செய்திகள்

மகிந்த ராஜபக்‌ஷவின் அடுத்த கட்ட நகர்வு என்ன? மூன்றாவது அணிக்கு தலைமையேற்பாரா??

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்பாராத வகையில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்‌ஷ அம்பாந்தோட்டையிலுள்ள அவரது இல்லத்திலேயே பெரும்பாலும் இருக்கின்ற அதேவேளையில், அவரை மீண்டும் தீவிர அரசியலுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அவரது இல்லத்துக்கு தினசரி சென்றுவரும் ஆதரவாளர்களும் இதற்கான அழைப்பை விடுத்துவருகின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் தலைமைப் பதவியை விட்டுக்கொடுக்கப்போவதில்லை என மகிந்த ராஜபக்‌ஷ பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். இருந்தபோதிலும், கட்சிக்குள் உருவாகிய அழுத்தங்களையடுத்து தலைமைப் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.

சபாநாயகரின் இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற தனியான சந்திப்பு ஒன்றையடுத்தே தலைமைப்பதவியை விட்டுக்கொடுக்க மகிந்த முன்வந்தார். கட்சி முக்கியஸ்த்தர்களான நிமால் சிறிபால டி சில்வா உட்பட பலர் கொடுத்த அழுத்தத்தையடுத்தே இதற்கு அவர் இணங்கினார். இதற்காக மைத்திரியிடம் தனிப்பட்ட முறையில் அவர் முன்வைத்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

maithiriகட்சியின் கௌரவ பதவிகளில் ஒன்றான போஷகர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. கட்சியின் அடிப்படை உறுப்பினராக அவர் தொடர்ந்தும் உள்ளார். இப்போது அதற்கும் ஆபத்துவரும்போல உள்ளது. அலரி மாளிகையில் இடம்பெற்ற சதி முயற்சி குறித்த விசாரணையில் மகிந்த சம்பந்தப்பட்டிருந்தார் எனக் காணப்பட்டால் கட்சி உறுப்புரிமையையும் போஷகர் பதவியையும் அவர் இழப்பார்.

தற்போதைய விசாரணைகள் அதனை இலக்காகக் கொண்டுதான் முன்னெடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. இது மகிந்தவின் அரசியலுக்கு முற்றுப்புள்ளியை வைக்குமா அல்லது, மற்றொரு புதிய பாதையைத் திறக்குமா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

இதற்கு மேலாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தல் பிரச்சாரங்களுக்கு மைத்திரிபாலவே தலைமை தாங்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். சுதந்திரக் கட்சிக்கு அல்ல, சுதந்திரக் கட்சியைப் பிரதானமாகக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரச்சாரத்துக்கு மைத்திரி தலைமைதாங்க வேண்டும் என்றே அங்கு கோரிக்கை விடப்பட்டது. அதனை மைத்திரி ஏற்றுக்கொண்டார். இது மகிந்தவுக்கு இனி சுதந்திரக் கட்சியில் மட்டுமன்றி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் இடமில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

vimal-weerawanshaஇந்த நிலையில்தான் புதிய கட்சி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துவருகின்றார். தென்னிலங்கையிலுள்ள இனவாத சக்திகளை இணைகக்கூடிய வகையில் இவ்வாறான ஒரு கட்சியை உருவாக்கி மகிந்த அதற்குத் தலைமைதாங்க வேண்டும் என்றும் அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அவர் போட்டியிட வேண்டும் எனவும் விமல் வீரவன்ச கேட்டிருக்கின்றார்.

விமல் வீரவன்சவைப் பொறுத்தவரையில் மகிந்தவின் தோல்வியுடன் அனாதரவாக விடப்பட்டுள்ளார். ஐ.தே.க. அவரைக் கணக்கில் எடுக்கப்போவதில்லை. அதேபோல மைத்திரியும் உள்ளார்.  இதனைவிட விமல் வீரவன்சவுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தநிலையில் தனித்து நிற்பது தன்னைப் பலவீனப்படுத்தும் என விமல் நினைக்கிறார். இனவாத சக்திகளுடன் இணைந்திருப்பது தன்னைப் பலப்படுத்தும் என அவர் நினைக்கிறார்.

இந்தநிலையில்தான் மகிந்தவை விட அவரை தீவிர அரசியலுக்குக் கொண்டுவர வேண்டிய தேவை விமலுக்குள்ளது. மகிந்தவை மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டுவருவதன் மூலம் சிங்கள இனவாத சக்திகளை மீண்டும் ஒரே அணியில் கொண்டுவர முடியும் என விமல் கணக்குப் போடுகின்றார். என்னதான் இருந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த 57 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதை கணக்கில் எடுக்காமல்விட முடியாது. மைத்திரியின் தலைமையில் அதிருப்தியடைந்திருக்கும் இடதுசாரிக் கட்சிகள் சிலவும் குறிப்பாக வாசுதேவ போன்றவர்களும் மகிந்தவின் தலைமையை விரும்புகின்றார்கள்.

Sri Lanka Electionஅதனால், மகிந்த தலைமையில் மூன்றாவது அணி ஒன்றை உருவாக்குவது விமலின் திட்டமாக உள்ளது. அவ்வாறான ஒரு அணி உருவானால், அடுத்த பொதுத் தேர்தலில் மும்முனைப்போட்டி இடம்பெறும். ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐ.தே.க. பொதுத் தேர்தலை சந்திக்கும். மைத்திரி தலைமையில் சுதந்திரக் கட்சி போட்டியிடும். நிமால் சிறிபால டி சில்வா சுதந்திரக் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார். மைத்திரி தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பார். மகிந்த தலைமையில் மூன்றாவது அணி களம் இறங்கும்.

மூன்றாவது அணி களம் இறங்கினால், சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கிகளை அணிசமானளவுக்கு அரித்துச் சென்றுவிடும் என்பது உண்மை. இது மைத்திரி தலைமைக்கு ஆபத்தானதாக முடியலாம். அதனைவிட பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத குழப்பமான நிலைமையும் உருவாகும்.

இருந்தபோதிலும், விமலின் வலையில் மகிந்த விழுவாரா என்ற கேள்வி உள்ளது. காரணம் மகிந்தவைப் பொறுத்த வரை, இன்று அவருக்குள்ள பிரச்சினை எதிர்கால அரசியலல்ல. புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணைகளிலிருந்து தன்னையும், பிள்ளைகளையும் பாதுகாத்துக் கொள்வதுதான் அவரது பிரதான பிரச்சினை. அதேபோல, மகிந்த மீண்டும் தீவிர அரசியலுக்குள் வருவதைத் தடுப்பதற்கான ஆயுதமாக இந்த விசாரணைகளை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளும் என்பதும் எதிர்பார்க்கக்கூடியதுதான்.

இந்தப் பின்னணியில் சுவாரஸ்யமான அரசியல் நகர்வுகளை அடுத்துவரும் வாரங்களில் பார்க்கலாம்!

கொழும்பிலிருந்து சமகளத்துக்காக பவித்திரன்