செய்திகள்

மக்கள் குடியிருக்காதபோது தயாரிக்கப்பட்டதால் செல்லுபடியற்றது

மக்கள் குடியிருக்காத காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பான சுற்றுச்சூழல் அறிக்கையை, தற்போது செல்லுபடியானதாகக் கருத முடியாது என சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் சம்பூர் பகுதிக்குச் சென்றிருந்த மின் சக்தி அமைச்சர், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பாதுகாப்பான முறையில் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

எனினும், அனல்மின் நிலையம் நிர்மாணிக்கப்படும் பகுதி, மக்கள் குடியிருப்பை அண்மித்துக் காணப்படுவதால், நேரடித்தாக்கம் ஏற்படக்கூடும் என சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுபற்றி சூழலியலாளர் கலாநிதி பா.தனபாலன் தெரிவித்ததாவது,

அனல் மின் நிலையத்தால் அந்தப் பிரதேசத்தினுடைய கடல் வளத்தில் பாதிப்பு ஏற்படப்போகிறது. அந்தப் பிரதேசத்தின் நிலம் நல்ல ஒரு வளமான விவசாய நிலம். அந்த நிலங்கள் பாதிப்படையப்போகின்றன. மக்களின் அடிப்படைப் பொருளாதார வலு சிதைவடையப்போகிறது. மிக விரைவாக, மிக குறுகிய காலத்தில் இவ்வாறான தாக்கம் ஏற்படப்போகிறது. நீண்ட கால நோக்கில் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கமுடியாத ஒரு சூழல், வெப்பநிலை அதிகரிக்கின்ற ஒரு சூழல், அந்த பிரதேசத்தின் வளங்கள் எல்லாம் சிதைவடைகின்ற சூழல் ஏற்பட்டு மிகப் பெரிய பாதமான விளைவை எற்படுத்தப்போகிறது.

போர்ச்சூழலால் இருப்பிடங்களைவிட்டு வெளியேறி, பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் சம்பூர் மக்கள் மீண்டும் தமது சொந்த நிலங்களில் குடியேறியுள்ளனர்.

தமது பிரதான ஜீவனோபாயங்களான, விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி போன்றவற்றுக்கு அனல் மின் நிலையத்தினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

n10