வேறு யாருமல்ல இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதான்!

மைத்திரிக்கு வாழத்துத் தெரிவித்த மோடி, புதுடில்லிக்கு விஜயம் செய்யுமாறும் அவருக்கு அழைப்பு விடுத்தார். தேர்தலுக்காக பொலநறுவைக்குச் சென்றிருந்த மைத்திரிபால அப்போதுதான் கொழும்பு திரும்பிக்கொண்டிருந்தார்.

மைத்திரியுடன் தொலைபேசியில் பேசியது குறித்து தன்னுடைய ரூவிட்டர் பக்கத்தில் உடனடியாகவே மோடி இவ்வாறு குறிப்பிடுகின்றார்:

“I spoke to Shri Maithripala Sirisena & congratulated him. I congratulate the people of Sri Lanka on the peaceful & democratic poll process. As a close friend & neighbour, reaffirmed India’s continued solidarity & support for Sri Lanka’s peace, development & prosperity.”

ஜனவரி 09 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு மோடியின் ருவிட்டர் பக்கத்தில் இந்தத் தகவல் பதிவாகியுள்ளது.

மோடியின் இந்த அழைப்பு மைத்திரிக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுப்பதாக அமைந்திருக்கும் எனக் கூறலாம். மைத்திரியை வாழ்த்திய முதலாவது வெளிநாட்டுத் தலைவர் மோடியதான்.

அனைவரையும் முந்திக்கொண்ட மோடியின் இந்த அழைப்பும், வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்த விடயங்களும் பல உண்மைகளை வெளிப்படுத்தின. முழுமையான முடிவுகள் வெளிவராத நிலையில் முந்திக்கொண்டு அவர் இவ்வாறு வாழ்தைத் தெரிவித்திருப்பது, மைத்திரியின் வெற்றியை அவர் எதிர்பார்த்திருந்தார் என்பதை உறுதிப்படுத்துகின்றது. இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மைத்திரியின் காலத்தில் பலப்படும் என்ற நம்பிக்கையை வெறுமனே சம்பிரதாயபூர்வமாக அவர் வெளிப்படுத்தவில்லை.

மங்களவை புது டில்லிக்கு
அழைத்த சுஷ்மா சுவராஜ்

mangala_susma-01மைத்திரி தலைமையிலான புதிய இலங்கை அரசுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு மோடி நிர்வாகம் எந்தளவுக்கு அக்கறையாகவுள்ளது என்பதை உணர்த்தும் மற்றொரு சம்பவமும் இரண்டு நாட்களில் இடம்பெற்றது. மைத்திரியின் புதிய அமைச்சரவை பதவியேற்று இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே, புதிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு வாழத்துக்களைத் தெரிவிக்க தொலைபேசியில் தொடர்புகொண்டார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.

வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறும் அவருக்கு அழைப்பு விடுத்தார் சுஷ்மா. அழைப்பை ஏற்றுக்கொண்ட மங்கள சமரவீர எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 18 ஆம் திகதி புதுடில்லி பறக்கின்றார். ஜனாதிபதி மைத்திரி பெப்ரவரி மாதத்தில் இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்துக்கான ஏற்படுகள் குறித்தும் புதுடில்லியிலிருக்கும் போது மங்கள ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகின்றது.

இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையைப் பொறுத்தவரையில் இந்தியாவுடனான நல்லுறவைப் பேணுவது என்பதுதான் அதன் முன்னுரிமைக்குள்ள விடயமாகும். இந்தியாவைப் புறக்கணித்து இந்தியாவின் எதிரிகளுடன் கைகேர்க்கும் இலங்கைத் தலைவர்கள் நெருக்கடிகளை எதிர்கொள்வார்கள் என்பதற்கு மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது உதாரணம்தான். முதலாவது உதாரணமாக இருப்பவர் ஜெயவர்த்தன.

ஜெயவர்த்தனவும் ராஜபக்ஷவும்
இந்திய கேந்திர நலன்களும்

mahinda - modi1977 இல் பதவிக்கு வந்தபோது அணிசாராக் கொள்கைதான் தமது வெளிநாட்டுக்கொள்னை எனப் பிரகடனப்படுத்திய ஜெயவர்த்தன, அமெரிக்காவுடன் கைகோர்த்தார். வோய்ஸ் ஒப் அமெரிக்காவுக்கு இலங்கையில் இடமளித்தார். இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி திருமலை எண்ணெய்க் குதங்களை அமெரிக்க சார்பான கம்பணி ஒன்றுக்கு வழங்கினார். இவை அனைத்தும் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமானது என்பது ஜெயவர்த்தனவுக்குத் தெரிந்தேயிருந்தது. இந்த நிலையில்தான் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு ஆயுதங்களும் ஆயுதப்பயிற்சியும் கொடுத்து ஜெயவர்த்தனவுக்கு எதிராக அவர்களை அனுப்பிவைத்தது இந்தியா. இது இலங்கை – இந்திய ஒப்பந்தம் வரை சென்றது தெரிந்த செய்திதான்.

இப்போது போர் முடிவடைந்துவிட்டது. விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர். இந்த நிலையில், தனக்கு எதிராக அல்லது தன்னைப் பணியவைப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய ஆயுதம் எதுவும் இந்தியாவிடம் இல்லை என்பதை மகிந்த ராஜபக்ஷ தெரிந்தேயிருந்தார். அதனால், இந்தியாவின் எச்சரிக்கைகளை அவர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அத்துடன் ஜெனீவா போன்ற நெருக்கடிகள் வரும்போது இந்தியா தன்னைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. ஜெனிவாவில் மகிந்தவைப் பாதுகாக்கும் வகையில் இந்தியா செயற்பட்டமைக்கு வேறு காரணங்கள் இருந்துள்ளன. ஆனால், மகிந்தவை எச்சரிப்பதற்கு ஜெனீவாவை இந்தியா பயன்படுத்திக்கொண்டது.

இந்தப் பின்னணியில்தான் புதுடில்லிக்குச் சீற்றத்தை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்திருந்தும் சீனாவுடனான உறவுகளை ராஜபக்‌ஷ பலப்படுத்திக்கொண்டார். சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கும் மகிந்த அனுமதித்தார். இது தொடர்பில் இந்தியா வெளிப்படையாகத் தெரிவித்த ஆட்சேபனை மகிந்த கவனத்திற்கொள்ளவும் தயாராகவிருக்கவில்லை.

டில்லிக்கு அழைக்கப்பட்ட
கோதாபாய ராஜபக்‌ஷ

gothaஅப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவை புதுடில்லிக்கு அழைத்த இந்திய அரசாங்கம், சீனாவின் நீர்மூழ்கிகள் இலங்கையில் நிலைகொண்டிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதை நேரில் தெரிவித்தது. அதற்கு இனிமேல் அனுமதி கொடுகக்கூடாது என்பதைச் சொல்வதற்குத்தான் கோதாவை இந்தியா அழைத்திருந்தது. கோதா அந்த எச்சரிக்கையை அசட்டை செய்தார். அதற்குப் பின்னரும் மற்றுமொரு சீன நீர்மூழ்கி இலங்கை வந்து தரித்தபோது புதுடில்லி பொறுமையை இழந்தது.

நேபாளத்தில் சார்க் உச்சி மாநாட்டுக்குச் சென்றிருந்தபோது மகிந்த ராஜபக்ஷவுடன் பேசிய இந்தியப் பிரதமர், எச்சரிக்கும் தொனியில் சில விடயங்களைச் சொன்னதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையும் அசட்டை செய்த மகிந்த, ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த பின்னர் திருப்பதி வெங்கசேப் பெருமானைத் தரிசிக்க சென்றபோது கூட இந்தியா பாதுகாப்பை வழங்கியது. ஆனால், மகிந்தவின் தொடர்ச்சியான செயற்பாடுகளால் பொறுமையை இழந்துவிட்ட நிலையில்தான் இந்தியா இருந்தது.

இந்தியாவை அசட்டை செய்யும் வகையில் மகிந்த நடந்துகொண்டமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று. இந்தியாவினால் என்ன செய்துவிட முடியும் என்ற அவரது எண்ணம். இரண்டு, இந்தியா சீற்றமடையும் நிலையில் புதுடில்லியில் செல்வாக்குள்ள தமது நண்பர்களான சுப்பிரமணியம் சுவாமி மற்றும் சல்மான் கான் போன்றவர்கள் அதனைச் சமாளித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை.

மகிந்தவை பலப்படுத்திய
சீனாவின் நோக்கங்கள்

விடுதலைப் புலிகள் போரில் அழிக்கப்பட்டமையால், கொழும்பை கட்டுப்படுத்துவதற்கான பிடி தளர்ந்த நிலையில்தான் இந்தியா இருக்கின்றது என்பது உண்மை. இதனை உணர்ந்துகொண்ட மகிந்த சீனாவின் பக்கம் தன்னுடைய நெருக்கத்தை மேலும் அதிகப்படுத்திக்கொண்டார். மகிந்தவுக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்தால் அவர் மேலும் மேலும் சீனா பக்கம் சென்றுவிடுவார் என்பதால் இந்தியாவும் அதிகளவுக்கு அழுத்தத்தைக் கொடுக்கத் தயங்கியது. சீனாவுக்கு இது வசதியாக இருந்தது. இதனை தமது நலன்களுக்கு தராளமாகப் பயன்படுத்திக்கொள்வதில் சீனாவும் வெற்றி பெற்றது.

மகிந்தவைப் பலப்படுத்திக்கொள்வதுதான் தமது கேந்திர நலன்களுக்குப் பாதுகாப்பானது எனக் கருதிய சீனா அதற்கேற்றவாறு செயற்பட்டது. உவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற போது, இலங்கை வந்த சீன ஜனாதிபதி ஜின் பிங், பாரிய பொருளாதார உதவிகளை அறிவித்தார். அவர் கொழும்பு வந்தபோதுதான் எரிபொருட்களின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டது என்பதும் கவனிக்கத்தக்கது. இதன்மூலம் சீனா தொடர்பில் ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்த ராஜபக்‌ஷ அரசு முயன்றது.

மகிந்த ராஜபக்‌ஷ அதிகாரத்தில் இருக்கும் வரையில்தான் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை வரிவாக்க முடியும் என்பது சீனாவுக்குத் தெரிந்தேயிருந்தது. ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு மகிந்த வெளியிட்ட பட்ஜெட் கூட சீனாவின் உதவியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகவே சொல்லப்படுகின்றது.

03

சீன ஜனாதிபதிக்கு கொழும்பில் செங்கம்பள வரவேற்பு

இந்தியாவின் இராஜதந்திர 
நகர்வுகளும் தேர்தலும்

இவை அனைத்தும் புதுடில்லிக்கு கடுஞ்சீற்றத்தை ஏற்படுத்தியது. சீனாவைப் பொறுத்தவரையில் கொழும்பிலுள்ள அதன் தூதரகம் மகிந்தவுடன் மட்டும்தான் தொடர்புகளை வைத்திருந்தது. ஆனால், இந்தியத் தூரகம் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தது. இலங்கையின் அரசியல் நிலைமைகளையும் நெருக்கமாகவும் துல்லியமாகவும் அறிந்துவைத்திருந்தது. குறிப்பாக சிறுபான்மையினக் கட்சிகளுடன் இந்தியத் தூதரகத்துக்குள்ள நெருக்கம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இந்தப் பின்னணியில்தான் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இந்தியாவும் காய்களை நகர்த்தியது. இதில் சம்பந்தப்பட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் இந்தியத் தூதரக உயர் அதிகாரி ஒருவர் ராஜபக்‌ஷ ஆட்சியின் இறுதிக் காலப்பகுதியில் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் உள்ளது. பொது வேட்பாளராக மைத்திரி களம் இறக்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட தூதரக அதிகாரி மைத்திரியை சந்தித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அதாவது பொதுவேட்பாளர் நியமனம், அதன் பின்னர் இடம்பெற்ற காய் நகர்த்தல்களில் குறிப்பிட்ட இந்திய அதிகாரி சம்பந்தப்பட்டிருந்ததாக ராஜபக்‌ஷ தரப்பு சந்தேகப்பட்டது.

இந்தவகையில்தான் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி பெற்றுக்கொண்ட வெற்றி, பிராந்தியத்தைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கான வெற்றியாகவும், சீனாவுக்கான தோல்வியாகவும் கருதப்படுகின்றது. மகிந்தவின் தோல்வி சீனாவின் பட்டுப்பாதைத் திட்ட கனவை கலைந்துபோகச் செய்திருக்கலாம். பிராந்தியத்தில் தனக்கு எதிரான செயற்பாடுகளை இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

இந்த நிலையில்தான் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில் மைத்திரியை வாழ்த்துவதற்காக கடந்த வெள்ளி காலை 8.30 மணிக்கே இந்தியப் பிரதமர் தொலைபேசியை எடுத்தார்.