செய்திகள்

மக்கள் ஆணைக்கு முரணாகவே முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சியமைத்துள்ளது

முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கில் புதிய ஆட்சியமைப்பானது நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது என்று சம்பந்தன் பி.பி.சிக்குத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அரசாங்கக் கூட்டணியுடன் சேர்ந்து கிழக்கில் ஆட்சியமைத்துள்ளதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படுகின்றது என்றார்.

கிழக்குமாகாண சபையில் 2012ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போது மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆட்சியை அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கக் கூட்டணியிலும் பார்க்க 6 ஆயிரத்து 100 வாக்குகளையே குறைவாகப் பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 11 ஆசனங்களை வென்றிருந்ததாகக் கூறிய சம்பந்தன், தங்களை விட 61 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ், 7 ஆசனங்களையே வென்றிருந்தது என்றும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 2 மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முதலிடத்தைக் கைப்பற்றியிருந்ததாகவும் எந்தவொரு மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.