செய்திகள்

மக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டக்ளஸ்

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பக் கூடிய சூழ்நிலை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை சீர்குலைத்துவிடும் வகையிலான சம்பவங்கள் யாழ். குடா நாட்டில் இடம்பெற்று வருவதைத் தடுக்க அரசு முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இவ் விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், யாழ். குடா நாட்டில் அண்மைக் காலமாக மர்ம நபர்களது நடமாட்டங்கள் இரவு வேளைகளில் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொது மக்கள் அச்சத்துடனும், பதற்றத்துடனும் காணப்படுவதாகவும் எனக்கு அறியக் கிடைத்துள்ளது.

நாட்டின் தேசிய நல்லிணக்கம் கருதி நாம் தொடர்ந்து செயற்பட்டுவரும் நிலையில், இந்த அரசும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முனைந்திருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறானதொரு சூழ்நிலையில், எமது மக்களை அச்சத்திற்குள்ளும், பதற்றத்திற்குள்ளும் தள்ளிவிடும் சம்பவங்களை சில தீய சக்திகள் முன்னெடுத்து வருவதாக அறிய முடிகிறது.

எனவே, இவ்வாறான சக்திகளை இனங்கண்டு, சட்டத்தின முன் நிறுத்துவதற்கும், எமது மக்களை அச்சத்திற்கும், பதற்றத்திற்கும் ஆளாக்குகின்ற சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே சமயம், தேசிய நல்லிணக்கம் குறித்த நம்பிக்கையினை எமது மக்களிடையே கட்டியெழுப்பும் நோக்கிலான செயற்பாடுகளை மேலும் வளர்க்கும் வகையிலும் அரசு செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.