செய்திகள்

மக்களின் நலன் கருதி இந்தியா சிந்தித்து செயற்படும்

சம்பூர் அனல் மின் திட்ட விவகாரத்தில், அந்தப் பகுதி  மக்களின் நலன் கருதி இந்தியா சிந்தித்து செயற்படும் என தான் நம்புவதாகத்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மூதூரில்   அவர் இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில்,

”சம்பூர் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் அவை முதலீட்டுச் சபையினூடாக தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டிருந்தன. அதில் 818 ஏக்கர் காணிகளை முதலில் நாம் விடுவிக்க முடிந்தது.

பின்னர் கடற்படையினர் வைத்திருந்த 237 ஏக்கர் காணியையும் படையினரிடமிருந்து விடுவிக்க முடிந்தது.

தற்போது அங்கு இந்தியாவின் உதவியுடன் அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

அது தொடர்பான பிரச்சினை சிக்கல்கள் மக்களால் முன்வைக்கபட்டு வருகின்றன. இந்த விடயங்களில் எமது மக்களுக்கு பாதிப்புள்ளது. இதில் பல பிரச்சினைகள் உள்ளமை தொடர்பில் மக்கள் விடயங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த விடயத்தை நாம் பக்குவமாகவும் நிதானமாகவும் அணுக வேண்டும். ஏனெனில்  இந்தியா இத்திட்டத்தை அமைக்கவுள்ளது. இந்தியா எமக்கு பலவகையிலும் உதவுகின்ற நாடாகும் .

எனினும் மக்கள் இந்தத்திட்டத்தினால் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்த விடயத்தை இந்தியாவும் ஆராயும் என நான் நம்புகின்றேன்.

இந்தவிடயம் தொடர்பாக நாம் இந்தியாவுடனும் சிறிலங்கா அரசுடனும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களுடனும் பேசி ஒரு முடிவைக் காண்போம்.

அதற்காக எவரும் அவசரப்படக்கூடாது. ஒருவருடன் கவலையளிக்கும் வகையில் நாம் செயற்பட முடியாது.

இந்தியாவின் உதவியை நாம் உதாசீனம் செய்ய முடியாது. இந்தியா  பல விடயங்களில் பல சந்தர்ப்பங்களில் எமக்கு உதவியுள்ளது.

எனவே எமது மக்கள் நிதானமாக சிந்தித்து பக்குவமாக செயற்பட வேண்டும். இந்தியாவும் இந்த மக்களின் பிரச்சினையை ஆராய்ந்து நல்ல முடிவை எடுக்கும் என நான் நம்புகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

n10