செய்திகள்

மங்களா- பிச்சக்காரர் தொடங்கிய இந்தியாவின் முதல் வங்கி

பீகார் மாநிலம் கயா நகரில்  பிச்சை எடுக்கும் சுமார் 60 பிச்சைக்காரர்கள் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அந்த கூட்டத்தில் பிச்சை எடுப்பவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு வங்கி ஒன்று தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த மாதம் பிச்சைக்காரர்களின் வங்கி தொடங்கப்பட்டது. இந்த வங்கிக்கு மங்களா வங்கி என்று பெயரிடப்பட்டுள்ளது.  மங்கள கவுரி ஆலய பகுதியில் அதிக பிச்சைக்காரர்கள் உள்ளதாலும், அந்த கடவுள் பெயராலும் வங்கிக்கு பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக பிச்சைக்காரர்கள் கூறினர்.

இந்த வங்கியின் மேனேஜராக ராஜ்குமார் மஞ்ச்கி என்ற பிச்சைக்காரர் பதவியேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறு ம்போது, “இந்த வங்கியில் தற்சமயம் 40 பேர் உறுப்பினர்களாக இருக்கிறோம். நாங்கள் ஒவ்வொருவரும் வாரந் தோறும் செவ்வாய்க்கிழமை ரூ.20 டெபாசிட் செய்வோம். அதன் மூலம் வாரத்துக்கு ரூ.800 கிடைக்கும்.

இந்த மாத ஆரம்பத்தில் என் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது எனது மகளுக்கும் எனது தங்கைக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அவர்களின் சிகிச்சைக்காக இந்த வங்கியில் இருந்து ரூ.8 ஆயிரம் கடன் பெற்றேன். வேறு எந்த வங்கியைப் போலவும் இல்லாது, எந்த ஒரு விண்ணப்பமோ அல்லது அடமானமோ இல்லாமல் உடனடி யாக எனக்குப் பணம் கிடைத்தது. இவ்வாறு பிச்சைக்காரர்களான எங்களுக்கு இந்த வங்கி மிகப் பெரும் உதவியாக இருக்கிறது” என்றார்.

இவரது மனைவி தேவி பட்டப்படிப்பு படித்துள்ளதால் அவர் கேஷியர் பொறுப்பை வகிக்கிறார். மாலதி தேவி என்ற பிச்சைக்காரி வங்கி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு வாரம் முழுவதும் எடுக்கும் பிச்சையில் சாப்பிட்டது போக மிச்ச பணத்தை செவ்வாய்தோறும் வங்கியில் கட்டி விட வேண்டும் என்று பிச்சைக்காரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.