செய்திகள்

மக்களை மனதில் நிறுத்தியே அமைச்சுக்களை பெற்றுள்ளோம்: அமைச்சர் கி.துரைராஜசிங்கம்

இன்று தமிழ் மக்களுக்கு சிறந்த தலைமைத்துவம் உள்ளது. தலைமைத்துவத்தினூடாக தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை தட்டிக் கொடுத்து அறிவூட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மண்டூர் கமநல அமைப்புகளின் ஏற்பாட்டில் மண்டூர் கமநல அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் நேற்று சந்திப்பொன்றினை மேற்கொண்டார்.

இச்சந்திப்பானது மண்டூர் பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஓய்வு பெற்ற விவசாயப் போதனாசிரியர் பரமானந்தராஜர் தலைமையில் இடம்பெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
அமைச்சு என்பதும் அமைச்சுப் பதவி என்பதும் தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் புதுமையான சொல். நானும் ஒரு விவசாயியின் மகன்தான் விவசாயிகள் படும் கஷ்டமும் கவலையும் அறிந்தவனே நான். எமது விவசாய பாரம்பரியம் விடிவெள்ளி பதிந்தால் அதன் பின் தூங்கவே கூடாது. நூலகத்தில் வெளிச்சம் படும் பொது வயலில் வேலை செய்தல் வேண்டம். கலப்பையில் உழவடித்து நாம் வயலில் வேலை செய்ய ஆரம்பித்த பின்னர் தான் சூரியனே உதிக்க ஆரம்பிக்கும். அவ்வாறு வேளாண்மை செய்தவர்கள் நாம். விதை விதைத்து வயலில் காவல் இருந்து அந்த வயலில் வேளாண்மை தலையசைத்து வரும் அழகைக் கண்டு சந்தோசப்படுவர்கள் விவசாயிகள்.

எமது படுவான்கரைப் பிரதேசம் மருத நிலமாகும். இந்த மண்டூர் பிரதேசம் மிகப்பழமை வாய்ந்தது எமது பட்டிப்பளை பிரதேசம் தான் தற்போது கல்லோயாவாக மாற்றப்பட்டுள்ளது. இப்பிரதேசம் பெருமை வாய்ந்த பிரதேசம்.

இங்கு எமது விவசாயிகள் கூறிய விடயங்கள் பிரச்சினைகள் எனக்கு புதிய விடயம் அல்ல. ஆனால் எந்த இடத்தில் எவ்வாறான தேவைகள் இருக்கின்றன என்பதே நான் இங்கு தெரிந்து கொண்ட விடயம். இவ்விடயம் தொடர்பில் நான் கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பேன்.

ஒரு விடயம் பற்றி உணர்வூட்டிய பின்னர் தான் அதனைப் பற்றி அறிவூட்ட வேண்டும். எனவே ஒரு விடயம் பற்றி அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் அது தொடர்பில் அறிந்து கொள்ள முன்வருவார்கள்.

ஒரு தலைவர் என்பவன் முன்னே செல்பவரை இழுத்துப்பிடிக்க வேண்டும், பின்னே வருபவரை இழுத்து எடுக்க வேண்டும், அருகில் வருபவரை தட்டிக் கொடுத்து வர வேண்டும். அது போல் தான் எமக்கு ஒரு தலைமைத்துவம் இருக்கின்றது.

எனவே எமது தலைமைத்துவத்தினூடாக தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களை தட்டிக் கொடுத்து அறிவூட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் நாம் தவறவிட்டவைகளை மறுபரிசீலனை செய்து பார்க்க வேண்டும். நாம் எந்ததெந்த நேரத்தில் எவற்றைச் செய்யாது விட்டோமோ அல்லது எவற்றை தவற விட்டோமோ என்பதை சிந்தித்து அவற்றை இக்காலத்தில் கிடைக்கப்பெற்றுள்ள சந்தர்ப்பத்திற்கு ஏற்றால் போல் மேற்கொள்வது தொடர்பில் சிந்திக்க வேண்டும்.

எது ஒன்று கிடைக்கின்றதோ அதனை மிகவும் கவனமாக அடுத்த கட்டத்திற்கு மிகவும் அவதானமாகக் கொண்டு செல்ல வேண்டியது எமது பொறுப்பு. இந்த ஆட்சி மாற்றம் என்பது எம்மையும் எமது மக்களைப் பொருத்த வரையில்நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக அமைந்தது. இதனை ஆண்டியைப் போல் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்து விடக் கூடாது.

எமது எதிர்சக்திகள் கண்களை மூடிக் கொண்டு இருக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றன. எனவே அவர்களை உசுப்பேற்றும் விதத்தில் எமது செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது. அவர்களை உசிப்பி விடாமல் நாம் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து எமது இலக்கினை நோக்கி நகர வேண்டம்.

தேவையற்ற தீவிரவாதம் தேவையில்லை என்று எமது தலைவர் சம்மந்தன் ஐயா தெரிவித்துள்ளார். இக்கருத்தினுள் பல ஆளமான விடயங்கள் இருக்கின்றன. பலர் எமக்கு தெரிந்தே எம்மத்தியில் தேவையற்ற விடயங்களைக் கக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் பாதிக்கப்படுவது யார் என்று நாம் ஒரு கனம் சிந்திக்க வேண்டும்.

யாருக்கும் கிடைக்க முடியாத தலைவர் எமக்கு கிடைத்திருக்கின்றார். அவர் காட்டும் வழி எமது எதிர்காலத்திற்குரியதாக இருக்கின்றது. உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருமே அவரை நோக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். எமது வழியில் அவதானமாகச் சென்றுதான் எமது நோக்கத்தினை நிறைவேற்ற வேண்டும்.

நாம் தற்போது மாகாணசபை ஆட்சிசியில் இணைந்திருக்கின்றோம். இவ்விடயத்தில் பலருக்கு பல கேள்விகள் எழலாம். மத்தியில் அமைச்சுப் பதவி தேவையில்லை என்று விட்டு மாகாணத்தில் ஆட்சி அமைத்துள்ளார்கள் என்று. மத்திய அரசாங்கம் கொள்கைகள் வகுக்கும் இடம் எனவே அங்கு நாம் எமது கொள்கைகளுக்காக வாதிட வேண்டி இருக்கின்றது. அதில் அமைச்சுப் பதவியைப் பெற்றால் எமது கொள்கைகள் புறக்கணிக்கப்படும் போது மௌனம் சாதிக்க நேரிடும். பல அசௌகரியங்களை நாம் சந்திக்க வே;ணடி வரும் இதனால் தான் அதனைப் பெறவில்லை.

ஆனால் மாகாணசபை அவ்வாறல்ல. இது நிதியினைக் கையாளுகின்ற இடம். அத்துடன் இங்கு எதிரணியில் இருந்து பலவற்றை இழந்திருக்கின்றோம். எமது மக்களுக்கு பல தேவைகள் இருக்கின்றன அவற்றை நிறைவேற்ற வேண்டும். அதற்காகவே இவ்வமைச்சுகளைப் பெற்றுள்ளோம்.

இந்த மாகாணசபையில் உள்ள ஏழு பதவிகளில் மூன்றினை எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. ஆனால் முதலமைச்சினை விட்டுவிட்டு இந்த அமைச்சுகளைப் பெற்றுள்ளார்கள் என்று இன்னுமொரு கேள்வியும் எமக்கு முன்னால் விடப்பட்டது. அவர்கள் அமைச்சுப்பதவியைப் பெற்றது வேறுவிதம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினைப் போன்றே முஸ்லீம் காங்கிரசும் பெரும்பாண்மை இல்லாமல் பதினெட்டு பேருடன் தான் இருந்தார்கள். ஆனால் அதன்பின் எமது செல்வங்களான இருவர் சென்று அவர்களுடன் இணைந்து கொண்டமையால் தான் அவர்களுக்கு முதலமைச்சு கிடைத்தது.

அது கிடைத்துவிட்ட ஒன்று அதை மீண்டும் எவ்வாறு பெற முடியும். மாகாணசபை முதலமைச்சு என்பது கணக்குப் போடுகின்ற விடயமல்ல. அது மிகவும் சாதுரியமாக முன்னெடுக்கப்பட வேண்டியது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் தான் நாம் எமது மக்களை மனதில் நிறுத்தி இந்த அமைச்சுகளை பெற்றோம் இவை மிகவும் நிதானமாக எமது தனித்துவத்தை இழக்காமல் பெற்றவை.

எனவே எமது பிரதேசங்களில் இருக்கின்ற விவசாயப் பிரச்சினைகள் வெறுமனே மாகாணசபை அமைச்சின் மூலம் தீர்க்கப்பட முடியாதவை. இவற்றை நாம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அது மட்டுமல்லாது எமது தலைவர் இந்தியாவுடன் தொடர்பு கொண்டு பாரிய உதவிகளை மேற்கொள்வதற்கும் எத்தனித்திருக்கின்றார். எனவே அதன் ஆதரவுடனும் நாம் பல முயற்சிகளை மேற்கொள்வோம். இதற்கு எமது மக்களும் ஆதரவாக இருக்க வேண்டும். நாம் முயற்சிகள் மேற்கொள்வோம். ஆனால் கடவுளின் ஆசியுடன் தான் அனைத்தும் இடம்பெற வேண்டும். எனவே எதற்கும் அவசரம் கூடாது. அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாகவே இடம்பெறும். அதற்குள் அவசரப்பட்டு வந்து கூறினார் எதுவும் செய்யவில்லை என்ற வெளிப்பாடுகளை ஏற்படுத்தி விட வேண்டாம். சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இதன் மூலம் எமது மக்களுக்கு சேவைகள் மேற்கொள்வோம். என்று தெரிவித்தார்.

20150314_152013 20150314_153319 20150314_132629 20150314_123026 20150314_123006