மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் மீறப்படுகின்றன: சோபித தேரர் சீற்றம்
மக்களுக்குத் கொடுத்த வாக்குறுதிகளை மீறும் வகையில் தேசிய அரசின் செயற்பாடுகள் அமைந்துவருகின்றன. அரசாங்கமும் சர்வாதிகாரப்பாதையையே தேர்ந்தெடுத்துள்ளது என சமூக நீதிக்கான மக்கள் இயக்கத் தின் இணைப்பாளரும் கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.
தேசிய அரசிலும் நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படாவிடின் மீண்டும் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தவும் தயங்கமாட்டோம் எனவும் அவர் வலியுறுத்தினார். தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் விமர்சிக்கப்படுகின்ற நிலையில் அது தொட ர்பில் வினவியபோதே சோபித தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
“கடந்த பத்து வருடங்களில் நாட்டில் இடம்பெற்ற மோசமான ஆட்சிக்கு எதிராக நாம் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடி அதில் வெற்றிபெற்றுள்ளோம். இவ் வெற்றி அவசியமானதொரு தருணத்தில் மக்களுக்கு கிடைத்த ஜனநாயக வெற்றியாகும். எனவே ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து மாற்றத்திற்கான அடித்தளத்தினை ஏற்படுத்தும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இன்று தேசிய அரசாங்கத் தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
மைத்திரிபால சிறிசேன இவ் ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்களை நீக்குவதாக வாக்குக் கொடுத்தே ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். ஆனால், இன்று 19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படுவதே இவர்களின் இழுத்தடிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. ஆகவே, இன்று புதிதாக அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கமும் சர்வாதிகாரத்தின் பாதையினையே தெரிவு செய்து வருகின்றது.
மேலும் நாம் மக்களின் நலனுக்காகவே புதிய ஆட்சியினை ஆரம்பித்தோம். ஆனால் மக்கள் மீண்டும் அரசின் மீது அதிருப்தியடைந்துள்ளனர். இவ்வாறான நிலைமையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கவும் ஜனநாயக ஆட்சியினை பலப்படுத்தவும் மீண்டும் ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்தவேண்டுமாயின் அதற்கும் நாம் தயாராக உள்ளோம். அதனை அரசாங்கம் மனதில் வைத்துக்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.