செய்திகள்

மக்கள் கடும் எதிர்ப்பு: புதுக்குடியிருப்பில் காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டது

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள 42 குடும்பங்களுக்குச் சொந்தமான 38ஏக்கர்  உறுதிக்காணிகளை படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்புக்களால் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதிக்கு இன்று புதன்கிழமை காலை வருகை தந்திருந்த கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நிலஅளவைத்திணைக்கள அதிகாரிகள் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீடு செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

இச்சமயத்தில் அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தமது கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டனர். இதனால் காணிகளை அளவீடு செய்யும் முயற்சி தடுக்கப்பட்டு அதிகாரிகள் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
25
இதன்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், மாகாணசபை உறுப்பினர்களான ரவிகரன், அன்டனி ஜெகநாதன் ஆகியோரும் அவ்விடத்தில் பிரசன்னமாகி பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை அளவிடும் செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை இறுதி யுத்தத்தினால் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கும் தாம் இதுவரையில் தமது சொந்த நிலங்களில் முழுமையாக மீள்குடியேற்றிருக்கப்பட்டிருக்காத நிலையில் தமது நிலங்களை இராணுவத்தினரின் தேவைக்காக சுவீகரிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த நிலைமை தொடரவேண்டுமா? எமது வாழ்க்கைக்கான நிலைமைகளை உறுதிப்படுத்துங்கள் என்பதை வலியுத்தி உண்ணாவிரதப்போராட்டமொன்றை பிரதேச செயலகத்தின் முன்னால் காலை முதல் மேற்கொண்டிருந்தனர்.

போராட்டத்தின் இறுதியில் பொதுமக்களால் தமது காணிகளை சுவீகரிப்பதனை தடுத்து நிறுத்தமாறு கோரும் மகஜரொன்று பிரதேச செயலாளர் பிரணவனிடம் கையளிக்கப்பட்டது.

இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்து வெளியிடுகையில், பாதுகாப்பு அமைச்சானது இராணுவத்தினரின் தேவைக்காக காணிகளைப் பெற்றுக்கொள்வதற்காக  காணிச்சட்டம் 30ஏ பிரிவின் பிரகாரம் பொதுத்தேவைக்கான அவசர அடிப்படையில் சுவீகரிப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்த தகவல்கள் காணி அமைச்சிடம் வழங்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் மாவட்ட நில அளவையாளர் அதிகாரிகளை பயன்படுத்தி முல்லைத்தீவு மக்களுக்கு சொந்தமான உறுதிக்காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளை கடந்த செவ்வாய்கிழமை முதல் முன்னெடுத்து வருகின்றது.

யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மக்கள் மீண்டும் தமது சொந்த நிலங்களில் முழுமையாக மீளக்குடியேறியிருக்காத நிலையில் அவர்களுக்கு சொந்தமான உறுதிக்காணிகளை சுவீகரிப்பதானது மக்களின் வாழும் உரிமையை பறிக்கும் செயலாகும். இது மிகவும் கண்டத்திற்குரியதொன்றாகும்.

பொது தேவையென்ற பெயரிலும் அரசாங்த்திற்கான அவசர தேவையென்ற பெயரிலும் இராணுவத்தினருக்காக பொதுமக்களுக்குச் சொந்தமான உறுதிக்காணிகளை சுவீகரிக்க முடியாது. ஆகவே அரசாங்கம் இதனை கருத்திற்கொள்ளவேண்டும். பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை அபகரிப்பதைத் தடுத்து நிறுத்துவதோடு சொந்த நிலங்களில் மீளவும் குடியேறுவதை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உறுதி செய்யவேண்டும் என்றார்.

இதேவேளை நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை முதல் இன்று வியாழக்கிழமை வரை புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், விசுவமடு, நாயாறு பிரதேசங்களில் காணிகள் அரசாங்கத்தின் அவசர தேவைக்காக சுவீகரிக்கப்படுமென குறித்த காணிகளின் உரிமையாளர்களுக்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நேற்று முன்தினம் முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடிப் பகுதியில், 1971 ஆம் ஆண்டு படித்த வாலிபர் திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த பதினெட்டு ஏக்கர் காணிகள்  காணிகளை சுவீகரிப்பதற்காக நில அளவையாளர் அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது தகவல் அறிந்த பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா சகிதம் ஒன்று கூறி இராணுவ அதிகாரிகள், நில அளவையாளர்கள் ஆகியோருடன் உரையாடிதன் காரணத்தால் அச்செயற்பாடு இடைநிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
R-06