செய்திகள்

மட்டக்களப்பின் இனவிகிதாசாரம் மாற்றப்படுகின்றது: அரியம் எம்.பி. குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் மட்டக்களப்பில் தமிழர்களின் விகிதாசாரம் குறைய வாய்ப்புள்ளது. இங்கு தமிழர்களின் காணிகளை கபளீகரம் செய்வதில் மட்டக்களப்பிலுள்ள பௌத்த மதகுரு ஒருவரே முன்னின்று செயற்படுகின்றார்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கிழக்கில் இடம் பெற்றுவரும் திட்டமிட்ட காணி அபகரிப்பு, சிங்களக் குடியேற்றம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

அரசின் நோக்கம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து தமிழர்களின் விகிதாசாரத்தைக் குறைப்பதாகும். இதனொரு அங்கமாகவே வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் துண்டாடும் வகையில் தென்னை மரவாடி கிராமத்தைப் பயன்படுத்துகின்றது. இது வடகிழக்கு தமிழர்களின் பூர்வீக பூமியாகும். இப்பூமியை துண்டாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்கப்போவதில்லை.

தென்னை மரவாடியில் பூர்வீகமாக 300 தமிழ் குடும்பங்கள் வாழ்ந்தன. 1987 இல் அவர்கள் இடம்பெயர்ந்தனர். மீள் குடியேற்றம் செய்யும்போது இங்குள்ள காணிகள் பெரும்பான்மை மக்களுக்காக ஆக்கிரமிக்கப்படுகிறது. வட கிழக்கு தாயகம் எனும் நிலப்பரப்பை இல்லாமல் செய்யும் முயற்சியே தென்னைமரவாடி காணி அபகரிப்பு விடயமாகும்.

கிழக்கில் தமிழர்கள் கூடுதலாக வாழ்ந்தனர். சிங்களப் பேரினவாதம் அங்கு திட்டமிட்ட வகையில் தமிழர்களின் விகிதாசாரத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் படி தமிழர்கள் 6 இலட்சத்து 17 ஆயிரத்து 295 பேரும் முஸ்லிம்கள் 5 இலட்சத்து 69 ஆயிரத்து 738 பேரும் சிங்களவர்கள் 3 இலட்சத்து 59 ஆயிரத்து 136 பேரும் ஏனைய இனத்தவர்கள் 5 ஆயிரத்து 212 பேரும் உள்ளனர்.

இதன்படி தமிழர்கள் 39.79 வீதமும் முஸ்லிம்கள் 36.72 வீதமும், சிங்களவர்கள் 23.15 வீதமும் ஏனையவர்கள் 0.34 வீதமும் ஆகும். கடந்த காலங்களில் சிங்களக் குடியேற்றத்தில் தப்பிய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டமே இருந்தது. தற்போது இங்கும் குடியேற்றங்கள் இடம்பெற்றுவருகின்றன. இங்குள்ள பௌத்த துறவி ஒருவரே முன்னின்று செயற்படுகின்றார். இவர் மதபோதனைகள் செய்வதில்லை. எல்லைக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றங்களையே செய்துகொண்டிருக்கின்றார்.

மட்டக்களப்பில் வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சின்னவத்தை கிராமத்தில் அங்குள்ள இன்னுமொரு துறவியுடன் இணைந்து கொண்டு தமிழர்களின் காணிகளைப் பிடிப்பதும் அதேபோல் பட்டிப்பளை பிரதேசத்தில் கெவுளியா மடுவில் புதிய விகாரைகளை அமைத்து புதிய குடியேற்றங்களை செய்வதில் தீவிரமாகவுள்ளார். இதன் மூலம் இங்குள்ள தமிழர்களின் விகிதாசாரத்தை குறைப்பதே இவரது நோக்கமாகும்.

அரசு வடகிழக்கிலுள்ள தமிழர்களின் விகிதாசாரத்தை எவ்வாறு குறைக்கலாம் என்பதில் நன்கு திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றது. இவ்வாறான சிங்கள மயப்படுத்தலுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.